சண்டேஸ் அண்ட் சைபிள்



ஒரு படம் ஒரு ஆளுமை

போரில் ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டதாக குற்றவுணர்வில் வாழும் போர் விமானி பியருக்கு, அச்சம்பவம் தவிர்த்து பிற நினைவுகள் மறந்துபோகின்றன. ரயில் நிலையத்தில் 12 வயதான சைபிள் என்ற சிறுமியைச் சந்திக்கிறான்.

ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கும் அவளின் தந்தை பின்னாளில் சைபிளைக் கைவிட்டு விடுகிறார். ‘உன் தந்தைதான் என்னை அனுப்பினார்’  என்று  பொய்  சொல்லிபழகுகிறான் பியர்.  விடுதிக் காப்பாளரிடம் தன்னை சைபிளின் தந்தை என்று பொய் கூறி, அவளை வெளியே அழைத்துச் செல்கிறான்.

ஞாயிறுதோறும் சைபிளுடனான பொழுதுகள் பியரை உற்சாகப்படுத்துகின்றன. சைபிளுடனான உறவு பியரின் குற்ற உணர்வை நீக்குகிறது.  பியரின் காதலிக்கு  இந்த  விஷயம்  தெரியவர, பியருக்கும்  சைபிளுக்கும்  இடையேயான  உறவு என்ன ஆனது  என்பதே  மீதிப் படம்.  ஒரு குழந்தையுடனான உறவு ஒரு இளைஞனை எப்படி மீட்டெடுக்கிறது என்பதை மிக எதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் சர்ஜி போர்
கினான்.  சிறந்த  வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற படமிது.
 
ரோல்தால்

‘‘குழந்தைகளுக்குக் கதை எழுத வேண்டுமானால் கைகளைத் தரையில் ஊன்றி உலகை தவழ்ந்து பார்க்க வேண்டும்’’ என்கிற ரோல்தால் குழந்தை களுக்கான எழுத்தாளர்களில் தலை சிறந்தவர்களில் ஒருவர். செப்டம்பர் 13, 1954ம் ஆண்டு இங்கிலாந்தின் வேல்ஸில் பிறந்த ரோல்தால் உறைவிடப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவருக்கு  தாய்தான் ஒரே ஆதரவு.

ஞாயிறுதோறும் வீட்டுக்கு கடிதம் எழுதச்சொன்ன பள்ளியின் விதியால் தன் அம்மாவிற்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார். தனது அம்மா மரணிக்கும் வரை, சுமார் 32 ஆண்டுகள் ரோல்தால் கடிதம் எழுதியிருக்கிறார்.  இளம் வயதில் தனக்கான துறை எழுத்து என்பதைத்  தீர்மானித்து  குழந்தைகள்  இலக்கியம்  சார்ந்து இயங்கத் தொடங்கினார். இவரின் நூல்கள் 25 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.

புத்தகங் களின் மூலம் வரும் வருமானத்தைக் குழந்தைகளின் நலனுக்காகச்  செலவு செய்ய அறக்கட்டளையை  நிறுவியவரின்  எழுத்தில் ‘மட்டில்டா’, ‘சார்லி அண்ட் த சாக்லேட்  பேக்டரி’,  ‘த  பிஎஃப்ஜி’  ஆகிய  நூல்கள் முக்கியமானவை. ரோல்தால் 1990-இல்  காலமானார்.

லிஜி