சென்னை சீக்ரெட்ஸ்சென்னை மாநகராட்சி

1919  ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சி புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 50 உறுப்பினர்கள் கொண்ட சபை உருவாக்கப்பட்டது.இதில், மெட்ராஸ் முப்பது வட்டமாகப் பிரிக்கப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதி இருபது உறுப்பினர்களில் ஒன்பது இடங்கள் முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டன.

பதினோரு பேர் வெளி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக முன்மொழியக் கோரியது இச்சட்டம். இப்படித்தான் நீதிக்கட்சியைச் சேர்ந்த சர்.பி.தியாகராயச் செட்டியார் முதன் முதலாக  தலைவரானார். பின்னர் 1933ல் சபைத் தலைவரை மேயர் என அழைக்கும் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவைக் கொண்டு வந்தவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அண்ணாமலைச் செட்டியாரின் மகன் குமாரராஜா முத்தையா செட்டியார் ஆவார். இவரே முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிறகு, மூன்றாண்டுகள் கழித்து துணைமேயர் பதவி உருவாக்கப்பட்டு, முதல் துணை மேயராக பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸை அடுத்துள்ள சிற்றூர்கள் இணைக்கப்பட்டு ஐம்பது வட்டங்களாக ஆக் கினர். பின்னர் 1959ல் நூறு வட்டங் களாக மாநகராட்சி மாறியதும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அ.பொ.அரசு முதல் திமுக மேயராக ஆனார். தற்போது 15 மண்டலங்கள், 200 வார்டுகள், 200 கவுன்சிலர்களுடன் இயங்கி வருகிறது கிரேட் சென்னை மாநகராட்சி!

(முற்றும்)

பிகே