முத்தாரம் நேர்காணல்



“அரசின் தவறை அடிப்படைவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்!”

நேர்காணல்:
லெட்டா டெய்லர், மனித உரிமை ஆராய்ச்சியாளர்

கிர்கிஸ்தானில் தீவிரவாதம் எப்படிப்பட்ட பிரச்னையாக உள்ளது?  

பிரச்னை தொடங்கியது 2003 ஆம் ஆண்டுதான். 2,600-5,000 மத்திய ஆசியர்கள்(764 கிர்கிஸ்தானியர்கள்) இராக், சிரியா, ஆஃப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாதக்குழுவில் இணையச் சென்றனர். பெண்கள், குழந்தைகள், சமையல்காரர்கள், மெக்கானிக்குகள் இதில் அடக்கம். கிர்கிஸ்தானின் தலைநகரான பிஸ்கெக்கில் நடைபெற்ற தாக்குதல் உட்பட ஏழு தாக்குதல்களில் இவர்களின் பங்குள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் களிலிருந்து மக்களைக் காக்க அரசு என்ன செய்துள்ளது?  

அரசு, இணையத்தில் வீடியோ பார்ப் பவர்களையும் நூல்களைப் படிப்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலுள்ள தீவிரவாத சட்டங்களைப் போல  கிர்கிஸ்தானில் வலுவான சட்டங்கள் இல்லை.

சமூகவலைத்தளத்தில் நண்பர்களுடன் தீவிரவாதம் பற்றி விவாதிக்கும் வெகுளி இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் என்ன பிரயோஜனம்? மனித உரிமை கண்காணிப்பகம் இதுகுறித்து அரசிடம் மனு அனுப்பியுள்ளது.
 
அரசு குறிப்பிட்ட இனக்குழுக்களை குறிவைக்கிறதா?  

கிர்கிஸ்தானில் பதினைந்து சதவிகிதமுள்ள உஸ்பெக் சிறுபான்மையினரை அரசு குறிவைத்து சிறையிலடைத்து வருகிறது. மதநம்பிக்கை கொண்டுள்ள பலரையும் அரசு கண்காணிப்பில் வைத்துள்ளதை உஸ்பெக் இனத்தவரிடம் பேசியபோது உணர்ந்தோம். 2010 ஆம் ஆண்டு உஸ்பெக் இனத்தவருக்கும் கிர்கிஸ்தானியர்களுக்கும் நடந்த கலவரத்தில் 400 பேர் பலியான சம்பவம் இதற்கு முக்கியக்காரணம்.
 
சீர்திருத்த நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும்?  

அரசு உள்நாட்டுத் தீவிரவாதம் என்ற பெயரில் எளிய மக்களை அநீதியாக கைதுசெய்வதை நிறுத்தவேண்டும். அரசின் மூர்க்கமான கைதுகளை ஐஎஸ்ஐஎஸ் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டு “நீங்கள் தேர்ந்தெடுத்த அரசின் நிலையைப் பாருங்கள்” என்று கூறி தன் குழுவிற்குத் தேவையான ஆட்களை எளிமையாக கையகப் படுத்தி வலுவாகி வருகிறது.

எழுபதிற்கும் மேற்பட்ட மக்களிடம் பேசியதில் எந்நேரத்திலும் கதவு தட்டப்பட்டு வாரண்ட்டுடன் வரும் போலீஸ் மூலம் தவறான சாட்சியங்களின் ஆதாரமாக வைத்து சிறையில் தள்ளப்படுவோம் என்கிற பயம் அவர்களின் மனதில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஐ.நா அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளின்  தலையீடு  இப்பிரச்னையிலிருந்து கிர்கிஸ்தானைக் காப்பாற்றும் என நம்புகிறேன்.
 
தீவிரவாதம் குறித்த உங்கள் ஆய்வறிக்கையைப் பற்றி கூறுங்கள்?
 
கிர்கிஸ்தான் 299-2 சட்டப்படி, தீவிரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவரை 3-10 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். வீடியோ, நோட்டீஸ் உள்ளிட்டவற்றை அவர் வைத்திருந்தாலே அவரை தீவிரவாதி என உறுதிசெய்யப் போதுமானது. சுதந்திர மான பேச்சுரிமையை மேற்கூறிய சட்டம் தடை செய்வதால், அதில் மாற்றம் செய்ய கிர்கிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.

வரும் ஜனவரியில் புதிய சட்டம் அமுலாக வாய்ப்புள்ளது என்றாலும் உறுதியாக இதனைக் கூறமுடியாது. அரசு தீவிரவாதத்தின் பெயரில் எதிர்க்கட்சிகள், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்களை, சாதாரண  மக்களைக்  கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.

கைதுசெய்யும் பலரையும் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவல்துறையிடம் ஒற்றை ஆதாரம் கூட கிடையாது. அரசின் தீவிரவாத சட்டத்தை எதிர்த்து
வாதிடும் வழக்குரைஞர் களையும் கிர்கிஸ்தான் அரசு கைது செய்து வருகிறது. தீவிரவாதி என குறிப்பிடும் போலீசின் ஆதாரங்களை இணையத்தில் அரசு வெளியிட்டாலும் அவை முழுமையானவையல்ல.

நன்றி: hrw.org

தமிழில்: ச.அன்பரசு