முத்தாரம் நேர்காணல்



இந்தியர்களின் முன்னேற்றத்தை தடுத்தது இங்கிலாந்து அரசுதான்!

நேர்காணல்:உட்சா பட்நாயக், பொருளாதார வல்லுநர்


ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக்காலத்தில் 44.6  ட்ரில்லியன் டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்றுள் ளனர் என கணக்குப் போட்டுக் கூறியுள்ளார் பொருளாதார வல்லுநரான உட்சாபட்நாயக். அண்மையில் வெளியான கொலம்பியா பல்கலைக்கழக கட்டுரை நூலில் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லத் தயங்கிய கணக்கை உடைத் துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் உட்சா பட்நாயக்.  

இங்கிலாந்து 45 ட்ரில்லியன் டாலர்களை கொள்ளையடித்தது என எப்படி உறுதி யாகக் கூறுகிறீர்கள்?  

1765 -1938 காலகட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு இந்தியாவிலிருந்து கிடைத்த லாபம் 45 ட்ரில்லியன் டாலர்கள். இத்தொகை இந்தியாவுக்கு கிடைத்திருந்தால் வளரும் நாடாக இன்றும் தடுமாறிவரும் நிலை மாறியிருக்கும். 1900-46 காலகட்டத்தில் மக்களின் தனிநபர் வருமானம் முன்னேறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் அதற்கு முந்தைய முப்பதாண்டுகளில் இந்தியாவின் ஏற்று மதிப் பொருட்களில் கிடைத்த லாபம், உபரி அதிகம். லாபத்தில் இங்கிலாந்து செழிக்க, இந்தியர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் இறந்தனர் என்பதே வரலாற்று உண்மை.  

அன்றைக்கு இந்தியர்களின் சராசரி ஆயுள் 22 ஆண்டுகள். (1911). அன்று சந்தையில் குவிந்த தானியங்களை மக்கள் வாங்க இயலாதபடி ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டன. 1946 ஆம் ஆண்டு இந்தியர் சாப்பிட்ட தானியங்களின் அளவு வெறும் 137 கி.கி மட்டுமே. இந்தியா
அனுபவித்த வறுமை நிலையில் உலகில் இன்று எந்த நாடும் இல்லை.
 
இந்தியாவிலிருந்து வெளியேறிய பணம் என்னவானது? எதற்காக பயன்படுத்தப்பட்டது?  

இங்கிலாந்தின் ஜிடிபியில் அன்று ஆசியா, மேற்கிந்திய தீவு களிலிலிருந்து கிடைத்த லாபம் 6%. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இங்கிலாந்து முதலீடு செய்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இந்தியா அதனை ஈடுசெய்தது. இந்தியாவின் உற்பத்தி லாபம் நமக்கே கிடைத்திருந்தால் ஜப்பான் 1870 ஆம் ஆண்டு அடைந்த பொருளாதார உயர்வை இந்தியா முன்பே அடைந்திருக்கும்.
 
சீனா, ஆப்பிரிக்காவை காலனியாக்க முயல்கிறது என்கிறார்களே?  

சீனா மட்டுமல்ல, இந்தியா அங்கு முதலீடு செய்தாலும் இதுபோல குற்றச்சாட்டுகள் வரும். இவை முதலாளித்துவ நாடுகள் செய்த கொள்ளைகள், குற்றங்களை மறைக்க பயன்படுத்தும் வார்த்தைகள். சீன, இந்திய தொழிலதிபர்கள் பலர் ஆப்பிரிக்காவில் தொடங்கும் தொழில்களின் மூலம் வளர்ச்சி கிடைக்கிறதோ இல்லையோ, அங்கு வேலையின்மை குறைவது முக்கியம்.
 
காலனிய காலத்திலிருந்து இந்திய ஜவுளித்துறை மீதான வரி, இறக்குமதி தடை போன்றவற்றிலிருந்து இந்தியா கற்றுக்கொண்டது என்ன?  

இந்தியாவின் உள்நாட்டு மார்க்கெட்டை முறைப்படுத்தி மக்களின் தேவைகளைத் தீர்க்க முயற்சிப்பது  அவசியம். தீவிர பனிக்காலம் உள்ள நாடுகள் பல்வேறு உணவு தானியங்களுக்கு பிறநாடு களையே நம்பியுள்ளன.

அவர்களின் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள 12 ஆயிரம் பொருட்களில் 70% பொருட்கள் பிறநாடுகளிலிருந்து இறக்குமதியா னவை. மேலும் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் ஆசிய ஜவுளிகளைத் தடைசெய்வது குறித்த சட்டங்கள் ஏதும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்து இந்தியாவிடம் பெற்ற பணத்தை திருப்பித்தர விரும்புகிறீர்களா?  

காலனியாதிக்கத்தில் தங்களை முன்னேற்றிக்கொண்ட  அனைத்து வல்லரசு நாடுகளும் தங்களின் காலனி நாடுகளுக்கு சம்பாதித்த பணத்தை திரும்ப வழங்குவதே நீதியான செயல்பாடு.

- நன்றி: Ajay Srivatsan, livemint.com

தமிழில்: ச.அன்பரசு