பாச மலர்இந்தியாவில் கனவுகளைத் துரத்திக்கொண்டு ஓடுபவர்களுக்குத் தடையாக இருப்பது வறுமை. அதனால் தான் பல பெண்கள் தங்களின் விளையாட்டுக் கனவைத் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கின்றனர். எல்லா தடைகளையும் உடைத்து தன்னம்பிக்கையுடன் போராடுபவர்களை வறுமையால் எதுவும் செய்யமுடிவதில்லை. அப்படியான தன்னம்பிக்கை மனுஷி தான் பூனம் சொனுனே.

இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் பெயரும் பூனம் சொனுனேதான். சகோதரியின் திருமணச் செலவுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார் இந்த பாசமலர். பதக்கத்துக்காக ஓடுபவர் களுக்கு மத்தியில் பாசத்துக்காக ஓடிய பூனத்தை இணைய உலகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி வருகிறது.

மகாராஷ்டிராவில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பூனம். சில நாட்களுக்கு முன்பு அவரின் அக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. தந்தையின் சொற்ப வருமானத்தில் திருமணத்தை நடத்துவது கடினம். இந்தச் சூழலில் ‘புனே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்’ என்ற அறிவிப்பு வெளியானது.

போட்டியில் கலந்துகொள்ள முடிவு செய்த பூனத்திற்கு போதுமான பயிற்சி இல்லை. இதைக் கேள்விப்பட்ட  தடகள வீரர் விஜேந்திர சிங் பூனத்திற்குப் பயிற்சி கொடுத்தார். 19 வயதான பூனம் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை தட்டிவிட்டார். பரிசாக கிடைத்த தொகையை அப்படியே தந்தையிடம் கொடுத்துவிட்டார். இனி பூனத்தின் அக்கா திருமணம் மகிழ்ச்சியாக அரங்கேறும்.

இதற்கு முன் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய ஜூனியர் தட களப் போட்டியில் கலந்துகொண்டு, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் பூனம். அக்காவின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை பூனத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆம்; மார்ச்சில் நடைபெறும் தெற்கு ஆசிய போட்டிகளில் பங்குபெறுவதற்காக பூனம் தேர்வாகியுள்ளார். அப்போதுதான் அவரின் அக்காவின் திருமணம்.