கால்பந்து கடவுள்



அறுபதுகளில் உலகம் முழுவதும் அறிந்த ஒரே நபர் பீலே. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர். மிக இளம் வயதில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற  வீரர்.  1958, 1962, 1970 என மூன்று முறை உலகக் கோப்பையை பிரேசிலுக்காக வென்று தந்தவர்.  694 லீக் போட்டிகளில் விளையாடி 650 கோல் அடித்தவர்.

உள்ளூர், சர்வதேசப் போட்டிகள் உட்பட 1363 போட்டிகளில் பங்கேற்று 1281 கோல்களை அடித்தவர். இது கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது. தான் விளையாடிய காலத்தில் உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய ஒரே விளையாட்டு வீரர்... என பீலேவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பிரேசிலில் எளிமையான குடும்பத்தில் அக்டோபர் 23, 1940 அன்று பிறந்தார் பீலே. விஞ்ஞானி எடிசனின் நினைவாக இவருக்கு எட்சன் அரன்டஸ் டோ நசிமென்டோ என்று பெற்றோர்கள் பெயர் வைத்தனர். இவரின் தந்தை டொண்டின்ஹோ கூட கால்பந்து விளையாட்டு வீரர் தான். சிறு வயதில் எட்சனுக்குப் பிடித்த கோல் கீப்பர் பிலே. பள்ளியில் படிக்கும்போது எட்சன் அவரை பீலே என்று தவறுதலாக  உச்சரிப்பார். இதை அவருடன் படிக்கும் மாணவர்கள் கிண்டலடிப்பார்கள். எட்சனை கேலிக்காக பீலே என்று அந்த மாணவர்கள் அழைப்பார்கள்.

நாளடைவில் அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது.  ‘பீலே’ என்றால் ஹீப்ரு மொழியில் அதிசயம் என்று அர்த்தம். ஆம்; இவர் ஒரு கால்பந்து அதிசயம்தான்.சிறுவனான பீலேவை வறுமை வாட்டியது. கால்பந்து விளையாட காலணி கூட வாங்க முடியாத நிலை. செய்தித்தாள்களைச் சுற்றி பந்து போல செய்து அதில் கால்பந்து விளையாடுவார்.

பள்ளிக்குப் போய் வந்த பிறகு வருமானம் ஈட்ட ஷூ பாலீஷ் போடுவார்.  டீக் கடையில் வேலை செய்வார். உள்ளூரில் தன்னைவிட பெரியவர்களுடன் கால்பந்து விளையாடுவதுதான் பீலேவின் வழக்கம். அப்படியான ஒரு ஆட்டத்தில் 10 கோல் அடித்திருக்கிறார். பீலேவின் புகழ் ஊரெங்கும் பரவியிருக்கிறது.

இதைக் கேள்விப்பட்ட ‘சான்டோஸ்’ அணி தங்கள் டீமில் விளையாட பீலேவை அழைத்தது. அப்போது அவருக்கு வயது 15. சான்டோஸ் கிளப்பிற்காக விளையாடிய முதல் போட்டியிலேயே கோல் அடித்து எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். பிரேசில் முழுக்க பீலேவைப் பற்றித்தான் பேச்சு.  17 வயதிலேயே பிரேசிலின் தேசிய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

பீலேவின் புகழ் பிரேசிலைத் தாண்டி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட்  போன்ற சர்வதேச அணிகளில் விளையாட பீலேவுக்கு அழைப்பு வந்தது. இதுபோன்ற அணிகளில் விளையாட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு கால்பந்து வீரரின் பெருங்கனவு.

இந்த அணிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைத்துவிட்டால் கை நிறைய பணம், சொகுசு வாழ்க்கை, ஆடம்பரம் என வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஆனால், அனைத்தையும் நிராகரித்தார் பீலே. தான் சிறுவயதிலிருந்து விளையாடிய சான்டோஸ் அணியிலேயே தொடர்ந்தார். பணத்துக்காகவும் புகழுக்காகவும் விளையாடாமல் தேசத்துக்காக விளையாடியது இவரது தனிச் சிறப்பு.

தவிர, இரண்டு கால்களாலும் மின்னல் வேகத்தில் பந்தை உதைப்பதில் வல்லவர். `ஃப்ரீ கிக்’, பெனால்டி ஷாட்களில் இவரை மிஞ்ச இன்னொருத்தர் பிறக்கவில்லை.  டிஃபெண்டர்களைச் கலங்கடித்து கோல்கீப்பரைப் பதற வைத்து கோலடிக்க வேண்டும் என்றே பீலே நினைப்பார். அவரைப் பொறுத்தவரை பெனால்டி மூலம் கோல் அடிப்பது கோழைத்தனம். இன்று மெஸ்ஸி போன்ற கால்பந்து வீரர்கள் செய்து காட்டும் சாகசத்தை அப்போதே செய்துகாட்டி அசத்தியவர்.

‘‘உங்களால் ஆயிரம், இரண்டாயிரம் கோல்கள் கூட அடிக்க முடியும். ஆனால், பீலேவைப் போல ஒரு கோலை அடிக்க முடியாது...’’ என்கிறார் பிரபல கால்பந்து விமர்சகர் ஒருவர்.1958-ம் வருடம் ஸ்வீடனில்  6-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது.

உலகின் மிக இளம் வயது வீரனான பீலே களமிறங்கிய முதல் உலகக் கோப்பை போட்டி அது.இறுதிப்போட்டியில் பீலே அடித்த இரு கோல்கள் உதவியுடன் பிரேசில் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது. கால்பந்து என்ற விளையாட்டு இருக்கும் வரை அதன் கடவுளாக இருப்பார் பீலே.