தங்க வாரம்



ஜப்பானில் ஏப்ரல் 29 முதல் மே 6 வரையிலான நாட்கள் ‘தங்க வாரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 29 அன்று பேரரசர் ஷோவா நினைவு தினம், அதைத் தொடர்ந்து அமைப்பு தினம், குழந்தைகள் தினம், பசுமை தினம் என்று வரிசையாக விடுமுறை நாட்கள் கட்டம் கட்டி நிற்கின்றன.

தவிர, இரண்டு விடுமுறை நாட்களுக்கு நடுவில் வரும் நாளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது ஜப்பானின் சட்டம். இதுபோக ஜப்பான் பேரரசர் அகிஹிடோ வயது மூப்பின் காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி தனது அரியணையைத் துறக்கப் போகிறார். அவருடைய இடத்துக்கு அவரின் மூத்த மகனும் இளவரசருமான நருஹிடோ வரப்போகிறார்.

மே 1-ம் தேதி அன்று ஜப்பானின் புதிய பேரரசராக அவர் முடிசூடப் போகிறார்.  இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த ஆண்டு தொடர்ந்து பத்து நாட்கள்  அரசு விடுமுறை தினங்களாக வருகின்றன.

இந்த விடுமுறையைப் பெரும்பாலான ஜப்பானியர்கள் விரும்பவில்லை  என்பதுதான் இதில் ஹைலைட். ‘‘தொடர் விடுமுறை எங்களுக்கு மகிழ்ச்சி யளிக்கவில்லை...’’ என்று 45 %  பேர் ஜப்பான் நாளிதழ் நடத்திய ஆய்வில் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சிலர் இந்த விடுமுறை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘‘எப்பவும் பிஸியாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னால் பத்து நாட்களுக்கு சும்மா இருக்க முடியாது.  வெளியில் எங்கேயாவது போக நினைத்தால் அங்கேயும் மக்கள் கூட்டம்தான் நிறைந்து இருக்கும். இந்த பத்து நாட்கள் விடுமுறை என்பது ரொம்பவே சலிப் பானது...’’ என்கிறார் ஜப்பானிய இளம்பெண் ஒருவர்.

இந்தப் பத்து நாட்களுக்கு ஸ்கூல், நர்சரி என எல்லாவற்றுக்கும் விடுமுறை. ‘‘குழந்தைகளை எப்படி சமாளிக்கப்போகிறோம்...’’ என்பதுதான் பல பெற்றோர்களின் குமுறலாக இருக்கிறது. ‘‘விடுப்பு கிடைக்குமா...’’ என்று பல நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரியிடம் சொல்லி வைத்திருக்கும் இந்திய ஊழியர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கும்.