வைரல் சம்பவம்



இடது கையில் கோழிக்குஞ்சும் வலது கையில் பணமும் இருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படம் தான் இணையமெங்கும் இப்போது வைரல். பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் அச்சிறுவன் செய்த காரியம் பலரையும் நெகிழ்வடைய வைத்திருக்கிறது.
மிசோரம் மாநிலம் சைரங் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் டெரக். தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போது எதிர்பாராதவிதமாக கோழிக்குஞ்சு ஒன்று சைக்கிளுக்குக் குறுக்கே பாய்ந்து அடிபட்டுவிட்டது.

நிலைகுலைந்து போன டெரக், உடனடியாக தான் சேமித்து வைத்திருந்த பணத்துடன் கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறான். கண்ணீர் மல்க கோழிக்குஞ்சைக் காப்பாற்றுமாறு மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கெஞ்சியிருக்கிறான். துரதிர்ஷ்டவசமாக கோழிக்குஞ்சு இறந்துவிட்டது.

இந்த நெகிழ்வுக் காட்சியை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் புகைப்படமாக எடுத்து இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது சிறுவனின் மனித நேயம். அத்துடன் டெரக்கின் கருணையைப் பாராட்டி சான்றிதழ்  கொடுத்து கௌரவித்திருக்கிறது அவன் படிக்கும் பள்ளி.