முதல் பழங்குடிப் பெண் ஐ.ஏ.எஸ்.



‘‘இடைவிடாத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் ஸ்ரீதன்யாவின் கனவை நனவாக்கியுள்ளது. அவரின் எதிர்காலத்துக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...’’ என்று அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு நடுவில் இந்த வாழ்த்துப் பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.

‘‘ஸ்ரீதன்யா சாதித்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. அவரின் வெற்றி பலருக்கும் உந்துசக்தியாக இருக்கும்...’’ என்று இன்னொரு பக்கம் புகழ்ந்து தள்ளுகிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.  இவர்களைப் போன்று பல பிரபலங்களும் தன்யாவை கொண்டாடி வருகின்றனர்.

அப்படி ஸ்ரீதன்யா என்ன சாதித்துவிட்டார்? என்று தேடினால் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் தன்னம்பிக்கை குவியல்கள். கடந்த வாரம் யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் 410-வது ரேங்க் வாங்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்ரீதன்யா.

கேரளாவின் அழகை உலகுக்கு எடுத்துக் காண்பிக்கும் வயநாடுதான் ஸ்ரீதன்யாவின் சொந்த ஊர். குருச்யா என்ற பழங்குடி இனத்தில் பிறந்த ஸ்ரீதன்யாவின் பெற்றோர்கள் இருவரும்   கூலி வேலை செய்து வருகிறார்கள். கறையான் அரித்துக் கொண்டிருக்கும் வீடு, செய்தித்தாள் வாங்கக் கூட பணமில்லாத வறுமை போன்ற பல இக்கட்டான சூழலுக்கு நடுவில்தான் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி சாதித்திருக்கிறார் ஸ்ரீதன்யா. நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் கடன் வாங்கி டெல்லி சென்று நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார்.

‘‘நான் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண். வயநாட்டில் என்னைப் போன்ற பின்தங்கிய பழங்குடி மக்கள் நிறைய பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய வெற்றியை அர்ப்பணிக்கிறேன். என் வெற்றி என்னைப் போன்ற பழங்குடி களுக்கு உந்துசக்தியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டும் ஸ்ரீதன்யா தான் கேரளாவின் முதல் பழங்குடிப் பெண் ஐ.ஏ.எஸ்.