சலூனில் ஒரு நூலகம்



அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்துக்குச் சென்று, ‘‘தி ஃபுல்லர் கட் சலூன் எங்கிருக்கிறது..?’’ என்று ஒரு குழந்தையிடம் கேட்டால் போதும். ‘‘ஃபுல்லர் கட் இப்சி நகரத்தில் இருக்கிறது...’’ என்று குழந்தைகள் பதில் சொல்வதோடு சரியான வழியையும் நமக்கு காட்டுவார்கள். அந்தளவுக்கு குழந்தைகளின் மத்தியில் பிரபலமாகிவிட்டது ‘தி ஃபுல்லர் கட்’.

பொதுவாக சிகை அலங் காரம் செய்யும் சலூன்களில் மாடல்களின் விதவிதமான ஹேர்ஸ்டைல் உடைய  புகைப்படங்கள், கவர்ச்சியூட்டும் அழகு சாதனப் பொருட்கள், ஸ்டைலான இருக்கைகள், நவீனமான உள்கட்டமைப்புகள், சுவரை மறைக்கும் ஆளுயரக் கண்ணாடிகள், எல்.இ.டி. டிவி தான் அலங் கரிக்கும். ஆனால், தி ஃபுல்லர் கட்டை குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகமாக இருக்கிறது. அதனால் தான் இந்த சலூனின் முகவரியை ஒரு குழந்தையால் கூட சரியாகச் சொல்ல முடிகிறது.

இருபது வருடங்களுக்கு மேலாக  முடிதிருத்தும் வேலையைச் செய்துகொண்டே சலூனை நிர்வகித்து வருகிறார் ரியான் கிரிப்பின்.  குழந்தைகளின் மீது பேரன்பு கொண்டவர். அந்த பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக சலூனில் இவர் உருவாக்கியதுதான் இந்த குழந்தைகள் நூலகம்.

இந்த நூலகத்துக்காக குழந்தைகளைக் கவரும் விதத்தில் பல நூல்களை சொந்தமாகவே வாங்கியிருக்கிறார் ரியான். இவரது சேவையைப் பார்த்து நூலகங்களும் மக்களும் நிறைய புத்தகங்களை அனுப்பியிருக்கின்றனர். இத்தனைக்கும் ரியான் ‘தி ஃபுல்லர் கட்'டின் உரிமையாளர் இல்லை.

ரியானின் செயல்பாடு இணையத்தில் வெளியாகி மிக்சிகன் முழுவதும் பரவ, கடையின் உரிமையாளரும் தன் பங்குக்கு  முழு ஒத்துழைப்பையும் வாரி வழங்கியிருக்கிறார்.முடிவெட்டிக் கொள்ள வரும் குழந்தைகள் தங்களின் முறைக்காக காத்திருக்கும் நேரத்தில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிக்கலாம்.

அதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முடி வெட்டிக்கொள்ள இருக்கையில் அமரும்போது ரியான் குழந்தைகளிடம் சில நூல்களை நீட்டி, ‘‘உனக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நான் கேட்கிற மாதிரி சத்தமாக வாசித்தால்  கட்டணத்தில் இரண்டு டாலரை உனக்குத் திருப்பித் தருவேன்...’’ என்பார்.

குழந்தைகள் சத்தமாக வாசித்தால், சொன்னது போலவே இரண்டு டாலரைத் திருப்பித்தருகிறார். பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. முடிவெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ‘குழந்தைகள் சரியாக வாசிக்கிறார்களா’ என்றும் கவனமாகப் பார்க்கிறார்.

பிழையாக சொற்களை வாசித்தால், சிக்கலான சொற்களை வாசிக்கத் திணறினால் அதைத் திருத்தவும் அவர் தவறுவதில்லை என்பதுதான் இதில் ஹைலைட். ‘‘சலூனுக்கு வரும் சிறுவர்கள், வளர்ந்து பெரியவர்களாகி நல்ல இடத்தை அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்...’’ என்று பெருந்தன்மையுடன் சொல்கிறார் ரியான். இந்த சலூனுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.