மருத்துவத்துறையில் ஒரு புரட்சி



அமெரிக்காவில் கடந்த வருடம் மட்டும் 1,14,000 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். சில நேரங்களில் அறுவை சிகிச்சை நடக்கும் இடத்துக்கு உடல் உறுப்பை எடுத்துக்கொண்டு போகும்போது வழியில் குளறுபடிகள் நடந்து உடல் உறுப்புகள் சரியான இடத்தை அடைவதில்லை மற்றும் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வைக்கப்
படுகின்றன. இனி தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆம்; முதன் முதலாக ட்ரோன் மூலம் சிறுநீரகத்தை எடுத்துச்சென்று சரியான நேரத்தில் நோயாளிக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். உடல் உறுப்பை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமாக இந்த ட்ரோனை ஒரு ஏர்வேஸ் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது.

ட்ரோனுக்குள் இருக்கும் மானிட்டர் உடல் உறுப்பை ஒரு நொடி கூட தவறாமல் கண்காணித்துக் கொண்டேயிருக்கும். முக்கியமாக எந்த இடத்தில், எத்தனை மணிக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டால் போதும்.

குறித்த நேரத்துக்கு முன்பாகவே கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது இந்த ட்ரோன். பால்டிமோரைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் கடந்த எட்டு வருடங்களாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார்.

கடந்த வாரம் அவருக்குத் தேவையான சிறுநீரகம் கிடைத்துவிட்டது. ஆனால், சிறுநீரகத்தை சரியான நேரத்தில் கொண்டு போய்ச் சேர்த்தால் மட்டுமே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதற்கு ஒரு சோதனை முயற்சியாகத்தான் ட்ரோனைப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பங்களுடன் வடி வமைக்கப்பட்ட அந்த ட்ரோன் 5 கிலோ மீட்டர் தூரம் பறந்து சிறுநீரகத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதை மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாகவே கருதுகின்றனர். ‘‘தானம் செய்பவரிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்பை நோயாளியிடம் கொண்டு சேர்க்கும் வேலை புனிதமானது.

இந்த வேலையை வெகு சிறப்பாகச் செய்ய இந்த ட்ரோன் சிஸ்டம் உதவுகிறது. சிறுநீரகம் சரியான நேரத்துக்கு முன்பே வந்துவிட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து நோயாளியும் குணமுடன் இருக்கிறார்...’’ என்கிறார் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஜோசப்.