என் வாழ்க்கையில் எனக்கு மூணு ராஜாக்கள்!
இசை என்பது ஒரு கடல். அதிலிருந்து வரும் ஒவ்வொரு அலைக்கும் ஒரு ஓசை உண்டு. இசையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகில் இருக்க முடியாது. எங்கும் இசை எதிலும் இசை. இந்த இசையை மக்கள் ரசிக்கும் வகையில் அமைப்பது ஒரு கலை.  அப்படிப்பட்ட இசையினை அமைக்க பல கலைஞர்கள் உள்ளனர். ஆனால் அதே இசையினை மக்கள் கூடும் இடத்தில் அவர்களின் மனசுக்கு ஏற்ப கொடுப்பது என்பது தனிப்பட்ட திறமை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்பவர்களை டி.ஜே என்பார்கள்.  பெரும்பாலும் இந்தத் தொழிலை ஆண்கள்தான் செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஈடாக பெண்களும் இந்த துறையில் மாஸ் காட்ட துவங்கி உள்ளார்கள். அதில் ஒருவர்தான் டி.ஜே தியா. தன் துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்... இந்த நிலையை அடைய பல சோதனைகளை கடந்து வந்துள்ளார்.  “என் தாய் மொழி தெலுங்கு என்றாலும், நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். கல்யாணம், குழந்தைக்கு பிறகுதான் நான் டி.ஜே. துறைக்கே வந்தேன். அதற்கு முன் பள்ளியில் ஆசிரியராகத்தான் வேலை பார்த்து வந்தேன். ஆனால் குழந்தை பிறந்த பிறகு குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் என்னால் வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதனால் வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு நான்கு வருடம் கழித்துதான் நான் டி.ஜேவாக மாறினேன்’’ என்கிறார் தியா.‘‘நான் முன்பு பார்த்து வந்த ஆசிரியர் வேலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.
என்னு டைய திறமையை பார்த்து எனக்கு துணை முதல்வராக பதவி உயர்வு கொடுக்க பள்ளி நிர்வாகம் தயாராக இருந்தது. அந்த சமயத்தில் தான் நான் கருவுற்றேன். கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. கைக்குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டிலும் யாரும் இல்லை.
நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல். அதனால் பார்த்த வந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டில் இருந்தபடி குழந்தையை இரவு பகல் பாராமல் பார்த்துக் கொள்வதே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையினை எல்லா அம்மாக்களும் சந்திப்பதுதான்.
அதை கடந்து தான் வரணும். அதற்கு எனக்கு உதவியது இசைதான். எனக்கு பாட்டு கேட்க பிடிக்கும். மேலும் வீட்டில் நான் குழந்தையுடன் இருக்கும் நேரத்தில் பாட்டு கேட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய பொழுதுபோக்கு இசை என்று மாறியது. எப்போதும் வீட்டில் ஏதாவது பாட்டு ஓடிக் கொண்டிருக்கும்.
அதை கேட்டுக் கொண்டே குழந்தை ஒரு பக்கம், வீட்டு வேலைகள் ஒரு பக்கம் என நேரம் போகும். குழந்தை வளர்ந்ததும், வேலைக்கு போக திட்டமிட்ட போது, ஏன் எனக்குப் பிடித்த இசை வழியில் செல்லக் கூடாது என்று தோன்றியது. அதுதான் என்னை டி.ஜே துறையை பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டியது.
இது குறித்து என் கணவரிடம் சொன்ன போது அவர் தான் எனக்கு முழு துணையாக இருந்தார். நானும் அவரும் இந்த துறையை பற்றி தெரிந்துகொள்ள அந்த துறையை சேர்ந்தவர்களை சந்தித்துப் பேசினோம்.
இதற்கான பயிற்சியும் மேற்கொண்டேன். அதில் ஒருசிலர் என்னுடைய ஆர்வத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஏமாற்றவும் செய்தார்கள். ஆனாலும் இதில் உண்மையாக இருப்பவர்களும் இருப்பார்கள் என்பதால் என் முயற்சியை கைவிடவில்லை.
நண்பர் ஒருவரால் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் டி.ஜே செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு எனக்கு இந்த துறையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள உதவியது. சொல்லப்போனால் என்னுடைய டி.ஜே பயணம் அங்கிருந்து தான் ஆரம்பித்தது’’ என்றவர் இந்த துறையில் அவர் சந்தித்த தடைகளை பகிர்ந்தார். ‘‘மக்களுக்கு ஏற்ற பாடல்களை போட்டு அவர்களை சந்தோஷப்படுத்துவது சாதாரணமான விஷயம் கிடையாது. மக்களை சந்தோஷப்படுத்தும் நாங்க இந்த துறையில் நிறைய அவமானங்களையும் சந்திக்க நேரிடும். அதிலும் குறிப்பாக பெண்கள். அவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைப்பார்கள். சில சமயம் இரவு நேரம் தாமதமாகும். அந்த சமயத்தில் என் கணவர்தான் என் பாதுகாப்புக்காக உடன் வருவார். என் குழந்தையுடன் கூட அதிக நேரம் செலவிட முடியாது.
என்னுடைய இந்த வேலைக்காக என் கணவர் அவரின் தொழிலை விட்டுவிட்டு எனக்கு துணையாக இருந்தார். நிறைய பயணம் செய்தோம். அந்த உழைப்புக்கு பலனாக வாய்ப்பும் வர ஆரம்பித்தது. வாய்ப்பு நம் கதவினை தட்டும் போது நிராகரிக்காமல் பயன்படுத்திக் கொள்ளணும்.
அதைதான் நானும் செய்தேன். கிளப், பிரைவேட் பார்ட்டி, கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்யாணம், பிறந்தநாள், கல்லூரிகள் என இன்று பல நிகழ்வுகளை செய்து வருகிறேன்’’ என்றவர் இந்த துறையில் சிறந்த தொழில்முனைவோர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
‘‘இதுவரை 500க்கும் மேற்பட்ட ஷோக்கள் செய்திருக்கிறேன். பெங்களூரு, திருச்சி, கோவை என நேரமில்லாமல் பல இடங்களுக்கு ஷோக்களை நடத்தி வருகிறேன். என் வளர்ச்சிக்கு மூன்று பேரை தான் சொல்லணும். என் அப்பா, கணவர் மற்றும் என் மகன். இவங்க என் வாழ்க்கையின் மூன்று ராஜாக்கள்னு சொல்லணும். இவர்கள் இல்லாமல் நான் இந்த இடத்திலே இல்லை. டி.ஜே துறையில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்.
அனைத்து பெண்களுக்கும் நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் டி.ஜே நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்லுவாங்க. எந்தத் தொழிலாக இருந்தாலும், உண்மையான உழைப்பும் நேர்மையும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்’’ என்று புன்னகை பூத்தார் தியா.
ஆனந்தி ஜெயராமன்
|