என்ன எடை அழகே!



பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர் இது!

எடை குறைக்க ஆசையிருந்தாலும் அதற்கான வழிகளாகப் பகிரப்படுகிற தகவல்கள் பலருக்கும் பீதியைக் கிளப்புகின்றன. போதாக்குறைக்கு... சோற்றையே கண்ணால் பார்க்காமல், படத்துக்காக பல கிலோ குறைத்ததாகச் சொல்கிற நட்சத்திரங்களும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் எடைக்குறைப்பு விஷயத்தை பிரமப்பிரயத்தனமாக சித்தரிக்கிற சின்னத்திரை நிகழ்ச்சிகளும் கூடுதல் பயத்தையே கிளப்புகின்றன.

எடைக் குறைப்பு தொடர்பான அத்தனை குழப்பங்களையும் மிரட்சிகளையும் தகர்த்து, அதை ஒரு சவாலான, சந்தோஷமான அனுபவமாக உணரச் செய்வதுதான் எங்கள் நோக்கம். அதற்குத்தான் வழிகாட்டப் போகிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.முதல் கட்டமாக 6 தோழிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எடையை ஏன் குறைக்க வேண்டும் என்பதற்கான அழுத்தமான காரணம் மற்றும் பின்னணியைப் பொறுத்தே அமையும் இந்தத் தேர்வு. அது சரி... எப்படி இருக்கப் போகிறது இந்த எடைக் குறைப்புப் பயணம்?

தனது ஃபிட்னஸ் நிறுவனமான ‘பாடி ஃபோகஸ்’ மூலம் தோழிகளுக்கு உதவப் போகிற அம்பிகா சேகரிடம் கேட்டோம்...
‘‘முதல் கட்டமாக ஒரு பொதுப் பரிசோதனை. அவர்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ, தைராய்டோ இருக்கிறதா என்பதற்கான சோதனை இது.
அடுத்து ‘பாடி காம்போசிஷன் அனாலிசிஸ்’ என்கிற டெஸ்ட் செய்யப்படும். அதில் சம்பந்தப்பட்டவர்களின் பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்), பி.எம்.ஆர். (பேசல் மெட்டபாலிக் ரேட்)
ஆகியவை கணக்கிடப்படும். ஒருவரது உடலில் உள்ள மொத்தக் கொழுப்பு, தசை போன்றவற்றைக் கணக்கிட்டு, அவர்களது கலோரி தேவையும் கணக்கிடப்படும்.

இந்தக் கணக்கீடுகளைப் பொறுத்து மெஷின்களின் உதவியால் கொடுக்கப்படுகிற பிசியோதெரபி பயிற்சிகள் பரிந்துரைக்கப்படும். ‘வெறும் உணவுக்கட்டுப்பாடே போதும்’ என்கிறவர்களுக்கு டயட் கவுன்சலிங்கும், ‘பயிற்சிகளும் அவசியம்’ என்பவர்களுக்கு அவற்றையும் சேர்த்தே சிகிச்சையாகக் கொடுப்போம். பிசியோதெரபியில் 5 வகை தெரபிகள் உள்ளன. இவையும் அவரவர் உடல் அமைப்பு, உடலிலுள்ள திரவம் மற்றும் கொழுப்பின் அளவு, தசைகளின் தொய்வு போன்றவற்றை வைத்தே தீர்மானிக்கப்படும்...’’
(லேசா... லேசா...)

‘குங்குமம் தோழி’ எடைக் குறைப்புத்
திட்டத்துக்காக முதல் செட்டில் தேர்வு
செய்யப்பட்டுள்ள 6 தோழிகள்...
1. எம்.ஜெயந்தி, குடும்ப நிர்வாகி, சென்னை-78.
2. எஸ்.ஜீவிதா, ரிசப்ஷனிஸ்ட், சென்னை-31.
3. பி.சந்திர கவிதா, தோட்டக்கலை அதிகாரி, தாராபுரம்.
4. லலிதா, மனிதவளத் துறை, ஆவடி.
5. டாக்டர் பிரதீபா ரவி, டென்டிஸ்ட், சென்னை-10.
6. வி.சுதீஷ்னா, தனியார் துறை, சென்னை-41.

வாழ்த்துகள்!

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினசரி நடைப் பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றுவோர், மாதம் 4 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்!