தூக்கம் A to Z



குழந்தைகளைத் தூங்க வைப்பதென்பது அம்மாக்களைப் பொறுத்த வரை மிகப் பெரிய சவால். இயல்பான குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால், துடிப்பும் துறுதுறுப்பும் அதீதமாக உள்ள
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்? எப்போது தூங்குவார்கள், எப்போது விழிப்பார்கள் என்கிற தினசரி சஸ்பென்ஸில், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் அம்மாக்களும் சேர்த்தே தூக்கம் இழப்பார்கள். என்னதான் தீர்வு?

‘ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் அற்ற, பாதகங்கள் இல்லாத தூக்க சிகிச்சை அரோமா தெரபியில் மட்டுமே சாத்தியம்’ என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக். ஆட்டிசத்துக்கும், அரோமா தெரபிக்குமான தொடர்பைப் பற்றி அவர் சொல்கிற தகவல்கள் பல அம்மாக்களுக்கு ஆறுதல் தரும்.

‘‘உடலையும் மனதையும் இணங்க வைப்பதே மூளையிலுள்ள லிம்பிக் சிஸ்டம்தான். ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு இந்த லிம்பிக் சிஸ்டம் இயல்பாக இணங்கி செயல்படாது. அதில் கோளாறு உண்டாகும் போதுதான், தூக்கம் பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்த பிள்ளைகள் தனது பாது காவலரைத் தவிர, அது அம்மாவோ, ஆயாவோ வேறு யாரையும் கண்ணோடு கண் பார்க்கப் பயப்படுவார்கள்... கூச்சப்படுவார்கள். பசியோ பயமோ, வலியோ எத்தகைய உணர்வையும் அதீத அலறலுடனேயே வெளிப்படுத்துவார்கள். ஆழ்ந்த உறக்கம் என்பது மனம் அமைதியாக இருக்கும் நிலையில் மட்டுமே சாத்தியம். ஆனால், ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு மன அமைதி இருக்காது  என்பதால், ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பார்கள். மற்ற குழந்தைகளின் சராசரித் தூக்கத்தைவிட குறைந்த நேரமே இவர்கள் தூங்குவார்கள்.

மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கிற வித்தையானது மருந்து, மாத்திரைகளினால் சாத்தியமாகாத போது, அரோமா தெரபி அதை சாத்தியப்படுத்துகிறது. சில வகை வாசனைகளை நுகரச் செய்வதன் மூலம் அவர்களது மூக்கிலுள்ள முடிக்கற்றைகள் அவற்றை கிரகித்து, மூளைக்கு அனுப்பி, அதன் விளைவாக மூளை, தூக்கத்துக்கான சிக்னலை கொடுக்கிறது. அடிக்கடி விழித்துக் கொள்ளாத, பாதி உறக்கத்தில் அலறாத தூக்கம் அவர்களை ஆட்கொள்கிறது.

கடந்த இதழில் தூக்கமின்மையால் தவிக்கிறவர்களுக்கான பொதுவான அரோமா தெரபி சிகிச்சைகளைப் பற்றிப் பேசினோம். ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு அப்படி பொதுவான குறிப்புகளைக் கொடுக்க முடியாது. ஒவ்வொருவரின் பாதிப்பு ஒவ்வொரு விதமாகவும், அதன் தீவிரத்தின் அளவு வேறுபட்டும் இருக்கும். அதற்கேற்பவே சிகிச்சையை வடிவமைக்க வேண்டும்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் தூக்கமின்மையை சரி செய்வதில், லேவண்டர், சிடர்வுட், வெட்டிவேர், ஃபிரான்கின்சென்ஸ் ஆகிய நான்கு அரோமா ஆயில்களே முக்கிய மானவை. குழந்தையின் வயது, அவர்களது பிரச்னை போன்றவற்றைப் பொறுத்து இந்த எண்ணெய்களின் கலவை மாறுபடும். எனவே, முறையான அரோமா தெரபிஸ்ட்டின் ஆலோசனை இல்லாமல் இந்த விஷயத்தில் அம்மாக்கள் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம்.

காதுகளுக்குப் பின்னால் உள்ள மோட்டார் பாயின்ட்டுகளுக்கு முழு உடலையும் ரிலாக்ஸ் செய்யும் தன்மை உண்டு. எனவே, அரோமா ஆயில் கலவையை ஆள்காட்டி விரல்களால் தொட்டு, ஆட்டிசம் பாதித்த குழந்தையின் காதுகளுக்குப் பின் பக்கத்தில் லேசாகத் தடவி, மென்மையாக மசாஜ் செய்து விடலாம். விழித்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் இதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே, முதலில் சில நாட்களுக்கு குழந்தை தூங்க ஆரம்பித்த பிறகு இதைச் செய்து, குழந்தையின் தூக்கத்தை முறைப்படுத்தலாம்.

• குழந்தை தூங்கும் தலையணையின் நான்கு மூலைகளிலும் எண்ணெயை லேசாகத் தொட்டுத் தடவினாலும் அந்த வாசனை ஆழ்ந்த நித்திரையைக் கொடுக்கும்.
• ஒரு வாளி தண்ணீரில் 5 துளிகள் அரோமா ஆயில் கலந்து குழந்தையைக் குளிக்க வைத்து, பிறகு தூங்க வைத்தால் நிம்மதியாகத் தூங்குவார்கள்.
• குழந்தையை தூங்க வைக்கும் அறையில், அரோமா ஆயில் கலந்த தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டாலும் தூக்கம் நிச்சயம்.

இந்த அரோமா தெரபியானது வெறும் தூக்கத்தை மட்டுமே வரவழைக்காமல், 2 முதல் 20 நொடிகளுக்குள், உடலில் ஆக்சிஜன் சீராகப் பரவச் செய்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. தேவையற்ற நச்சுக்கள், வியர்வை அல்லது சிறுநீரின் மூலம் வெளியேறி விடும். ஆட்டிசம் பாதிப்பின் தீவிரத்தைக் குறைத்து, அவர்களை இயல்பான மனிதர்களாக நடமாடச் செய்ய, முதல் தேவை அமைதியான மனது. அந்த அமைதியான மனதுக்குத் தேவை ஆழ்ந்த உறக்கம். நன்கு தூங்குகிற குழந்தைகள் சீக்கிரமாக குணமடைவதைப் பார்க்கலாம். அரோமாதெரபியின் மூலம் இந்த மாற்றத்தை 3 முதல் 6 மாதங்களுக்குள் கண்கூடாகப் பார்க்கலாம்...’’

ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தையை தூங்க வைக்கும் அறையில் அரோமா ஆயில் கலந்த தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டாலும் தூக்கம் நிச்சயம்.

(தொடர்வோம்...)
தொகுப்பு: சாஹா