கவிதை முற்றம்



நிறைய இடம்... நிறைய விளையாட்டு...

முற்றுப்பெறா முற்றம்

முழு மதியோ அமாவாசையோ
அத்தை சோறும் குழம்பும் எடுத்துக்
கொண்டுவந்து தர பாட்டி அதனைப்
பிசைந்து உருண்டை பிடித்துத் தர
அத்தை மகன்கள் மாமன் மகள்கள்
சித்தி மகள்கள் பெரியம்மை மகன்கள்
என அனைவரும் முண்டியடித்து வாங்கும்
அந்த ஒரு கவளம் சோற்றைவிடக் கூடுதல்
சுகமானது எங்களது பால்ய காலங்களைச்
சுமந்து நின்ற எங்களது வீட்டின் அந்த
கவின்மிகு முன்முற்றம்!

முற்றம் - ஒரு சிறு அறிமுகம்

பேச்சுவழக்கில் முத்தம் அல்லது மித்தம். ஆங்கிலத்தில் courtyard... பின்னர் அதன் உட்பிரிவுகளாக inner courtyard and outer courtyard. முற்றம் இரு வகைப்படும் - உள்முற்றம், வெளி முற்றம். வெளிமுற்றம் என்பது வீதியோடு இணைந்த வீட்டின் வெளிப்பகுதி மற்றும் ஒரு வளவின் (காம்பவுண்ட்) உள்ளே உள்ள ஒரு வீட்டின் முன்பகுதியைக் குறிக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் நாம் கோலம் போடும் பகுதியே வீட்டின் முன் முற்றம் என அழைக்கப்படுகிறது.

முற்றத்துக்கு விளக்கமா எனக் கேட்பவர்களுக்கு... நெல்லை போன்ற பகுதிகளில் வீட்டின் முன்பகுதியும் முற்றம் என்றே அழைக்கப்பெற, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலோ முற்றம் என்பது உள்முற்றத்தை மாத்திரமே குறிக்கிறது. ‘முத்தம் தெளிச்சாச்சா’ என்பது நெல்லை வீடுகளின் அன்றாட காலை மொழி.

வீதியோடு இணைந்த முற்றங்கள் கோலம் போட, எல்லைகளைத் தீர்மானிக்க அதன் திண்ணைகளில் அமர்ந்து கதைபேச, சிறுவர், சிறுமியர் களித்திருக்க என்கிற சில பயன்
பாடுகளோடு நின்றுவிட, வளவுகளுக்கு உள்ளே அமைந்த முற்றங்களின் பயன்பாடு பல்கிப் பெருகுகிறது.உள்முற்றம் என்பது நாலுகட்டு வீடுகளில் காணப்படும் வீட்டினுள் அமைந்த நடுமுற்றம்.  நிலாவழி / வெளி வான வெளி / வான ஒளி என்கிற அழகிய தமிழ் வழக்கு முறைகளும் உள்ளன இதற்கு.

தீராத முற்றம்

வீதியோடு இணைந்த வெளிமுற்றமானது வீட்டுக்கும் புற உலகுக்குமான மிக அற்புத இணைப்பு வாசல்.உங்களது வீட்டின் எல்லை இங்கிருந்தே தொடங்குகிறது. அதனை மேலும் வசீகரமாக்கவும் மங்களகரமாக்கவும் பிறந்ததே கலைவடிவிலான கோலம். காலை எழுந்ததும் சாணநீர் தெளித்து கூட்டிப் பெருக்கி கோலத்தோடு ஆரம்பிக்கிறது வெளிமுற்ற இயக்கங்கள். அதன் பின்னரே வீட்டின் உள்வேலைகள் ஆரம்பிக்கின்றன தமிழர்களுக்கு. வெளிமுற்றத்தோடு இணைந்த வாழ்க்கையென்பது ஒளி, காற்று, மகிழ்ச்சி மற்றும் மன அமைதி...உண்மைதானே இது? சற்றே பின்னோக்கிச் சென்று நமது பால்ய காலங்களை அசை போட்டுப் பாருங்களேன்!

இன்றைய மூச்சு

முட்டும் ஃப்ளாட் வாழ்க்கைக்கும் அதற்கும் இடையிலான வித்தியாசம் புரியும். மின்சாரம் போன இரவுகளில் நாம் வீதியே கதியென்று கிடந்திருக்கிறோம். அங்கேயே விளையாட்டு, அங்கேயே சாப்பாடு எனக் கழிந்த யௌவனப் பொழுதுகள் அவை. பிற தெரு புது நண்பர்களின் அறிமுகப்படலமும் இங்கேயே நடந்திருக்கிறது. அவ்வகையில் இது ஒரு நட்பு வாசலும் கூட. முற்றத்தில் அமர்ந்து வீதி விளக்கின் வெளிச்சத்தில் படித்து மேதையானவரும் உண்டு. இதெல்லாவற்றையும் விட நிலாச்சோறு அற்புதங்களின் அரங்கேற்ற மேடையும் இதுவே... மொத்தத்தில் முற்ற வாழ்க்கை ஒரு தீரா வரமும் நினைவும். நம்மிலிருந்து பிரித்தெடுக்க முடியா ஒரு பால்யகால உதிரம் அது!

வளவு முற்றம் (outer courtyard) வளவு முற்றம் என்பது கொச்சைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் காம்பவுண்டு வீட்டு முத்தம்தான். முத்தம் என்பது தென் தமிழகப் பகுதிகளில் முற்றம் என்பதன் மருவே அன்றி வேறில்லை!அழகிய சாணத் தரையும் (இக்காலத்தில் சிமென்ட் முற்றங்களின் ஆதிக்கமே அதிகம்) கோலங்களுடனும் கூடிய வாசலாக ஆரம்பிக்கும் இது பல பயன்பாட்டுப் பகுதிகளாகவும் உரு எடுத்துக் கொள்கிறதைப் பார்க்கலாம்.

மதில்களின் உள் அடக்கப்பட்ட இப்பரந்த வீட்டின் முன்பகுதியானது நிலவுக்கும் சூரியனுக்கும் திறந்து விடப்பட்டிருப்பதால் ஒளி, காற்று,  மண், மழை என அனைத்தும் உள் நுழையும் சுகம்
அனுமதி. கூடவே சுதந்திரமும் அதிகம். மதில்களின் உள்ளே இம்முற்றம்உள்ளபடியால் பாதுகாப்பும் கூடுதல். குழந்தைகளும் முற்றமும் குழந்தைகள் குழந்தைகளாக இப்பூமியில் உலாவரும் காலம் மிகச் சிறியது. நம் வீடு வந்து நமைச் சேர்ந்த தேவதைகளாகவும் குட்டி தேவன்களாகவுமே நாம் அவர்களைக் கருதவேண்டும். தற்காலச்சூழலில் அதுவே மிக அவசியமானதாகவும் படுகிறது. இளவயதிலேயே பெருவயதுக்கான புத்தக மூட்டை, ஊடகங்களின் வழியாகக் கொட்டப்படும் எண்ணிலடங்கா தேவையற்ற தகவல்கள், வெளி உலகம் அவர்களிடம் காட்டும் சில விதமான பிறழ்வு நடவடிக்கைகள்...

அம்மையும் அப்பனும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் அண்டை அயலாருடனும் வீட்டு வேலையாட்களுடனும் அவர்களுக்கு ஏற்படுகிற ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட பந்தம்... தொலைக்காட்சி முன் couch potato களாக அவர்கள் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம்... இப்படி அவர்களது உலகம் பல அவலங்களைச் சந்தித்து, பல சுவாரஸ்யங்களை இழந்து நிற்கிறது. ஒரு முன் முற்றத்துடன் கூடிய வீடொன்று - சொல்லப்போனால்  விளையாடு வதற்கான இடத்துடன் கூடிய வீடொன்று அவர்களுக்கென அமைந்தால் அதைவிட வேறு சந்தோஷம் ஏது?

புதிதாக வீடு கட்டும் இளவயது அப்பாக்கள்/ அப்பாக்களாக ஆகப் போகும் இளைஞர்கள் மற்றும் அம்மாக்கள் கவனிக்க... கண்டிப்பாக வீட்டின் முன்னே அவர்களுக்கான விளையாட்டுத் தளம் ஒன்றினை அமைப்பதற்காகவாவது இடம் விட்டு விட்டு வீட்டினைக் கட்ட ஆரம்பியுங்கள். குழந்தைகளின் பருமன் குறித்த பன்னாட்டு ஆய்வுகளும் நமக்கு மகிழ்ச்சியான அறிக்கை எதனையும் அளிக்கவில்லை. குறிப்பாக நீரிழிவு குழந்தைகளிடையே அதிகரித்து வருவதை அது அலறிச் சொல்கிறது.

இன்னும் ஆத்மார்த்தமாக இவ்வாய்வுகளை நாம் உற்று நோக்கி மனதளவில் ஒரு emotional research செய்து பார்த்தால், நம் சம்பாத்தியம், அவசரகதி வாழ்க்கை முறை என்கிற சில கட்டாயப்படுத்தப்பட்ட அணுகுமுறைகளால் நாம் அவர்களின் வாழ்வில் ஒரு நீங்கா பின்னடைவைத் தந்திருக்கிறோம் என்பது புரியும். flat culture முறை ஆரோக்கியரீதியான கெடுதல்களையே அவர்களுக்கு அதிகம் அளித்திருக்கிறது.

‘ஒரு இஞ்ச் விலகி நட... ஓராயிரம் மைல்களை இழப்பாய்’ என்கிறது சீனப் பழமொழி. குழந்தைகள் குறித்த இத்தகைய ஆரோக்கிய கவனக்குறைவு பின்னாளில் மனித குலத்துக்கே மாபெரும்
அச்சுறுத்தலாக மாறலாம். அதற்கான சிறிய வாழ்வியல் முன்னெடுப்பாக இந்த முன் முற்றத்திலிருந்தும் நாம் தொடங்கலாம். நமக்கும் நடைப்பயிற்சி, தியானம் செய்ய, வீட்டில் உள்ளோருடன் அளவளாவ என இது பல நன்மைகளை நல்கக் கூடும்!

முன் முற்றம்- வேறு பயன்கள்!
அமைத்துக் கொள்ளலாம் இவை அனைத்தையும்...

* மரங்கள், செடிகள் என மனதுக்கு புத்துணர்ச்சியளிக்கக் கூடிய சிறு தோட்டம்

* நடைப்பயிற்சிக்கான pathway

* மழைக்காலங்களில் துணிகள் உலர்த்த வசதியான கொடிகள்

* மீன் தொட்டி, தாமரைத் தொட்டி

* வளர்ப்புப் பிராணிகளுக்கான கூடு

* குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனங்கள்

* காபி / தேநீர் அருந்த சிறு மேஜை அல்லது சிறு குடில்

* ஓய்வெடுக்கும் குடில்

* அமர்ந்து புத்தகங்கள் வாசிக்க, கதைக்க சிறு திண்ணை

* கோலம் எனும் அற்புதக் கலையை பிரகடனப் படுத்த ஓரிடம்.

உங்களுடன் ஒரு வார்த்தை தனி வீடுதான் உங்கள் சாய்ஸ் எனில் அழகிய முற்றத்தை ரசனையுடன் ஏற்படுத்திக் கொள்வதோடு அதனோடு இயைந்த வாழ்வையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக நம் குழந்தைச் சந்ததியினருக்கு நாம் அளிக்கப் போகும் மிகப்பெரிய ஆசீர்வாதம் அது என்பதினை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்!

அம்மையும் முற்றமும்...

ஓர் நினைவு அதிகாலை... அம்மா முற்றமெங்கும் சாணி தெளித்து கோலமிடும் அழகு... குளிரில், சின்னத் துண்டை போர்த்திக்கொண்டுப் பார்த்தது இன்னும் நினைவில்!
அந்தக் குளிரில் காத்திருந்தது... கோலத்திற்காகவா..? இல்லை, அதன் பின், கடையும் மோரின் பதத்திற்காகவா?! இன்னும் தெரியல!
- மைக்கேல் அமல்ராஜ்@facebook
முற்றமே ஒரு கவிதைதான் என அறியாதவர்கள் சிலரே முற்றத்தில் அமர்ந்து கவிதை எழுதுகின்றனர்!

(மீண்டும் பயணிப்போம்...

பல இனிய கதைகளும் பேசுவோம்!)
படம் நன்றி: ஆனந்த்செல்வி மாசானம்

தமிழினி