Web World of Women



ஆமை

உங்கள் இல்லாமையையும்
இயலாமையையும் அடுத்தவர்களிடம் தெரியப்படுத்தாதீர்கள்.
இரண்டும் இருப்பவர்கள்
உங்களை அணுக யோசிப்பார்கள்.
- கோமதி நடராஜன்
எழுத்தாளர்
(அண்மையில் இயற்கை எய்திய இத்தோழிக்கு அஞ்சலி...)

உங்கள் கையெழுத்தில் உங்கள் வரிகள்!
நீங்களும் அனுப்பலாம்
kungumam thozhi facebook inbox க்கு...

குங்குமம் குதூகலம்

யார் வீட்டுக்குப் போனாலும் திரும்பி வரும் போது கட்டாயம் குங்குமம்
வச்சுகிட்டு போகச் சொல்வாங்க. ஒரு சிலர் வீட்லதான் நல்ல குங்குமம் இருக்கும். சிலர் வீட்ல கோயில்களில் குடுத்த குங்குமத்தை எல்லாம் சிமிழில் கொட்டி வைத்து அது பழைய குங்குமமாக இருக்கும். அதை நெற்றியில்
வைப்பதால் புண்ணாக வாய்ப்பு
அதிகம். அதனால் சென்டிமென்ட் பார்க்காமல் நாசுக்காக கொஞ்சம் எடுத்து நம் ஸ்டிக்கர் பொட்டு மேலேயே வைத்துக் கொள்வது நல்லது!
- நிர்மலா ஸ்ரீதரன்

இப்படி ஒரு பாட்டி!

வல்லபா ஸ்ரீநிவாசன்

நான் வேலைக்குப் போக ஆரம்பித்த வருஷத்திலேயே என் பாட்டி இறந்து விட்டார். தாயக்கட்டை,   சோழி என்று பாட்டியின் நினைவுகளோடு இருந்த எனக்கு கீழ் ஃப்ளாட்டில் குடி வந்த   குடும்பத்தில் ஒரு பாட்டி கிடைத்தார். பவானிப் பாட்டி! சாதாரண பாட்டியில்லை அவர். நானும் பாட்டி என்றால் ஏதோ படுத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துத்தான் போனேன்.

பால்கனியில் துவரம் பருப்பு, மிளகாய் காய வைப்பது, துணி மடிப்பது என்று பிஸியாக இருந்தார்... ஆச்சரியம்! ‘சரி... முடித்துவிட்டு வந்து பேசிக் கொண்டிருப்பார்’ என்று இருந்தேன்.
அந்த வேலை முடிந்ததும், ‘‘சித்த இங்க உள்ள வந்து உக்காரு. வேலை பண்ணிண்டே பேசுவோம்’’ என்றார். பேத்தியின் ட்ரெஸ்ஸிங் டேபிளை ஒழித்தார். மாலைகள் தனி, வளைகள் தனி என்று அடுக்கினார். பவுடர், சென்ட் டப்பாக்களைத் துடைத்துப் பளிச்சென்று ஆக்கினார். யப்பா... என்ன ஒரு அழகு வேலையில்! (அப்போதே அவருக்கு 80 வயதுக்கு மேல். அந்த சுறுசுறுப்பை பார்த்து அசந்தேன்...)

பின் கொள்ளுப் பேத்தியின் ட்ராயர். அதில் க்ளீனிங். அதில் அறுந்து போன மணிகள், இத்யாதிகளை தனியாக பத்திரப்படுத்தி வைத்தார். ‘‘அது எதுக்கு பாட்டி?’’ என்றேன். ‘‘கை
வேலைக்கு உதவும். கொலுவுக்கு ஏதேனும் பண்ணலாம்’’ என்றார். அந்த ரீ-யூசிங் கான்செப்ட் - இகோ ஃப்ரண்ட்லி பாட்டியைப் பார்த்து இன்னும் ஆச்சரியம்!
அவர் 13 வயதில் கல்யாணம் ஆன கதை, படிக்க முடியாமல் போன வருத்தம் என்று என்னிடம் எல்லாம் சொல்வார்.

அவர் பெண் பிரசவத்துக்கு வந்து குழந்தை பிறந்து சில நாட்களிலேயே மாப்பிள்ளை இறந்து மனம் உடைந்து போன கதையைக் கேட்டு அவரோடு அழுதிருக்கிறேன். பின்னர் அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கியதையெல்லாம் சொல்வார். அவரது தைரியம் இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடம். தூக்கமே போய் விட்டது அவர் ஒரு நாள் சொன்னதைக் கேட்டு. ஒருமுறை முழு குடும்பமும் வேனில் கோயிலுக்குச் செல்கையில் ஆக்ஸிடென்ட் ஆகிவிட்ட தாம். பலர் நினைவில்லாமல்...

பலர் அடியுடன் ஹாஸ்பிட்டலில். பாட்டி மட்டும் தனியாக வீட்டில் இருந்தாராம். ‘‘ஆஸ்பத்திரியில் இருந்து குடும்பத்தாரின் துணிகளை யாரோ கொண்டுவர, அழுது கொண்டே அதையெல்லாம் துவைத்தேன்...’’ என்றார். ‘‘அத்தனையும் ரத்தம்... அகோரம்’’ என்று அவர் ஒரு நாள் சொன்னபோது அவர் மனோதைரியம் கண்டு வியந்தேன். ஒருநாள் இரவு மணி 12 இருக்கும். ஒரே சத்தம். கீழே யாரோ கத்துவது கேட்டது. எல்லோரும் எழுந்து ஓடினோம். பாட்டிதான்.

‘‘எல்லாரும் வாங்கோ. நெருப்பு. நெருப்பு. சீக்கிரம் வாங்கோ’’ என்று கூப்பாடு போட்டு அனைத்து ஃப்ளாட்காரர்களையும் அலர்ட் செய்தது பாட்டிதான்!அவர்கள் வீட்டு ஏசி எரிந்து ஒரே புகை. ஒன்றும் புரியவில்லை. யார் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கிடுகிடுவென்று புகை கூடுகிறது. மூச்சு விட முடியவில்லை. பெரியவர்கள், குழந்தைகளை வெளியேற்றினோம். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் சேர்ந்து தண்ணீர் பிடித்துக் கொட்டினர்.

ஃபயர் இன்ஜி னுக்கு போன் செய்து அவர்கள் வருவதற்குள் ஐந்து மாடியிலும் புகை மண்டலம். அனைத்து இடங்களிலும் கரி. இதைப் பற்றி தனியாக எழுத வேண்டும். அப்போதுதான் நெருப்பின் தீவிரம் புரியும். ஆனால், இதை நன்கு உணர்ந்த பாட்டியின் சமயோசிதம்... என்னென்று சொல்வது? எப்போதும் அழகாக தலை வாரி பளிச்சென்று இருப்பார். புடவைகளை அயர்ன் செய்து வைத்துக் கொள்வார். சமையல், ஜெனரல், ஹெல்த் டிப்ஸ் எக்கச்சக்கமாக வழங்குவார். பின்னே? அவர்கிட்ட இல்ல ஹெல்த் டிப்ஸ் கேட்டுக்கணும்! 93 வயது வரை எந்த நோயும் இல்லாமல் இருந்தவராயிற்றே?

கைவேலையில் தேர்ந்தவர். சின்ன ஜிகினா பேப்பரையும் வேஸ்ட் ஆக்காமல் க்ரியேடிவ்வாக செய்து விடுவார். போட்டோவில் நீங்கள் பார்ப்பது பாட்டியின் கைவண்ணம். கொலுவுக்கு செருப்புக் கடை. என்ன அழகு பாருங்கள்! இன்னொரு ஆச்சரியமான விஷயம்... அவர் புத்தகம் படிக்கும் ஆர்வம். முதல்முறை என்னிடம், ‘‘ஏதாவது புத்தகம் இருந்தா கொடேன்’’ என்றபோது பாட்டிக்கு என்ன புத்தகம் கொடுப்பது என்று ஆன்மிக, குடும்ப புத்தகங்களைக் காண்பித்த போது, ‘‘ம்ஹூம்... எனக்கு இதெல்லாம் வேண்டாம். எனக்கு க்ரைம்தான் பிடிக்கும். கொலை, கண்டுபிடிக்கிறது இந்த மாறி... ம்ம்... சுஜாதா புத்தகம் ஏதாவது இருக்கா?’’ என்றாரே பார்க்கலாம். க்ளீன் போல்ட்!

பலமுறை லைப்ரரியில் அவருக்கு புத்தகங்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். It was a pleasure to see her read and discuss with her! ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘மத்யமர்’, ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ என்று டிஸ்கஷனில் கலக்குவார். ‘‘இவன் நன்னாத்தான் எழுதறான். சிலநேரம் முடிக்கறதுதான் பிடிக்க மாட்டேங்கறது’’ என்பார்... புன்னகைப்பேன்.

சுஜாதாவை விட வயதில் மூத்தவரான பாட்டி அவர் நினைவு நாளில் தகனம் செய்யப்பட்டார். 96 வயது... 3 வருடங்களுக்கு முன் அவர் நினைவு பிறழ்ந்தது. முதலில் சில வேளை. பின்னர் அடிக்கடி. ஆரம்பத்தில் ‘‘நான் யாரு பாட்டி. தெரியறதா?’’ என்றால் கோபம் வந்துவிடும். ‘‘தெரியாம என்ன? வல்லபா...’’ என்பார். பின் அதுவும் மாறியது. தன் மகனையே ‘அப்பா’ என்று அழைத்தார். சிறுமியானார். ஒருமுறை நான் சாதம் ஊட்டிய போது, ‘‘எனக்கு ஐஸ்க்ரீம் தா.

இதோ பாரு என் அப்பா. எனக்குப் படிக்கணும்னு ஆசை. என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறாளாம். பலூன் வாங்கித் தர்றியா?’’ என்றதும் உடைந்து போனேன். எத்தனையோ புத்திசாலிப் பெண்களை படிக்க வைக்காமல் அறிவாளிகளை இழந்திருக்கிறோம். இன்று காலை பாட்டியைக் கொண்டு சென்றதும் ரோட்டில் நமஸ்கரித்து எழுந்தேன். கீழே மரத்திலிருந்து உதிர்ந்த பல சிவப்பு மஞ்சாடி விதைகள். ஒவ்வொன்றாகப் பொறுக்கினேன்.   பாட்டி இதை வைத்து என்னவெல்லாம் செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

பூவுக்கு ஒரு டிப்ஸ்!

றீசமையல் வேலை முடிந்தபின் குக்கர் காஸ்கட்டை கழுவி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பின்னர் எடுத்து பயன்படுத்தினால் அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

றீஇட்லி பூப்போன்று இருக்க, மாவு புளித்தபின் அதனைக் கரண்டி கொண்டு கிளற வேண்டாம். (yensamayalarai.blogspot.in)

அமலாவுடன் ஒரு மகிழ் தருணம் குட்டிப் பாப்பா சாராவின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து... sarah arjun @ facebook

ஃப்ரெண்ட்லி க்ரியேட்டிவிட்டி சுறுசுறுப்பு, தைரியம் சமயோசிதம் ஹெல்த்தி, ரசனை - இவை எல்லாம் சேர்ந்தவர்தான் பாட்டி!