அராபியாட்டா பாஸ்தா சாஸ்



ராஜேஸ்வரி விஜயானந்த்

www.rakskitchen.net

என்னென்ன தேவை? (3 பேருக்கு) தக்காளி - 3, பூண்டு - 4 பல், பழுத்த சிவப்பு மிளகாய் (மிளகாய் பழம்) - 3, தக்காளி பியூரி (டின்னில் கிடைப்பது) - 1/4 கப், ஆலிவ்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், இட்டாலியன் சீஸனிங் - 3/4 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.


எப்படிச் செய்வது?

1.  ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைக்கவும். தக்காளி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்க வேண்டும். தக்காளியை அதில் போட்டு 20 நொடிகள் கழித்து வெளியில் எடுத்துவிடவும்.
2. இப்போது தக்காளியின் தோல் எளிதில் உரிக்க இயலும். தோலை உரித்து, அதை நீக்கி, நான்காக வெட்டி, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
3. பூண்டை உரித்து மிகப் பொடியாக வெட்டிக்கொள்ளவும். மிளகாயை மெல்லிய வட்டங்களாக வெட்டவும். விதையை வேண்டுமானால் நீக்கிவிடலாம்.
4. ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, மிதமாக சூடாக்கவும். அதில் வெட்டிய பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து, நிறம் மாறாமல் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.
5. அரைத்த தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். இதில் டின் தக்காளி பியூரி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
6. இட்டாலியன் சீஸனிங், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து கலக்கவும்.
7. எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். ஆற வைத்து ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, 3 நாள் வரை உபயோகிக்கலாம்.

உங்கள் கவனத்துக்கு...

* டின்னில் கிடைக்கும் தக்காளி பியூரியும் சேர்த்தால்தான் நிறமும் சுவையும் நன்றாக இருக்கும்.
* ஒரு வெள்ளை வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பூண்டு மற்றும் மிளகாய் வதக்கிய பிறகு வதக்கி இதே முறையில் செய்யலாம்.