என்ன எடை அழகே...



ஃபிட்னஸ்

பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர் இது!

பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடரான ‘என்ன எடை அழகே...’ கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குங்குமம் தோழியும், ‘தி பாடி ஃபோகஸ்‘ நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல டயட்டீஷியனுமானஅம்பிகா சேகரும் இணைந்து நடத்துகிற இந்த ரியாலிட்டி தொடரில் தேர்வான 6 தோழிகளில் இறுதிக்கட்டம் வரை வந்தவர்கள் ஜெயந்தி, சந்திரகவிதா மற்றும் பிரதீபா ஆகிய மூவர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வரை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்பதற்கேற்ப பங்கேற்பாளர்கள் அத்தனை பேரும் செய்யாத முயற்சி இல்லை. கிராம் கணக்கில் கூட எடை குறையாத வருத்தத்திலும் விரக்தியிலும் இருந்தார்கள். இருப்பினும், முதல் நாளே உற்சாகமும் நம்பிக்கையும் பற்றிக் கொண்டது தோழிகளுக்கு. குறையுமா, குறையாதா எனக் குழப்பம் கொடுத்த எடை, மெல்ல மெல்ல இறங்கத் தொடங்கியது.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமும் எடையைக் குறைக்கும் வித்தைகளை இவர்களுக்குக் கற்றுத் தந்தார் அம்பிகா. ஆரோக்கியமான, அறுசுவை டயட் உணவு தயாரிப்பது, யோகா போன்றவையும் பயிற்றுவிக்கப்பட்டன.

ஒவ்வொன்றுமே எடை குறைப்புக்குப் பெருமளவில் உதவிய தில் தோழிகள் ஊக்கம்அடைந்தனர்.இறுதிக்கட்ட சிகிச்சையாக ஸ்டீம் பாத் (நீராவிக் குளியல்) முறையையும் ஆன்ட்டி செலுலைட் தெரபி என்கிற சிகிச்சையையும் தோழிகளுக்குக் கொடுத்தார் அம்பிகா. எடை குறைப்பில் முதல் இடத்தில் இருக்கும் சந்திரகவிதா, ஆதர்ச எடையை எட்டிப் பிடிக்க சில நாட்களே இருக்கிற மகிழ்ச்சியில் இருக்க, அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஜெயந்திக்கும் பிரதீபாவுக்கும் இந்த 2 பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

‘‘ஜெயந்தியோட உடல் எடையில நல்ல முன்னேற்றம் இருக்கு. அதனால அவங்களுக்கு ஸ்டீம் பாத் கொடுக்க முடிவு பண்ணினோம். இது சருமத்தோட முதல் லேயரான எபிடெர்மிஸ்ல உள்ள அழுக்கு, தூசிகளை வெளியே கொண்டு வந்து, வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டி விட்டு, உடம்புல உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடம்புல உள்ள கழிவுகள் வெளியேறினாலே உடம்பு லேசாகும். எடையும் குறையும்.

பிரதீபாவுக்கு பிசிஓடி பிரச்னை இருக்கிறதால எடை குறைப்பு கொஞ்சம் மெதுவாத்தான் இருக்கு. தவிர, அவங்க உடம்புல கெட்டியான கொழுப்பும் நிறைய இருக்கிறதால, அதைக் கரைக்க ஆன்ட்டி செலுலைட் தெரபி கொடுக்க முடிவு பண்ணினோம்.

மெடிகேட்டட் ஆயில் உபயோகிச்சு, அவங்களுக்கு மசாஜ் கொடுத்தோம். பிறகு ஆன்ட்டி செலுலைட் மெஷின் மூலமா அவங்க உடம்போட சாதாரண டெம்ப்பரேச்சரைவிட, அதிக சூட்டை உருவாக்கி அது மூலமா கெட்டியான கொழுப்பைக் கரைக்க வச்சோம்.

இந்த ரெண்டு சிகிச்சையிலயுமே 300 முதல் 500 கிராம் வரை எடை குறையும். சிலருக்கு உடனே மாற்றம் தெரியும். ஒரு சிலருக்கு 2 - 3 நாள் கழிச்சு கூட இந்த தெரபி உதவறதைப் பார்க்கலாம். பத்து நாளுக்கொரு முறை இந்த சிகிச்சைகளைக் கொடுக்கிறது மூலமா, எடை குறைப்பை வேகப்படுத்தறதோட, உடலுக்கு நல்ல ஷேப் கிடைக்கவும்
செய்யலாம்...’’ என்கிறார் அம்பிகா.

இப்போதைய எடை

சந்திரகவிதா-         63 கிலோ
ஜெயந்தி    -    74 கிலோ
பிரதீபா    -    87 கிலோ

ஆதர்ச எடையை அடைந்து வெற்றியைத் தொடப் போகிற அந்த அதிர்ஷ்டசாலி யார்?

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் வாழ்க்கை முறை மாற்றங்கள்,
ஆரோக்கிய அறுசுவை டயட் உணவு தயாரிப்பது, யோகா மூலம் எடை
குறைப்பது, நீராவிக் குளியல் முறை, ஆன்ட்டி செலுலைட் தெரபி
ஆகிய முயற்சிகளில் நம் தோழிகள் ஈடுபட்டனர்.

அடுத்த இதழில்!
படங்கள்: ஆர்.கோபால்