நோ சாக்லெட்...லேப்டாப்பை தொடாதே!



சாய்னா நெஹ்வால்

- கோச் கெடுபிடி

‘‘புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்தது சாய்னாவோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன். ஜூனியர் லெவல் போட்டிகளில்  சாய்னாவுக்கு ஏற்கனவே பெரிய பேர் கெடச்சிருந்ததால, கொஞ்சமும் தயங்காம சேர்த்துக்கிட்டார்.

மகளிர் பேட்மின்டன்ல ஆதிக்கம் செலுத்தி வந்த சீன வீராங்கனைகளுக்கு ஈடு கொடுக்கற அளவுக்கு சாய்னாவ தயார் செய்யணும்கிறதுல கோபி உறுதியா  இருந்தார். அவரது பயிற்சி முறைகள், சாய்னாவ உடல் ரீதியாவும் மன ரீதியாவும் வலுவான பிளேயரா தயார் செஞ்சதுங்கிறதுல சந்தேகமே இல்ல...’’ என்று  தொடங்கி, கோச் கோபிசந்த் பற்றிய நினைவலைகளைப் பகிர்கிறார் சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங் நெஹ்வால்.

‘‘கோச் சொல்லிட்டார்ங்கிற ஒரே காரணத்துக்காக எந்த மறுப்பும் சொல்லாம நான்வெஜ் சாப்பிட்டா. எங்களுக்கே ஆச்சரியமா இருந்துச்சு!’’
‘‘சாய்னாவுக்கு எதிரா ரெண்டு ஆண் பிளேயர்களைத்தான் ஆட வைப்பார் கோச். ஒருவர் வலைக்குப் பக்கத்துல டிராப் ஷாட்டா போட்டு நல்லா வளைய வைப்பார்.  மற்றவர், ஷட்டிலை பின்பக்க கோர்ட்டுல உயரமாக போட்டு ஷாட் அடிக்க உதவுவார். இப்படி ஒரே நேரத்துல ரெண்டு வீரர்களுக்கு எதிரா பிராக்டீஸ் செஞ்சதால,  சாய்னாவின் ஆட்டத்துல நல்ல முன்னேற்றம் தெரிஞ்சது. கோபி சார் கோர்ட்டுக்கு வெளியே நின்னுகிட்டு, அந்த பசங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துகிட்டே  இருப்பார்.

பயிற்சி ஆட்டங்களில் அந்தப் பசங்களுக்கு எதிரா எல்லா நேரத்துலயும் வெற்றி பெற முடியாது என்றாலும், ‘அந்த கஷ்டமான சவாலுக்கு சாய்னா ஈடு  கொடுக்கறதே பெரிய விஷயம்’னு கோபி சொல்லுவார். சாய்னாவின் பலமே ஆக்ரோஷமான ஆட்டம்தான். அதை மெருகேற்றுவதில் கோபி கூடுதல் கவனம்  செலுத்தினார்.சின்ன வயசுலேயே சீனியர் பிளேயர்களோட மோதினாலும், சாய்னா எதிர்ல விளையாடுறவங்களோட வயசயோ, உருவத்தையோ நெனச்சு  பயப்பட்டதே இல்லை. ‘யாரா இருந்தாலும் தன்னால ஜெயிக்க முடியும்கிற தன்னம்பிக்கைதான் ஒரு உண்மையான சாம்பியனோட அடையாளம். அது  சாய்னாகிட்டே ஏராளமா இருக்கு’ன்னு கோபி பாராட்டுவார்.

‘அவளோட பல ஷாட்கள் இயற்கையா அமைஞ்சது இல்ல. பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்கறத கவனமா கேட்டு, தொடர்ந்து பிராக்டீஸ் செய்து  நூறு  சதவிகிதம் சரியா வருகிற வரைக்கும் திருப்திஅடையவே மாட்டா. கோச் சொல்றத வேதவாக்கா எடுத்துகிட்டு பணிவா நடந்துக்கிறதுல சாய்னாவ மிஞ்ச ஆளே  இல்லை’ என்பார் கோபி.

2005ல் சீனா போயிருந்தப்போ, ஒரு ரெஸ்டாரன்டுக்கு கூட்டிட்டு போனார். சீன நியூ இயர்ங்கிறதால வெஜ் அயிட்டம் சுத்தமா இல்ல. மீன், நண்டு சாப்பிடுன்னு  கோபி சார் சொன்னார். சாய்னா அது வரைக்கும் பியூர் வெஜிட்டேரியன். கோச் சொல்லிட்டார்ங்கிற ஒரே காரணத்துக்காக, எந்த மறுப்பும் சொல்லாம சாப்பிட்டா.  எங்களுக்கே ஆச்சரியமா இருந்துச்சு. அதுக்கப்புறம் கூட நான்வெஜ் உணவு அவளுக்கு அவ்வளவா பிடிக்கலே.ஃபிஷ், மட்டன் சுத்தமா பிடிக்காது. சிக்கன் மட்டும்  எப்பவாவது சாப்பிடுவா. மத்தபடி வெஜிடேரியன் உணவுதான் அவளோட ஃபேவரைட். பத்து ரவுண்ட் ஓடுன்னு கோபி சார் சொல்லிட்டு வெளியே போய்ட்டாலும்,  சின்சியரா ஓடி முடிப்பா. 2004ல இருந்து சாய்னாவோட பயிற்சிக்கு முழு பொறுப்பேத்துகிட்ட கோபி சார், அவளோட ஆட்டத்தை மெருகேற்ற எல்லா  உதவிகளையும் செஞ்சார்.

பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அது மாதிரி பார்த்து பார்த்து சாய்னாவோட குறைகளை சரி செய்யறதுல கோபி கூடுதல் கவனம் செலுத்தினார்.  இன்னிக்கு தன்னோட பயிற்சியாளரை அவ மாத்தி இருந்தாலும், கோபி சாரிடம் கத்துகிட்ட பல விஷயங்கள்தான் சர்வதேச அளவுல பிரகாசிக்க முக்கிய  காரணமா இருந்துச்சு. இதை என்றைக்குமே அவ மறக்க மாட்டா.

அவரோட கண்டிப்பான அணுகுமுறையால்தான் இளம் வீரர், வீராங்கனைகள் பெரிய அளவுல சாதிக்க முடியுது. பயிற்சி அளிக்கிறதுல மட்டுமல்ல... ஸ்டூடன்ட்ஸ்  என்ன சாப்பிடுறாங்க? எப்படி நடந்துக்குறாங்க? பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களா? பேச்சு நாகரிகமா இருக்கா? இப்படி பல விஷயங்களிலும் அவர்  கவனம் செலுத்துவார். எங்க வீட்டுக்கு வந்தா, ஃபிரிட்ஜை தொறந்து பார்ப்பார். அதிகமா சாக்லெட், பிஸ்கெட், ஐஸ்க்ரீம் இருந்தா எடுத்துக்கிட்டுப் போயிடுவார்.  சாய்னா வெயிட் போடக் கூடாதுங்கிறதுல ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பார்.

லேப்டாப்ல அதிக நேரம் செலவழிக்கிறதும் அவருக்குப் பிடிக்காது. ஒரு முறை சாய்னாவிடம் இருந்து அதை பிடுங்கி எடுத்துட்டுப் போயிட்டார். ‘பிரவுஸ் செய்ய  மாட்டேன் சார்’னு கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு வந்தா. ‘ரொம்ப கண்டிப்பா இருந்தா ஸ்டூடன்ட்ஸ் வெறுக்க ஆரம்பிச்சுட மாட்டாங்களா’னு உதவி  பயிற்சியாளர்கள் கேப்பாங்க. ‘பத்து மணி நேரம் கஷ்டப்பட்டு பிராக்டீஸ் செஞ்சிட்டு, மீதி இருக்கிற பதினாலு மணி நேரத்துல அதை வீணாக்குற மாதிரி நடந்துக்க  அனுமதிக்கக் கூடாது’ என்பார்.

மலேசியாவுல ஒரு மாசம் நடந்த பயிற்சி முகாம்ல கலந்துகிட்டு ஐதராபாத் திரும்பிய சாய்னா, ஒரேயடியா 7 கிலோ வெயிட் போட்டிருந்தத பார்த்ததும் காச்  மூச்னு கத்த ஆரம்பிச்சிட்டார். ‘சாக்லெட், ஐஸ்க்ரீம் பக்கமே போகக் கூடாது’ன்னு வார்ன் பண்ணினார். அப்புறம், கஷ்டப்பட்டு வெயிட்ட கொறைச்சா.
கோபி சாரிடம் பயிற்சி பெற ஆரம்பிச்ச பிறகு, 2006 பிலிப்பைன்ஸ் ஓபன்ல சாம்பியன் பட்டம் கெடச்சுது. இதுதான் அவங்களோட கூட்டணிக்கு சர்வதேச  போட்டியில கெடச்ச முதல் பெரிய வெற்றி. நாலு நட்சத்திர அந்தஸ்துள்ள பேட்மின்டன் போட்டில பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனைங்கிற பெருமை  கெடச்சுதுல சாய்னாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

அப்போ சாய்னா உலக அளவுல 86வது ரேங்க்ல இருந்தா. குவார்ட்டர் ஃபைனல்ல 4வது ரேங்க் வீராங்கனையான ஜெர்மனியின்
ஸூ ஹுவாய்வென்னையும், இறுதிப் போட்டில மலேசியாவின் ஜூலியா ஸியான் வோங்கையும் ஜெயிச்சதால, சாய்னா பத்தி எல்லோரும் பேச ஆரம்பிச்சாங்க.
‘சாய்னா மிகத் திறமையான வீராங்கனை. இந்திய பேட்மின்டனுக்கு கெடச்ச புதையல். விரைவில் டாப் 10ல் இடம் பிடிப்பார்’ என்று தேசிய கோச் விமல் குமார்  பாராட்டினார். சில வாரங்கள் கழித்து தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்லயும் சாய்னா சிறப்பாக விளையாடி
திறமைய நிரூபிச்சா.

தோகா ஆசிய விளையாட்டு போட்டிக்கு சாய்னாவ தேர்வு செஞ்சாங்க. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் எரிகோ ஹிரோசிடம் போராடி  தோற்றபோது, ரொம்பவே உடைஞ்சு போயிட்டா. இந்திய வீராங்கனைகளோட ஒப்பிடும்போது சாய்னாவோட ஸ்டெமினா, ஃபிட்னஸ் எல்லாம் சூப்பரா  இருந்தாலும், சர்வதேச வீராங்கனைகளுக்கு ஈடு கொடுக்கணும்னா இன்னும் கடுமையா உழைக்க வேண்டும்கிறத உணர இது ஒரு நல்ல வாய்ப்பா அமைஞ்சது.
அதே வருஷம் பாட்னாவில் நடந்த தேசிய போட்டில முதல் முறையா சாம்பியனானது சாய்னாவோட தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவியது. 2007ம் வருஷம்  முழுதும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகறதுல பிஸியா போச்சு...’’

சங்கர் பார்த்தசாரதி

(காத்திருப்போம்!)