தொடுதல்



க்ருஷ்ணி கோவிந்த்

குழந்தை உறங்கச்செல்லும் முன் ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்கிறாள் தாய். சோலை சூழ்ந்த இடத்தில், மெல்லினங்களின் தாலாட்டில், தென்றல் தடவும்  இரவில், உறுத்தாத ஒளியில் உறங்க வேண்டுமாம். குழந்தையை இத்தனை ரசனையுடன் வளர்க்கும் தாய் இருந்த இந்த நாட்டில்தான், அதே பச்சை  குழந்தைகளைப் பழிக்கும் செயலும் நடக்கிறது.

எத்தனையோ விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிலவற்றை நேரடியாகவும் சிலவற்றை மறைமுகமாகவும் சிலவற்றை புத்தகங்கள்  வாயிலாகவும் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கிறோம். இவற்றில் சிலவற்றை சிறு குழந்தைகளாக இருக்கும்போதே சொல்லித் தருவது, அவர்கள்  வாழ்நாள் முழுவதற்கும் பயன் அளிக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது உண்மைதானே! ‘பர்சனல் ஹைஜின்’ எனப்படும் தனிப்பட்ட சுத்தம்...

குழந்தைகள் உட்கார்ந்து பழகும்போதே ‘டாய்லெட் ஹேபிட்’ என்னும் கழிப்பறை உபயோகிப்பதையும் பழக்கப்படுத்த வேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு வரும்  பல குழப்பங்களில் ஒன்று இந்த சுத்தம் பற்றிய சந்தேகங்கள். விளம்பரங்களில் வரும் எந்த புகையோ, காற்றோ, தண்ணீரோ கொண்ட வாசனை திரவியங்களும்  ஒரு அளவைத் தாண்டி உபயோகப்படாது. உடலின் துர்நாற்றம், வியர்வை, அழுக்கான நகங்கள், தலைமுடிப் பராமரிப்பு, உடலின் தனிப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு  என அனைத்துமே கற்பிக்கத் தகுந்தவை.

சிறு குழந்தைகளுக்கு குளியல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகளைத் தானாக குளிக்க அனுமதியுங்கள். ஒரு வாரம் தொடர்ந்து அவர்கள் குளிப்பதை  கண்காணித்து கை, கால், தொடை, உடலின் பின்புறம், தோள், கழுத்து, விரலிடுக்கு போன்றவற்றை எப்படி சுத்தம் செய்வது என்றும் தலைக்கு குளிக்கும் போது  எப்படி முறையாக குளிப்பது என்றும் அருகில் இருந்து சொல்லலாம். பெரும்பாலும் குழந்தைகள் ஷூ போட்டே இருப்பதால் பாதங்களை மாதம் ஒரு  முறையேனும் சுடுநீரில் அமிழ்த்தி மெதுவாக சுத்தம் செய்து ஒத்தடம் தரலாம். நகங்களை வாரம் ஒரு முறை வெட்டிவிடவேண்டும். விரல் இடுக்குகளை  எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம்.

பற்களின் பாதுகாப்பு தினம் இரு முறை பல் துலக்குவதும் ஒவ்வொரு முறை உணவருந்தியதும் வாய் கொப்புளிப்பதும் வழக்கமாக மாற வேண்டும். பல்  துலக்கும் போது மெதுவாக ஈறுகளுக்கு அழுத்தம் தருவதும் பல் துலக்கும் பிரஷ்ஷினால் மிக மெதுவாக உதடுகளைச் சுத்தம் செய்வதும், நாக்கை  அதற்குண்டான பொருளினால் சுத்தம் செய்வதும் அறியப்பட வேண்டும். வாரம் ஒரு முறை எலுமிச்சைப்பழம், உப்பைக் கொண்டு மெதுவாக பற்களை சுத்தம்  செய்வதும் நன்று. ஆண்டுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

சாப்பிடும் பழக்கம் சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவுவது, கீழே விழுந்தவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது, மற்ற குழந்தைகளின் வாய் வைத்து  குடித்த வாட்டர் பாட்டிலை இன்னொருவர் குடிப்பதையும் உணவை எச்சிலுடன் பகிர்ந்து கொள்வதையும் தடுப்பது போன்றவை குறித்து குழந்தைகளுக்கு பள்ளி  செல்லும் முன் கற்றுத் தருதல் அவசியம்.

இன்னும் சில...


தும்மல் வரும்போதும் இருமல் வரும் போதும் கைக்குட்டையால் வாயை, மூக்கை மூடி வெளியேற்றம் பழக்க வேண்டும். இவை பரவக்கூடிய நோய்களின்  வெளிப்பாடு என்பதால், குழந்தைகளுக்கு இந்த வழக்கத்தை முதலிலேயே கொண்டு வருதல் நன்று. ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் அந்தப் பகுதியை  சுத்தம் செய்ய வேண்டும். நகங்களை கொண்டு பிறப்புறுப்புகளை காயப்படுத்துதல் கூடாது. தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் டிஷ்யூ பேப்பர், வெட் டிஷ்யூ கொண்டு  எப்படி சுத்தப்படுத்துவது என்பதையும் ஒவ்வொரு முறை கழிப்பறையை உபயோகித்த பின்னும் போதிய தண்ணீர் விடுவது குறித்தும் வீட்டிலேயே கற்றுத்தர  வேண்டும்.

டீன் ஏஜ் வயதினருக்கு...

குளியல், பல் பாதுகாப்புடன் அவர்களின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெண்களின் பெரிய பிரச்னையே மாதவிலக்கு வேளையில்  உடையில் கறை படும் என்ற பதற்றம்தான். அப்போது முறையான நாப்கின் பயன்படுத்தும் முறையை செய்து காட்டுவது அவர்களின் குழப்பத்தைக் குறைக்கும்.  நாப்கின்களில் பல வகைகள் கிடைக்கின்றன. அவர்களுக்கு வசதியானதைத் தேர்ந்தெடுத்துப்  பயன்படுத்த உதவுங்கள். நாப்கின் இல்லாவிட்டாலும் சுத்தமான  காட்டன் துணியை எப்படி மடித்து வைப்பது? எப்படி சுத்தம் செய்வது? உலர வைத்து மீண்டும் உபயோகிப்பது? நாப்கின் எனில் எப்படி அதை அப்புறப்படுத்துவது?  இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும்.

‘ஒரு வேளை பள்ளியிலோ, வெளியிடத்திலோ உடையில் கறை பட்டால் பதற வேண்டிய அவசியம் இல்லை. அத்தனை அருவறுக்கத்தக்க விஷயம் இல்லை’  என்பதை விளக்கி, பதற்றப்படாமல் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தைரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு  முறை நாப்கின் மாற்றவும்  பிறப்புறுப்புகளை நன்கு கழுவி சுத்தமாக வைக்கவும் அறிவுறுத்துங்கள். உடலின் எந்தப் பகுதியை விடவும் பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியின் தோல்கள் மிக  மென்மையானவை. அதனை டெட்டால் போன்ற கடினமான திரவங்களால் கழுவ வேண்டிய அவசியம் இல்லை. குளிக்கும்போது சுத்தப்படுத்தினாலே  போதுமானது. தினம் இருமுறை குளித்தல் நன்று. குறைந்தபட்சம் மாதவிலக்கு நாட்களிலேனும் இரு முறை குளித்தல் அவசியம்.

உடலில் வளரும் ரோமங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஆண் குழந்தைகள் இது பற்றி கேட்க, பெண்களை விட பதற்றப்படுவார்கள். நம் குழந்தைகளிடம்  நமக்கு அநாவசிய வெட்கம் தேவை இல்லை. சுத்தமான உடை, அழகாக பராமரிக்கப்பட்ட கேசம், புத்துணர்வு கொண்ட உடல் அவர்களின் தன்னம்பிக்கையை  அதிகரிக்கும். அதுதானே நமக்கும் தேவை!

(பாதுகாப்போம்!)