நீங்கதான் முதலாளியம்மா!



ஓட்டில் கலைப்பொருட்கள்!

உபயோகமில்லை எனத் தூக்கி எரிகிற பொருட்களில் கூட கண்களைக் கவரும் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கல்பனாஸ்ரீ. பிஸ்தா பருப்பின் ஓடுகளை வைத்து இவர் உருவாக்கும் ஒவ்வொரு கை வினைப் பொருளும் கொள்ளை அழகு!

‘‘சின்ன வயசுல ஸ்கூல்ல கைவினைக்கலை கிளாஸ்ல நிறைய கத்துக்கிட்டேன். கல்யாணமாகி, குழந்தைங்க, குடும்பம்னு வந்ததும் எல்லாத்தையும் தற்காலிகமா மறக்க வேண்டியிருந்தது. குழந்தைங்க பெரிசாகி, பொறுப்புகளை முடிச்சு, நிறைய நேரம் கிடைச்சப்ப, மறுபடி பழைய ஆர்வங்களை தூசி தட்டி செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு கைவினைக் கலைஞர்களை அடிக்கடி சந்திச்சேன். புதுசு புதுசா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒவ்வொருத்தரோட கற்பனையும் கைத்திறனும் பிரமிக்க வச்சது.

ஒருமுறை தீபாவளிக்கு நிறைய பிஸ்தா பருப்பு அன்பளிப்பா வந்தது. பருப்பை சாப்பிட்டு, அதோட ஓட்டை தூக்கி எறிவோம். அப்படி இறைஞ்சு கிடந்த ஓடுகளைப் பார்த்தப்ப அதை வச்சு கலைப்பொருட்கள் பண்ற ஐடியா எனக்கு வந்தது. சும்மா சின்னச் சின்ன அயிட்டங்களா ட்ரை பண்ணிப் பார்த்ததுல எல்லாமே நல்லா வந்தது. நான் பண்ணினதை வீட்டுக்குள்ள அலங்காரமா வச்சிருக்கிறதைப் பார்த்துட்டு பரவலா எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் அதையே ஒரு பிசினஸா பண்ணினா என்னனு யோசிச்சேன்.

இன்னிக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி வாழணும்கிற விழிப்புணர்வை நிறைய பேர்கிட்ட பார்க்க முடியுது. பர்சனலா உபயோகிக்கிற பொருட்கள்லேருந்து, அடுத்தவங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு வரை, எல்லாமே இகோ ஃப்ரெண்ட்லியா இருக்கணும்னு விரும்பறவங்க இருக்காங்க.

அப்படிப்பட்டவங்களுக்கு என்னோட பிஸ்தா கிராஃப்ட் அயிட்டங்கள் ரொம்பப் பிடிக்குது’’ என்கிற கல்பனாஸ்ரீ, பிஸ்தா ஓட்டில் ஹேர் கிளிப், மாலை, தோடு, பெண்டென்ட், பேனா ஸ்டாண்ட், போட்டோ ஃப்ரேம், ட்ரே, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் எனப் பலதையும் வடிவமைக்கிறார்.

‘‘பெரிய முதலீடு தேவையில்லை. வீட்டு உபயோகத்துக்கு பிஸ்தா வாங்கிக்கலாம். கால் கிலோ பிஸ்தா 250 ரூபாய். ஒட்டறதுக்கு பசை, பிவிசி பைப், மேக்ரமி திரெட், அலங்காரத்துக்கான முத்து, மணிகள்னு 350 ரூபாய் முதலீடு போதும். மாலை, ஹேர்கிளிப், தோடு ஆகியவை சேர்ந்த ஒரு செட் 250 ரூபாய்லேருந்து 300 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஒரு நாளைக்கு 20 அயிட்டங்கள் வரை பண்ணலாம். விருப்பப்படறவங்க இதுக்கே கலர் கொடுத்து இன்னும் அழகாக்கலாம்.

குறைஞ்ச உழைப்புல 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிறவரிடம், ஒரே நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் 10 வகை பிஸ்தா கலைப் பொருட்களைக் கற்றுக் கொள்ளலாம் ( 9003218459).

‘‘இன்னிக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்றமாதிரி வாழணும்கிற விழிப்புணர்வை நிறைய பேர்கிட்ட பார்க்க முடியுது. பர்சனலா உபயோகிக்கிற பொருட்கள்லேருந்து, அடுத்தவங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு வரை, எல்லாமே இகோ ஃப்ரெண்ட்லியா இருக்கணும்னு விரும்பறவங்க இருக்காங்க...’’

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!


‘‘நிட்டிங்னு சொல்ற அடிப்படைப் பின்னல் வேலை தெரிஞ்சா போதும். குல்லாவும் பூட்டிஸும் பின்றது ரொம்பவே ஈஸி. நிட்டிங் தெரியணும்னு சொன்னதும்
பயப்பட வேண்டியதில்லை. வெறும் அரை மணி நேரத்துலயே அதையும் கத்துக்கலாம்!’’

பனிக்காலம் பக்கத்தில் இருக்கிறது. சென்ற வருடம் வாங்கிய குழந்தைகளின் குல்லாவும் பூட்டிஸும் சிறியதாகிப் போயிருக்கும். ‘‘அதனால என்ன? நீங்களே உங்க கைப்பட புதுசா பின்னிட்டா போச்சு...’’ என்கிறார் சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜலஜா. ‘குல்லாவும் சாக்ஸும் பின்றதென்ன அவ்ளோ ஈஸியான விஷயமா?’ எனக் கேட்பவர்களுக்கு ஜலஜாவின் பதில் ஆச்சரியம் தரலாம்!

‘‘நிட்டிங்னு சொல்ற அடிப்படை பின்னல் வேலை தெரிஞ்சா போதும். குல்லாவும் பூட்டிஸும் பின்றது ரொம்பவே ஈஸி. நிட்டிங் தெரியணும்னு சொன்னதும் பயப்பட வேண்டியதில்லை. வெறும் அரை மணி நேரத்துலயே அதையும் கத்துக்கலாம்...’’ என்கிறவர், நிட்டிங் தெரிந்தால், உல்லன் நூல் கொண்டு குல்லா, குழந்தைகளுக்கான பூட்டிஸ், ஸ்கார்ப், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தொப்பி உள்ளிட்ட எல்லாம் பின்னி விடலாம் என உத்தரவாதம் தருகிறார்.

‘‘உல்லன் நூல், நிட்டிங் ஊசினு ரெண்டு பொருட்கள்தான் தேவை. இது தவிர, லூம் நிட்டிங்னு ஒண்ணு இருக்கு. வேலையை ரொம்பவே சுலபமாக்கிற இது பார்க்கிறதுக்கு பிளாஸ்டிக்ல, விளையாட்டுப் பொம்மை மாதிரி இருக்கும். இதுல வேற வேற அளவுகள் இருக்கு. இது இல்லாமலும் நிட்டிங் பண்ணலாம். இன்னும் சீக்கிரமா பின்ன நினைக்கிறவங்க நிட்டிங் லூம் வாங்கிக்கலாம். லூம் இல்லாம 500 ரூபாயும் அதோட சேர்த்து 1,000 முதல் 1,500 ரூபாயும் முதலீடு தேவைப்படும்.

குழந்தைங்களோட குல்லாவை 30 ரூபாய்க்கு விற்கலாம். சைஸையும் டிசைனையும் பொறுத்தது விலை. 50 சதவிகிதத்துக்கு மேலயே லாபம் பார்க்கலாம்...’’ என்கிற ஜலஜாவிடம் 2 நாள் பயிற்சியில் 5 வகையான உல்லன் கிராஃப்ட்டை கற்றுக் கொள்ள (தேவையான பொருட்களுடன் சேர்த்து) கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் (80562 22923).

பளிச் புடவை பவுச்!


‘‘துளிக்கூட வேஸ்ட்டேஜ் கிடையாது. வெட்டி எறியற துண்டுத்துணியிலகூட குட்டியா ஒரு பவுச் தச்சிடலாம்!’’

பீரோ முழுக்க புடவைகளை அடுக்கி வைத்திருந்தாலும்  தேவைப்படுகிற நேரத்துக்கு தேவையான புடவையோ, அதற்கான மேட்ச்சிங் ஜாக்கெட்டோ கண்ணில் படாது. புடவை கிடைத்தால் ஜாக்கெட் கிடைக்காது. ஜாக்கெட் இருந்தால் புடவையைத் தேட வேண்டியிருக்கும்.

புடவை, ஜாக்கெட்டுக்கு மட்டுமின்றி, அவற்றுக்கு மேட்ச்சான நகைகளை வைப்பதிலும் இதே பிரச்னைதான் பல பெண்களுக்கும். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி ஹரிஹரனிடம் இதற்குத் தீர்வு இருக்கிறது!

புடவைகளையும், ஜாக்கெட்டுகளையும், நகைகளையும், மேக்கப் சாதனங்களையும் தனித்தனியே பத்திரமாக வைக்க இவர் டிசைன் செய்கிற பவுச்சுகள் பெண்களின் தேடல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

‘‘எம்.எஸ்சி. ஜியாகரபி படிச்சிருக்கேன். வேலைக்குப் போகலை. வெட்டிங் பிளானிங்கும் பர்த்டே பிளானிங்கும் பண்ணிட்டிருந்தேன். நாங்க குடியிருக்கிற வண்ணாரப்பேட்டை ஏரியாவுல வடக்கத்திய மக்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க இனத்துல பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பறப்ப, அவங்க கையால புடவை வைக்கிற பவுச், ஜாக்கெட் பவுச், நகை பவுச் எல்லாம் பண்ணி அனுப்புவாங்க.

அதைப் பார்த்த எனக்கும் அந்த பவுச் தைக்கிற ஆசை வந்தது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு நார்த் இந்தியன் பெண்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னிக்கு அதுவே எனக்கு முழுநேரத் தொழிலா மாறியிருக்கு...’’ என்கிற விஜயலட்சுமி, புடவைக்கு, ஜாக்கெட்டுக்கு, நகைகளுக்கு, வளையலுக்கு, கொலுசுக்கு, வாட்சுக்கு, பொட்டுக்கு, மேக்கப் சாதனங்களுக்கு, செருப்புக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பவுச் தைக்கிறார்.

‘‘காட்டன் துணி, ஸ்பாஞ்ச், லைனிங் மெட்டீரியல், ஜிப், ரன்னர், டிரான்ஸ்பரன்ட் ஷீட், தையல் மெஷின்... இதெல்லாம் அவசியம். ஆரம்ப முதலீடா 2,500 ரூபாய் போதும். துளிக்கூட வேஸ்ட்டேஜ் கிடையாது. வெட்டி எறியற துண்டுத்துணியிலகூட குட்டியா ஒரு பவுச் தச்சிடலாம். புடவை பவுச்சுகளை 100 ரூபாய்லேருந்து விற்கலாம். அதிகபட்ச விலை 250 ரூபாய். 50 சதவிகித லாபம் பார்க்கலாம். கல்யாணங்களுக்கு ஆர்டர் எடுக்கலாம்.

நவராத்திரிக்கு குட்டிக்குட்டி பவுச் தச்சுக் கொடுக்க ஆர்டர் வரும். பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு ரெண்டே ரெண்டு வளையல் மட்டும் வைக்கிற மாதிரியான பவுச்சுக்கு டிமாண்ட் அதிகம். பீரோல வைக்கிறதுக்கு மட்டுமில்லாம, பயணங்களின் போது எடுத்துட்டுப் போகவும் வசதியா இருக்கும்...’’ - ஆர்வம் கிளப்புகிற விஜயலட்சுமியிடம் 2 நாள் பயிற்சியில் 5 விதமான பவுச்சுகள் தைக்கக் கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் கட்டணம் 1,500 ரூபாய் (ணூ 97109 70097).

- ஆர்.வைதேகி

படங்கள்: ஆர்.கோபால், ஆர்.சந்திரசேகர்