அறிவோம் ஆயிரம்



உலகன் டாப் 10 சிலைகள்

சிற்பிகள் கல்லிலே கலைவண்ணம் கண்டு  வரலாறு படைத்த பெருமை நம் நாட்டுக்கு உண்டு. உலகெங்கும் இப்படி விழி உயர்த்தச் செய்யும் சிற்பங்கள்/சிலைகள் உங்கள் பார்வைக்காக...

1. Statue of Liberty (New York, United States)

‘சுதந்திரதேவி சிலை’ என்று அழைக்கப்படும் இந்தச் சிலை 1886 அக்டோபர் 28 அன்று பிரான்ஸ் மக்களால் அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மான்ஹாட்டனில் லிபர்டி தீவில் அமைந்திருக்கும் இச்சிலை உலகின் பிரபலமான சிலைகளில் முதலிடத்தில் உள்ளது.

2. Christ the Redeemer  (Rio de Janeiro, Brazil)

92 அடி அகலத்துக்கு கைகளை விரித்திருக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலை ரியோ டி ஜெனிரியோவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று. உலகில் உள்ள
உயரமான இயேசு சிலைகளில் 5வதும் இதுவே!


3. The Great Sphinx Of Giza (Egypt)

கிறிஸ்து பிறப்பதற்கு முன், 2558-2532 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் சிங்க உடலும் மனித தலையும் கொண்ட சிலைகள்... எகிப்தின் வரலாறு, புராணச் சின்னமும் கூட.

4.Moai (Easter Island)

உலகின் மர்மப் பிரதேசங்களிலும் இடம்பெற்றிருக்கும் இந்தச் சிலை 1200-1500 காலகட்டத்துக்குள் செதுக்கப்பட்டிருக்கலாம். இந்த மனித உருவங்கள் மிக பிரமாண்டமானவை என்பதோடு, மொத்தச் சிலையின் மூன்றில் ஒரு பங்கு தலைப்பகுதியாக செதுக்கப்பட்டிருப்பதும் அதிசயம்.  75 டன் எடை கொண்டது. இங்குள்ள பழங்குடியினர் இச்சிலையை தீவு முழுதும் நகர்த்திக் கொண்டே இருந்துள்ளனர்.

5. David Statue (Italy)


டேவிட் சிலை இத்தாலியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 17 அடி உயரமுள்ள, நிர்வாண ஆணின் சிலை. பைபிள் கதைகளின் ஹீரோக்களில் ஒருவரான டேவிட் பற்றியது. 15011504 காலகட்டத்தில் படைக்கப்பட்ட சிலை.


6. Olmec colossal heads (Mexico)

கொலம்பிய நாகரிகத்துக்கு முற்பட்டதாகக் கருதப்படும் ஒல்மெக் நாகரிகத்தின் வெளிப்பாடாக, ஹெல்மெட் அமைப்புள்ள தலை சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 17 தலைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது ஆச்சரியம். மெக்ஸிகோவில் உள்ள இந்தச் சிலைகள் 3.4 மீட்டர் வரை உயரமுள்ளவை.


7. The Motherland Calls (Volgograd, Russia)

உலகின் மிக உயரமானதும் எந்த ஒரு மதத்தையும் சாராததுமான இந்தச் சிலை 279 அடி உயரமானது. ரஷ்யாவின் போர் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

8. The Thinker (Paris, France)

’சிந்தனை செய் மனமே’ என்கிற இந்த வெண்கலச் சிலை, ஒரு ஆண் நிர்வாணமாக ஒரு பாறையில் அமர்ந்து ஆழ்ந்து சிந்திப்பது போல அமைந்துள்ளது.


9. The Little Mermaid (Denmark)

டென்மார்க்கின் கோபன்ஹேகன் துறைமுகத்தில் உள்ள இந்த வெண்கலச் சிலை, 4 அடி உயரமே கொண்டது. பாறை மீது அமைந்திருக்கும் இந்தக் கடற்கன்னி, டென்மார்க்கின் அடையாளங்களில் முக்கியமானது.

10. The Terrace of the Lions (Delos Island, Greece)

சிங்கங்களின் அணிவகுப்பு என்று வியக்க வைக்கும் இந்த சிற்பங்கள், கிரேக்க நாட்டின் வரலாறு, கட்டிடக்கலை, புராணம் ஆகியவற்றோடு தொடர்புடையது. 912  சிங்கங்கள் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது 5 சிங்கங்கள் மட்டுமே உள்ளன... அவை கிரீஸ் அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன.