இனி ஆன்லைனிலேயே படிக்கலாம் எம்.பி.ஏ!



‘உறுதியோடும் சிறப்பாகவும்
நீங்கள் பணியாற்றினால் வெற்றி
உங்களைப் பின்தொடரும்’

- கௌதம புத்தரின் இந்த வாசகம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு மிகவும் பொருந்தும். காரணம், அவர்கள் அப்படித்தான் பணியாற்றியாக வேண்டும். அதற்கான திறமையை படிப்பிலும் பயிற்சி யிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊதுபத்தி தயாரிக்கும் சிறு நிறுவனம் தொடங்கி ஐ.டி. துறை வரை எந்த நிறுவனமாகவும் இருக்கட்டும்... எம்.பி.ஏ. (மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்தவர்களுக்கான தேவை இப்போது மிக அதிகமாகியிருக்கிறது. மனித வள மேலாளர், கணக்காளர், மார்க்கெட்டிங் மேலாளர், நிர்வாக அதிகாரி, விற்பனை மேலாளர் என நிர்வாகவியல் சார்ந்த உயர்ந்த பதவிகளுக்கு எம்.பி.ஏ.தான் பொருத்தமான படிப்பு. இவ்வளவு முக்கியமான படிப்பை ஆன்லைனிலேயே வழங்குகிறது புதுவைப் பல்கலைக்கழகம்!

எம்.பி.எல். (மாஸ்டர் ஆஃப் பிசினஸ் லீடர்ஷிப்), எம்.பி.எல். (மாஸ்டர் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ்) போன்ற வணிகம் மற்றும் மேலாண்மை சார்ந்த வேறு சில படிப்புகள் இருந்தாலும், இந்தத் துறைகளில் எம்.பி.ஏ. முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

உலகெங்கும் மேலாண்மைப் பணிகளில் பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு மிக அவசியமான படிப்பு எம்.பி.ஏ. இதில் 20க்கும் அதிக சிறப்புப் பாடப் பிரிவுகள் இருக்கின்றன. எம்.பி.ஏ. ரீடெயில் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. பேக்கிங் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. ஃபாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட் என சில அரிதான படிப்புகளும் அடக்கம். மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் ஆழ்ந்த தேர்ச்சி பெறுவதற்காக எம்.பி.ஏ.வை தேர்ந்தெடுக்கிறார்கள்.

எம்.பி.ஏ. முதலில் அறிமுகமானது அமெரிக்காவில்தான். அங்கிருக்கும் டார்ட்மவுத் கல்லூரியிலுள்ள டக் நிர்வாகப்பள்ளிதான் முதன் முதலாக 1900ல் ஆரம்பிக்கப்பட்ட முதல் நிர்வாகப் பள்ளி. இங்கு வணிகவியலில் அறிவியல் முதுகலைப் பட்டம், நிர்வாகவியலில் மேற்படிப்பு ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

1908ல் அமெரிக்கா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பள்ளி, முதல் எம்.பி.ஏ. பாடத் திட்டத்தை (ப்ரோக்ராம்) அறிமுகப்படுத்தியது.

அந்த முதல் பாடத் திட்டத்தில் 33 முழு நேர மாணவர்களும், 47 சிறப்பு மாணவர்களும், 15 ஆசிரியர்களும் இருந்தார்கள். 1950க்குப் பிறகு அமெரிக்காவுக்கு வெளியே எம்.பி.ஏ. படிப்பு பரவ ஆரம்பித்தது. கனடா, தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் அடியெடுத்து வைத்தது. இன்றைக்கு உலகெங்கும் வளர்ந்த, வளரும் நாடுகளிலும் இப்படிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் 2 ஆண்டுப் படிப்பாக எம்.பி.ஏ. பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 1,600 வணிகப் பள்ளிகளில் எம்.பி.ஏ. கற்றுத்தரப்படுகிறது. ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனத்திலும் எம்.பி.ஏ. உள்ளது. ஆனால், இதில் சேருவதற்கு காமன் அட்மிஷன் டெஸ்ட்-CAT, GMAT, MAT போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ச்சிப் பெற்றாக வேண்டும்.

இப்போது, இருந்த இடத்திலிருந்தே படிப்பதற்கு வசதியாக ஆன்லைனில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது புதுவைப் பல்கலைக்கழகம்.

‘எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்’ என்கிற நோக்கத்தில் ஆன்லைனில் எம்.பி.ஏ. கற்றுத்தரும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது புதுவைப் பல்கலைக்கழகம். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு இத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறது.

ஒரு கல்வி நிறுவனத்தில் போய் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு, அதே நேரம் கல்வியாளர்கள் கற்றுத் தர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு ஏற்றது இந்த ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு.

இத்திட்டத்தில் படிக்கிறவர்கள் தொழில் வல்லுநர்களோடு இணையம் மூலமாக உரையாடலாம்... கற்றுக் கொள்ளலாம். ஆசிரியர்களை தகுந்த நேரத்தில் அணுகி, பாடங்களைக் கற்கலாம். இதன் மூலம் வேலை நேரத்தையும் படிக்கும் நேரத்தையும் நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

அலுவலகத்திலும் வீட்டிலும் இருந்தபடியே மிகச் சிறந்த ஆன்லைன் படிப்பைப் படிக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவில் இருந்தபடியே சர்வதேச தரத்திலான ஆன்லைன் படிப்பாக எம்.பி.ஏ.வை படிக்கலாம். நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கும் துறையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்... திறமையான ஊழியர்களின்
துணையோடு முக்கியமான தொழில் தகவல்களைப் பெறலாம்.

ஆன்லைன் கல்வியின் நன்மைகள்...


* எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப படிக்கலாம்.

* ஒருவர் எங்கிருக்கிறாரோ, அந்த இடத்துக்கு ஏற்ற சிறந்த ஆசிரியரை அணுகி, அவரிடம் கற்கலாம். 

* உலகத் தரத்திலான உள்ளடக்கம் கொண்ட பாடத் திட்டத்தை மொபைல் அல்லது டேப்லெட் மூலமாக வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பெற முடியும்.

* ஆசிரியர்களுடன் நேரடி விவாதங்களை மேற்கொள்ளலாம்.

* திங்கட்கிழமை கற்றுக் கொள்ளுங்கள்... செவ்வாய்க் கிழமை விண்ணப்பம் அனுப்புங்கள்’ போன்று, உடனடியாக எல்லோருக்கும் பொருந்திப் போகும் படிப்பு.

* கேஸ் ஸ்டடி விவாதங்களுக்கு ஆன்லைனில் நேரலையாக விரிவுரை வழங்கப்படும். கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில்களும் தீர்வுகளும் வழங்கப்படும்.

* ஒவ்வொரு படிப்புக்கும் பொருத்தமான மின் புத்தகங்கள் (ஹார்டு காப்பி) கிடைக்கும்.

* பிரபல பதிப்பாளர்கள் வெளியிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலகத் தரத்திலான பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட் புத்தகங்கள் அடங்கிய டிஜிட்டல் லைப்ரரி வசதி இருக்கிறது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ், மனித வள மேலாண்மை, ரீடெயில் மேனேஜ்மென்ட், சுற்றுலா, ஆபரேஷன்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்ஸ்யூரன்ஸ் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பொதுவான எம்.பி.ஏ. பாடத்திட்டங்கள் இருக்கின்றன. 

வருடத்துக்கு இரண்டு பருவங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதத்திலும் ஜூலை - செப்டம்பர் காலத்திலும்! தனியாக நேரம் ஒதுக்கி எம்.பி.ஏ. படிக்க முடியாத பிஸியானவர்களுக்கு ஏற்றது ஆன்லைன் எம்.பி.ஏ!

ஆன்லைனில் எம்.பி.ஏ. படிக்க விருப்பமா?


ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் தவிர மற்ற எம்.பி.ஏ. படிப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ. ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் படிக்க, எம்.பி.பி.எஸ்., பார்மஸி, பல் மருத்துவம், நர்ஸிங், பிசியோதெரபி, பயோ இன்ஜினியரிங், பயோ சயின்சஸ் போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகள் ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

www.onlinepondiuni.com இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து, வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டையுடன் 10ம் வகுப்பு, பிளஸ் டூ, டிகிரி சான்றிதழ் பிரதிகளை இணைக்க வேண்டும். நான்கு செமஸ்டர்களாக இரண்டு வருடங்கள் படிக்க வேண்டியிருக்கும். தேர்வுகளை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூர், புதுடெல்லி உள்பட 48 மையங்களில் எழுதலாம். நிர்வாகத் துறையில் உயரங்களைத் தொட விரும்புகிறவர்களுக்கு உதவும் துறை.

கட்டணம் மற்றும் மேலதிக விவரங்களுக்கு... www.onlinepondiuni.com மற்றும் www.pondiuni.edu.in

எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும், நம் வசதிக்கேற்ப ஆன்லைனில் எம்.பி.ஏ. படிக்கலாம்!


- பாலு சத்யா