புலிகளை மட்டும் வரையும் புதுமைப் பெண்



ஸ்பெயின் நாட்டின் குவர்னிகா நகரம் மீது ஜெர்மானிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிக மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போயினர். இந்த கண்ணீர் துயரத்தை தன் தூரிகை மூலம் ஓவியங்களாக்கி இவ்வுலகுக்கு காட்சிப்படுத்தினார் பாப்லோ பிகாசோ. அந்த ஓவியங்கள் ஏற்படுத்திய அதிர்வு வலதுசாரிகளுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டியது. சமூக அவலங்கள் மீதான ஒரு ஓவியனின் எதிர்வினையும் அவனது ஓவியங்களே என்பதற்கு இதுவே சாட்சி. இதே போல, வேட்டைகளாலும் வாழ்விட அழிப்பாலும் புலிகள் அருகி வருவதன் எதிர்வினையாக பிரதிபலிக்கின்றன ஐஸ்வர்யாவின் புலி ஓவியங்கள்!


சென்னையைச் சேர்ந்த பயோமெடிக்கல் இன்ஜினியரான ஐஸ்வர்யா, கற்பனைச் சிரத்தை உள்ள ஓவியரும் கூட. உறுமும் புலி, கம்பீர நடையிடும் புலி, துள்ளி விளையாடும் புலிக்குட்டிகள் என ஐஸ்வர்யா பல்வேறு கோணங்களில் வரைந்திருப்பவை எல்லாமே புலிகளைத்தான். புலிகளின் மீது அப்படி என்ன காதல்?
‘‘நான் யாரைப் பார்த்தாலும் அவங்களோட கண்களைத்தான் குறிப்பா பார்ப்பேன். ஒரு ஓவியராவும் கண்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். ஓவியம் வரையுறவங்க பொதுவா கடைசியிலதான் கண்களை வரைவாங்க. ஆனா, நான் முதல்ல கண்களைத்தான் வரைவேன். அந்தக் கண்கள் எனக்கு திருப்தி தரலைன்னா மேற்கொண்டு வரையவே மாட்டேன். புலியின் கண்கள்ல ஒரு நெருப்பு இருக்கும். அப்படியொரு கண்களை நான் எந்த விலங்கிடமும் பார்த்ததில்லை. புலியை வரையணும்கிறதுக்கான ஆசை வந்ததுக்கான காரணம், அதனுடைய கண்கள்தான்.

ஓவியரா அழகியல் சார்ந்து சிந்திக்கும்போது புலியுடைய கண்கள் எனக்கு பிடிக்கும். ஆனா, சமூக அக்கறையோடு யோசிக்கறப்போ புலிகளின் அழிவு எனக்கு வேதனையைத் தருது. அதனால், என் ஓவியங்கள்ல அழகியலும் இருக்கும்... அதுக்குப் பின்னாடி என்னுடைய வேதனையும் இருக்கும். இயற்கையுடைய உணவுச் சங்கிலியில் ஏதோ ஒண்ணு அறுபட்டாலும், அதன் விளைவு நம் எல்லோரையும் பாதிக்கும். புலிகள் இருக்கிற இடத்தை வளமான காடுன்னு சொல்லலாம். புலி இருக்குதுன்னா புலிக்கு உணவான மான்கள் நிறைய இருக்குன்னு அர்த்தம். மான்கள் நிறைய இருக்குதுன்னா, அதன் உணவான புற்கள் அங்க செழித்து வளர்ந்திருக்கணும். இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதானே நம்ம இயற்கை. மனிதனுடைய பேராசையோ இதையெல்லாம் சீர் குலைக்குது.

முன்னாடியெல்லாம் ஜமீன்தார்களும் ஆங்கிலேயர்களும் தங்களோட வீரத்துக்கு அடையாளமா, புலியை வேட்டையாடி அதனுடைய பல்லை ஆபரணமாக்கிக்கிறதும், தோலை வீட்டுல மாட்டுறதுமா இருந்தாங்க. இப்படி தங்களுடைய சுய கௌரவத்துக்காக பல புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கு. இன்றைக்கும் புலியுடைய தோல், நகம், பற்களுக்காக வேட்டைகள் தொடர்ந்துக்கிட்டிருக்கு. மான் வேட்டைகள் அதிக அளவில் நடக்குறதால புலியுடைய உணவுத் தேவைக்கு பஞ்சம் வருது.

இன்னொரு பக்கம் வாழ்விட அழிப்பு. புலியுடைய வாழ்விடத்துல விடுதிகளையும் விருந்தினர் மாளிகைகளையும் கட்டினால், அது எங்கே போகும்? வேற இடமே இல்லாம ஊருக்கு உள்ளே தான் வரும். வந்த புலியை அடிச்சு வெரட்டுற நாம, அது ஏன் ஊருக்குள்ள வருதுங்கிறதை யோசிக்கிறதே இல்லை. உலகிலேயே இந்திய வனப்பகுதிகள்லதான் அதிக எண்ணிக்கையிலான புலிகள் இருக்குங்கிறது நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம். இதனாலதான் புலி நம் தேசிய விலங்கா இருக்கு. 19ம் நூற்றாண்டில் 40 ஆயிரத்துக்கும் அதிக புலிகள் இருந்ததுன்னு பிரிட்டிஷ்காரர்கள் குறிப்பிட்டிருக்காங்க.

நாள்பட நாள்பட, 1972 கணக்கெடுப்பில், இந்தியாவில் ஆயிரத்து 827 புலிகளே இருந்தது. இப்போதைய நிலவரப்படி ஆயிரத்து 706 புலிகள் மட்டும்தான் இருக்கு. இனியும் அக்கறை காட்டாம இருந்தோம்னா, புலியை நாம போட்டோவுலதான் பார்க்கணும்’’ என்று புலி புராணம் பேசியவரிடம், அவரது ஓவியத்துறை பிரவேசம் குறித்துக் கேட்டோம்.

‘‘எனக்கு நாலு வயசுல தொடங்கின ஆர்வம் இது. 9 வயசுல ஒரு பிள்ளையாரை வரைஞ்சேன். அதைப் பார்த்த பெற்றோர், என்னை ஓவியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டாங்க. பள்ளிக்காலம் முழுவதும் ஓவியப் பயிற்சியும் எடுத்துக்கிட்டிருந்தேன். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும், அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்துல பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடிச்சேன். பயோமெடிக்கல் துறைக்கு பெங்களூர், மும்பைல நிறைய வாய்ப்புகள் இருந்தது. சென்னையில வாழணும்கிற ஒரே காரணத்துக்காக, ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தேன்.

அந்த இடைப்பட்ட காலத்துல, என் குரு இளங்கோ சார்கிட்ட மறுபடியும் ஓவியப் பயிற்சிக்கு சேர்ந்தேன். அப்பதான் தண்ணியில நீந்தி வர்ற ஒரு புலியுடைய படத்தை நெட்ல பார்த்தேன். புலி நீந்தும்போது அந்த தண்ணியில் ஏற்படுற சலனம், தண்ணியில் பிரதிபலிக்குற புலியுடைய முகம்னு, அது வரையுறதுக்கான ஆர்வத்தை தூண்டுச்சு. கருப்பு வெள்ளையில் அந்தப் புலியை வரைஞ்சு, சார்கிட்ட காட்டினேன். நல்லாருக்குன்னு பாராட்டினவர், ‘தொடர்ந்து வரை’ன்னு ஊக்கம் கொடுத்தார். அப்புறம் ஒரு நாள் ‘சேவ் டைகர்’ விளம்பரம் பார்த்தேன். தொடர்ச்சியா புலிகளைப் பத்தின தேடுதல்ல இறங்கினேன். புலிகள் அழிஞ்சுட்டு வருதுன்னு நினைச்சு வேதனைப்படலாம்தான்... அதைத் தவிர்த்து, நம்மால வேற என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன்.

புலிகளை வரைஞ்சு அதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துறதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி...’’ என்கிற ஐஸ்வர்யாவின் கைவண்ணத்தில்கருப்பு வெள்ளைகளும், வண்ணங்களுமாக இதுவரை 150க்கும் அதிக புலிகள் உருவாகியிருக்கின்றன. ‘‘முதல் கட்டமா நான் வரைஞ்ச 35 ஓவியங்களோட படங்களை ‘வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர்’   (கீகீகீ)   என்ற வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பி வெச்சேன். என்னுடைய ஓவியங்கள் பிடிச்சுப் போனதால டெல்லியில் கண்காட்சி நடத்த ஸ்பான்ஸர் பண்ணாங்க. 2011ல் டெல்லியில் என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சி. மத்திய அரசின் புலிகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், சூழலியல் ஆர்வலர்கள்னு பலரும் கலந்துக்கிட்டாங்க.

அந்தக் கண்காட்சியில் எல்லா ஓவியங்களும் வித்துடுச்சு. அதன் மூலம் வந்த தொகையில் ஒரு பகுதியை ‘சமர்ப்பன்’ தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையா கொடுத்தோம். 2013ல் பெங்களூர் சித்ரகலா பரிஷத்ல இரண்டாவது ஓவியக் கண்காட்சி. கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே கண்காட்சியைத் தொடங்கி வெச்சுப் பேசினார். அதே ஆண்டு சென்னை ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் மூன்றாவது கண்காட்சி. மூன்று கண்காட்சியிலும் என் ஓவியங்களை வாங்கின முக்கால்வாசிப் பேர் ஓவிய விரும்பிகள் அல்ல... புலியை விரும்புறவங்க! இது தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வேட்டையாடுறவங்களை தடுத்து நிறுத்தியெல்லாம் என்னால புலியைக் காப்பாத்த முடியாது. புலியை யாரால காக்க முடியுமோ அந்த அதிகார வட்டத்துக்கு என்னுடைய ஓவியங்கள் மூலமா என் கருத்தை முன்
வைக்கறேன்... அவ்வளவுதான்’’ என்கிற ஐஸ்வர்யாவுக்கு புகைப்படத்துறையிலும் ஆர்வம் அதிகம்.

“ஜிம் கார்பெட், கர்நாடகா நாகர்ஹோலே, மஹாராஷ்ட்ரா தடோபா, ராஜஸ்தான் ராந்தம்பூர் வனப்பகுதிகளுக்குள் சஃபாரி போய் புலிகளை புகைப்படம் எடுக்கணும்னு ஆசை. சென்னை, சென்னை மக்கள், இந்த மக்களுடைய வாழ்வியல்... இதையெல்லாம் வரையணும்கிறது என் அடுத்தகட்ட திட்டம்” என்கிறார் புலிப்பெண் ஐஸ்வர்யா!

புலிகள் அழிஞ்சுட்டு வருதுன்னு நினைச்சு வேதனைப்படலாம்தான்... அதைத் தவிர்த்து, நம்மால வேற என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன்...‘‘என் ஓவியங்களை வாங்கின முக்கால்வாசிப் பேர் ஓவிய விரும்பிகள் அல்ல... புலியை விரும்புறவங்க!’’


- கி.ச.திலீபன்
படங்கள்: ஆர்.கோபால்