நிறைவைக் கொடுக்கிற ஒரு பணி!



பெயருக்கேற்றபடி முத்துச் சிதறலாக வெளிப்படு கிறது பேச்சு. அவரது தெளிவான வார்த்தைகளுக்கும் தீர்க்கமான சிந்தனைகளுக்கும் மத்தியில் பார்வைத் திறன் இல்லாததை ஒரு குறையாகவே உணர முடியவில்லை. அலகாபாத் வங்கியில் ஸ்கேல் ஒன் ஆபீசராக வேலை செய்கிற முத்துச்செல்வி, பார்வை மாற்றுத்திறனாளி. தன்னைப் போன்ற சக பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கான சேவையில் தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிற முத்துச்செல்வியின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை!

‘‘பிறந்தது திருநெல்வேலி. வளர்ந்தது, படிச்சதெல்லாம் சென்னையில... அப்பா முருகன், ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர். அம்மா பிரேமா இல்லத்தரசி. எனக்கொரு அக்கா, ஒரு தம்பி. நாங்க மூணு பேருமே பிறவியிலேயே பார்வைத் திறன் இல்லாதவங்க. அம்மாவும் அப்பாவும் உறவுக்குள்ள திருமணம் பண்ணிக்கிட்டதுதான் காரணம்னு சொன்னாங்க. மத்தபடி மருத்துவர்களாலயே காரணம் கண்டுபிடிக்க முடியலை. நாங்க மூணு பேருமே சென்னையில உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியிலதான் படிச்சோம்.

வரிசையா மூணு பிள்ளைங்களுமே பார்வை இல்லாதவங்கன்னா பெத்தவங்களோட மனநிலை எப்படியிருந்திருக்கும்? அப்ப நாங்க செங்கல்பட்டு பக்கத்துல குடியிருந்தோம். பள்ளிக்கூடத்துக்கு தேனாம்பேட்டைக்கு வரணும். அம்மாவும் அப்பாவும் கொஞ்சமும் சிரமம் பார்க்காம, அதிகாலையில 4 மணிக்கே எழுந்திருந்து, எங்க மூணு பேரையும் கிளப்பி, நெடுந் தொலைவு பயணம் செய்து, பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டு வந்து விட்டுட்டு, திரும்ப அழைச்சிட்டுப் போவாங்க. இவ்வளவு கஷ்டம் அவசியமானு அவங்கக்கிட்ட கேட்டீங்கன்னா, ‘அவங்க படிச்சாங்க. நாங்க படிக்க வச்சோம்’னு சிம்பிளா பதில் சொல்வாங்க.

சின்ன வயசுல நான் ரொம்ப நல்லா பேசுவேன். அந்தத் திறமைதான் என்னை சட்டம் படிக்க வச்சது. சட்டம் முடிச்ச பிறகு எனக்கு வழக்கறிஞரா பிராக்டீஸ் பண்றதுல ஆர்வமில்லை. ஒரு வருடம் ஒரு தனியார் நிறுவனத்துல சி.எஸ்.ஆர். டீம்ல வேலை பார்த்தேன். அப்புறம் அலகாபாத் வங்கியில வேலை கிடைச்சது...’’ என்கிற முத்துச்செல்வி, இந்த நிலையை அடைய நிறைய தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார்.

‘‘நல்ல பெற்றோரும் ஆசிரியர்களும் அமைஞ்ச தால படிப்புக்கு எந்தத் தடையும் இல்லை. பள்ளிப் படிப்பை முடிக்கிற வரைக்கும் பார்வைத் திறன் இல்லாதது ஒரு குறையாவே தெரியலை. பள்ளிக் காலத்துக்குப் பிறகு எங்களுக்கான எந்தச் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளும் சரியா கிடைக்கலை. சரியா புத்தகங்கள் கிடைக்கலை. விளையாட்டு மாதிரியான துறைகள்ல, உடல்திறன் குறைகள் இல்லாதவங்களுக்குச் சமமா ஒரு மாற்றுத்திறனாளியால விளையாட முடியலை. சமுதாயத்துல எங்க மேல இரக்கப்படவும் எங்களுக்கு உதவி செய்யவும் ஆட்கள் இருந்தாங்க. ஆனா, எங்களையும் அவங்களுக்கு இணையான சக மனிதர்களா பார்க்கிற, ஏத்துக்கிற மனப்பான்மை பலருக்கும் இல்லை.

எங்களைப் போல உள்ளவங்க சந்திக்க வேண்டிய சமூகத் தடைகள் புரிய ஆரம்பிச்சது. அப்பதான் கம்ப்யூட்டர் உபயோகத்துல என் திறமையை வளர்த்துக்கிட்டேன். வாய்ஸ் சாஃப்ட்வேரை உபயோகிச்சு, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். பார்வை மாற்றுத்திறனாளியா நான் சந்திச்ச, உணர்ந்த பல விஷயங்கள் எனக்குள்ள ஒரு உறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.

அந்த நேரம் ‘அகில இந்திய பார்வை அற்றோர் கூட்டமைப்பு’ என்கிற தேசிய அமைப்பு பத்தித் தெரிய வந்தது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட அந்த அமைப்புல என்னை இணைச்சுக்கிட்டேன். இப்ப அந்த அமைப்புல நான் தென் மண்டல ஒருங்கிணைப்பாளரா இருக்கேன். ஜே.எல்.கவுல் என்கிற பார்வை மாற்றுத்திறனாளியால 47 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த அமைப்புல 24 அமைப்புகள் அங்கங்களா இருக்காங்க. பார்வையற்றோருக்கான கல்வி, கணினிப் பயிற்சி, அவங்களோட மொபிலிட்டினு பல விஷயங்களுக்கு உதவற ஒரு தேசிய அமைப்பு இது.

பார்வை மாற்றுத்திறனாளி பெண்களோட தலைமைத்துவத் திறமைகளை வளர்க்கிற அந்த அமைப்போட நோக்கம் என்னை ரொம்பக் கவர்ந்தது. வங்கி வேலைங்கிறது என் வாழ்வாதாரத்துக்கானது. ‘அகில இந்திய பார்வை அற்றோர் கூட்டமைப்பு’ல என்னோட ஈடுபாடுங்கிறது ஆத்மார்த்தமா எனக்கு நிறைவைக் கொடுக்கிற ஒரு பணி... இந்தப் பணிக்குள்ள வந்ததும் என் வாழ்க்கையிலயும் நிறையவே நல்ல நல்ல மாற்றங்கள்...’’ - மனம் மலரச் சொல்கிறார் முத்துச்செல்வி.

பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கான தலைமைத்துவ குணங்களை விதைப்பது, அவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு, இனப்பெருக்க உரிமைகள் பற்றியெல்லாம் கற்றுத் தருகிற முத்துச்செல்விக்கு, ஒரு விஷயத்தில் அதீத வருத்தம் தெரிகிறது.

‘‘பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்களும் மனிதர்கள்தான்... அவங்களுக்கும் மற்ற பெண்களைப் போல எல்லா உணர்வுகளும் இருக்கும்னே பலரும் யோசிக்கிறதில்லை. ‘ஹெச்.ஐ. வின்னா என்ன, பாலியல் கல்வின்னா என்ன? அதன் தேவை என்ன? பாலியல் ரீதியான உரிமைகள் என்னென்ன? திருமணம் எந்தளவுக்கு முக்கியம்’னு பல விஷயங்களை பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு பேசிப் புரிய வைக்கிறேன். வறுமையின் காரணமா அதிகம் படிக்க முடியாம விவசாயம் பண்றவங்க, கடைகள் நடத்தறவங்களுக்கு நிதி உதவிகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது... பெண்களுக்கு மடிக்கணினி வாங்கிக் கொடுக்கிறது... ஊரக வேலை வாய்ப்புல எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சதவிகிதம் அமல்படுத்தப்படாததை எதிர்த்துப் போராடறதுனு இந்த அமைப்பு மூலமா நான் ஒருங்கிணைக்கிற பல விஷயங்களுக்கும், என்னோட சட்டப் பின்னணியும் உதவுது...’’ என்கிறார் பெருமையாக.

விழிகள் விரிய தன் சூழலைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பெண்களுக்கே பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் போது, முத்துச்செல்வி போன்ற பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்களின் நிலை எந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?‘‘நான் தடியைப் பயன்படுத்திதான் எல்லா இடங்களுக்கும் போயிட்டு வரேன். சென்னையைப் பொறுத்தவரை எங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதாகவே உணர்கிறோம். எங்களோட விழிப்புணர்வு முகாம்கள்ல ‘குட் டச் பேட் டச்’ பத்தின வகுப்புகளும் உண்டு. ஒரு ஆண் நல்லவனா, கெட்டவனாங்கிறதை அவனோட முகத்தைப் பார்த்துதான் கண்டுபிடிக்க முடியும்னு இல்லை. அவனோட பேச்சையும் தப்பான ஸ்பரிசத்தையும் வச்சே தெரிஞ்சுக்கலாம்.

இந்த அமைப்பு மூலமா அல்லாது தனிப்பட்ட முறையில பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு 45 நாள் தற்காப்புப் பயிற்சியும் கொடுக்கப்படும். அதுல சமையலறைப் பாதுகாப்புலேர்ந்து, கராத்தே வரை எல்லாம் உண்டு...’’ என வியக்க வைக்கிறார்.முத்துச்செல்வியின் பேச்சில் எந்த இடத்திலும் சுயவிரக்கமோ, பச்சாதாபமோ எட்டிப் பார்க்காதது ஆச்சர்யம். மாறாக தன்னைப் போன்ற பெண்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த சில வருத்தங்கள் மேலோங்கி இருக்கிறது.

‘‘பார்வைத் திறனற்ற பெண்கள் தினசரி வாழ்க்கையிலயே நிறைய பாரபட்சங்களை சந்திக்கிறாங்க. சட்டம் படிச்சவங்க மட்டுமில்லாம, இவங்க எல்லாருமே சட்டம் தெரிஞ்சுக்கணும். ஒவ்வொருத்தரும் தனக்குத்தானே வழக்கறிஞரா இருக்கணும். திருமணம் என்ற விஷயமும் இந்தப் பெண்களுக்குக் கேள்விக்குறியாவே இருக்கு. பார்வைத் திறனற்ற ஆண்களால சுலபமா வாழ்க்கையில செட்டில் ஆக முடியுது. அதுவே ஒரு பெண்ணுக்கு பிரச்னைக்குரியதா இருக்கு. பார்வையில்லாத பெண்ணை திருமணம் செய்யறதை ஒரு தியாகமா நினைச்சு முன் வராங்க ஆண்கள். தியாகம்னு நினைச்சா, அந்த வாழ்க்கையில நிம்மதியோ, அன்போ இருக்காது. பார்வை இல்லாட்டாலும் அவளும் நம்மைப் போல ஒரு பெண் என நினைச்சு அவளைத் திருமணம் பண்ணிக்கிட்டாதான் மணவாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்.

பெண்களும் தனக்கு திருமணம்னு ஒண்ணு நடந்தா போதும்கிற நினைப்புல தன்னோட சுய கவுரவத்தையும் மதிப்பீட்டையும் விட்டுக் கொடுத்துட்டு, யாரோ ஒருத்தரைக் கல்யாணம் பண்ணக்கூடாது. தன்னை சக மனுஷியா நடத்தற ஒரு ஆணா இருந்தா சம்மதிக்கலாம்...’’ - காரமாகப் பேசுகிற முத்துச்செல்வியும் அப்படி ஒரு நபருக்காகவே காத்திருக்கிறார்.‘‘மாற்றுத்திறனாளியா பிறந்தது என்னோட தவறில்லையே... அப்புறம் நான் ஏன் அதை நினைச்சு பச்சாதாபப்படணும்?’’ என்கிறவரின் கேள்வி, அவரைப் போன்ற பெண்கள் அத்தனை பேரின் குரலாகவும் எதிரொலிக்கிறது.


ஒரு ஆண் நல்லவனா, கெட்டவனாங்கிறதை அவனோட முகத்தைப் பார்த்துதான் கண்டுபிடிக்க முடியும்னு இல்லை. அவனோட பேச்சையும் தப்பான ஸ்பரிசத்தையும் வச்சே தெரிஞ்சுக்கலாம்... திருமணம்னு ஒண்ணு நடந்தா போதும்கிற நினைப்புல தன்னோட சுய கவுரவத்தையும் மதிப்பீட்டையும் விட்டுக் கொடுத்துட்டு, யாரோ ஒருத்தரைக் கல்யாணம் பண்ணக்கூடாது. தன்னை சக மனுஷியா நடத்தற ஒரு ஆணா இருந்தா சம்மதிக்கலாம்...

- முத்துச்செல்வி