ரீடர் ரைட்டர் - வீடு



பேரு வச்சியே...சோறு வச்சியா?

‘யானை அசைந்து தின்னும்... வீடு அசையாமல் தின்னும்’ என்பார்கள்... உண்மைதான். அதற்காக சோறே போடாமல் விட்டுவிட்டால்?! பலர், வீட்டை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று பார்த்தால், ‘பேரு வச்சியே... சோறு வச்சியா?’  கதைதான்!

இந்தப் பிரச்னையை முதலில் கவனிக்க ஆரம்பித்தது ஒரு காலிங் பெல்லில்தான். எதிர் வீட்டுக்கு ஏதோ காரியமாக போக நேர்ந்தது. காலிங் பெல்லை நான்  அடிக்க, ஷாக் என்னை அடித்தது. ஆம்... பெல்லில் மின்சாரக் கசிவு. அதை சரி பண்ண அவர்களுக்கு நேரம் அமைய வில்லை. நாய் வளர்ப்பது போல, இதுவும் அழையாத விருந்தினரை பயமுறுத்தும் டெக்னிக்கா? அதுவும் தெரியவில்லை!

ஒரு முறை, கணவரை படாதபாடு படுத்தி, என் தூரத்து உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். உண்மையாகவே தூ...ரத்து உறவினர் தான். 15 கி.மீ.  சென்னைக்கு உள்ளேயே பயணிக்க வேண்டும். போனதும், ‘வாங்க... வாங்க...’ என்று அன்போடு அழைத்து அமரச்செய்து, காபியும் கொடுத்தார்கள். காபியை வாங்கிய என் கணவர்,  பாதியாக ஆற்றி, மீதியை தரையில் வைக்க பக்கவாட்டில் சாய்ந்தார். அது தான் பார்த்தேன். அடுத்த காட்சியில் கீழே விழுந்து கிடக்கிறார்.

மேலே காபி  அபிஷேகம். கீழே விழுந்ததால் அடிபடவில்லை என்பதை விடவும், யாரும் கவனிக்கவில்லை என்பதுதானே நிம்மதி? அந்த நிம்மதி என் கணவருக்கு  கிட்டவில்லை, பாவம். உறவினர் குடும்பமே சூழ்ந்துகொண்டு, எப்படி விழுந்தார், உள்காயம், வெளிகாயம் ஏதேனும் இருக்க வாய்ப்புள்ளதா, காபியை ஏன்  பக்கவாட்டில் வைக்கக் கூடாது, அப்படியே வைக்க நேர்ந்தாலும் எத்தனை டிகிரி ஆங்கிளில் சாய்வது வரை உசிதம் என்று விரிவாகப் பேசித் தீர்த்தார்கள்.  எங்களை சமாதானம் செய்யும் விதமாக, ‘சேர் எப்பவும் உள்ளேதான் போடறது...’ என்பதாக உறவினர் இழுக்கிறார். ‘அதென்ன உள்ளே போடுவது? உள்ளே  மட்டும் விழலாமா?’ என்று அப்போது கேட்க வசதிப்படவில்லை.

போதாத குறைக்கு, அந்த வீட்டுப்பெரியவர் ஒரு சேரை, அதாவது, நல்ல சேரை போட்டு எதிரில் உட்கார்ந்து கொண்டு, அவர் வீட்டில் இது வரை  விழுந்தவர்களின் வரலாற்றையே கொட்டித் தீர்த்தார். மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக் கதையெல்லாம் தோற்றது. அத்தனை நெடிய வரலாறு. சுவரில் கோடு  போட்டு எண்ணி வைக்காததுதான் பாக்கி. அத்தனை பேர் விழுந்திருக்கிறார்கள். இனி எப்போது அந்த சேர், சேரிடம் அடையுமோ தெரியாது. திரும்பி வரும் போது,  என் கணவர் பரிதாபமாகச் சொல்கிறார்... ‘அடுத்த முறை யார் விழுந்தாலும் என் கதையும் சேர்ந்து சொல்வாங்க இல்ல?’

இது மற்றுமொரு கதை... வீட்டில் சகலமும் ப்ரஸ்டீஜில்தான் வாங்கியிருக்கிறார். ஆகையால், மனைவியை ரொம்ப நேசிப்பவர். மனைவி முதல் முறை கருவுற்றிருந்த போது அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். ஹாலில் எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று சமையலறைக்கு போய் வந்தார். ‘சின்ன ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்’ என்றார். ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய உதவி என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.  அவராகவே, ‘அவ வெயிட் தூக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதனால நான்தான் குக்கருக்கு குண்டு போடுவது’ என்றார் (எனக்கு என்னவோ, இன்னமும் கூட டாக்டர் குக்கர்  வெயிட்டை சொல்லி யிருப்பார் என்று தோன்றவில்லை).

அவர் வீட்டுக்கு ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போக நேர்ந்தது. இம்முறையும் குக்கர்  சத்தம்தான் என்னை வரவேற்றது. கூடவே மினி அணுகுண்டு சத்தமும். ‘அதொண்ணு மில்ல, குக்கர், வெயிட்டை தானாவே தூர வீசிடும்’ என்று குண்டு  போட்டார். ‘அதனாலதான் சாதம் கடைசியா வச்சிட்டு வெளிய வந்துடறது...’ என்றவரிடம், ‘ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? குக்கரை ஒரே ஒருமுறை  கடைக்கு எடுத்துப்போனால் போதுமே’ என்று அவர்களுக்கே தெரிந்த ஒரு விஷயத்தை அறிவுரையாக்கிவிட்டு வந்தேன்!

மற்றுமொரு அனுபவம். என் குழந்தைகள், சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் டாய்லெட் கதவு சரியாக பொருந்தாது என்பதாலேயே வர மாட்டேன் என்கிறார்கள். இது  அடுத்த தலைமுறை. டாய்லெட் சுத்தமாக இல்லையென்றால் ‘let it go nature's missed call’   என்பாள் மகள். கதவு சரியாக மூடாது, ஒரு  கையால் பிடித்துக்கொண்டே உள்ளே இருக்க வேண்டும் என்றால்? ‘பாத்ரூம்ல பாட்டுப் பாடலாம், டாய்லெட்ல பாட முடியுமாம்மா’ என்று நாசுக்காக  சொல்லிவிட்டாள். கதவு ஸ்க்ரூவில் ஓர் உறவுச் சங்கிலியே ஊசலாடுவதை அவர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

வீட்டில் எதாவது ஒரு லைட் ஃப்யூஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கும். அதற்காக நாம் வேண்டுமானால் தட்டுத்தடுமாறி நடமாடிக்கொள்ளலாம். வீட்டுக்கு வரும்  அனைவரையும் பேய் வேஷம் கட்ட சொன்னால் எப்படி? கேண்டி க்ரெஷில் எத்தனையோ லெவல் தாண்டி யிருப்பான் பையன். ஆனால், ட்யூப்லைட் கூட  மாற்றத் தெரியாத ட்யூப்லைட்டாக வளர்த்து வைத்திருப்பார்கள். ‘ஹீஹீ, நேத்துதான் ஃப்யூஸ் போச்சு’, ‘இன்னிக்கு வாங்கலாம் என்றிருந்தோம்’ என்று சொல்லிச்  சொல்லி, அனாவசியமாக பொய்களை கணக்கில் ஏற்றிக்கொள்வார்கள்.

இன்னும் சிலர் வீட்டில் தண்ணீர், பைப்பிலிருந்து சொட்டிக்கொண்டே இருக்கும். ‘பிளம்பரெல்லாம் கொள்ளை காசு வாங்கறான்’ என்பார்கள். நாள் ஒன்றுக்கு 2  பக்கெட் வீதம், மாதம் அவர்கள் வீணடிக்கும் தண்ணீரையும், அதை மோட்டார் போட்டு ஏற்றுவதற்கான கரென்ட் செலவையும் பார்த்தால், ஒரு பிளம்பரை மாதச்  சம்பளம் கொடுத்தே வைத்துக் கொள்ளலாம்!

டிப்ஸ்... 

சில சின்னச் சின்ன ரிப்பேர்களை நாமே செய்யக் கற்றுக்கொள்ளலாம். சிலவற்றை யோசிக்காமல் தூக்கிப் போட்டு புதுசு வாங்க வேண்டும். பிளம்பர்,  எலெக்ட்ரீஷியன் போன்றவர்களிடம் ரொம்ப பேரம் பேசி வெறுப்பேற்றாமல், கூப்பிட்டால் உடனே வரும் அளவுக்கு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டை  பராமரிக்கவும், அதில் உள்ள பொருட்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமா என்றால், ஆம், தரத்தான் வேண்டும்! ஏனெனில், வீட்டில் நாம் ஒரு உறுப்பினர் மட்டுமல்ல... வீடும் நம்மில் ஒரு உறுப்பினரே!

கேண்டி க்ரெஷில் எத்தனையோ லெவல் தாண்டியிருப்பான் பையன். ஆனால், ட்யூப்லைட் கூட மாற்றத் தெரியாத ட்யூப்லைட்டாக வளர்த்து வைத்திருப்பார்கள்!