ஃபேஸ்புக் ஸ்பெஷல்



ஒரு நகர்வில் கடக்கிறேன் அவர்களின் வாழ்க்கையை!

சும்மாடு இரும்புச் சட்டி
கடப்பாறை சகிதமாக
முப்பொழுதும் வாகனங்களோடும்
ஒரு மாநகர சாலையின்
நடைபாதையில் அமர்ந்து
பேசிக் களிக்கின்றனர் இருவர்.

அகண்ட மரநிழற்சாலையில்
இலையுதிர்க்கும் ஒரு வேம்பின் நிழலில்
கண்ணயர்ந்துக் கிடக்கிறது
சாரத்தில் போர்த்திய குழந்தையொன்று.
அவளின் தாயும் தந்தையும்
சற்று தூரத்தில் கடப்பாறையால்
நடைபாதையை பிளந்து கொண்டிருந்தனர்.

அதே சாலைத் திருப்பத்தின்
கட்டுமான தளமொன்றில்
மணல் சலிக்கும் இயந்திரத்தினருகே
காதல் கனிந்த பார்வையுடன் பேசுகின்றனர்
ஒரு ஆணும் பெண்ணும்.
சிரித்து குழைந்தபடி மண்ணள்ள விரையும்
அப்பெண்ணின் காதலை மிகச் சமீபத்தில்
கண்ணுற்றேன்.

அச்சம் போன்று இருளப்பியிருந்தது அத்தெருவில்
நாற்புறமும் வலையினால் சுற்றப்பட்ட
ஒரு காலிமனையங்கே
நொறுக்கப்பட்ட செங்கற்களின்
மீதமர்ந்திருந்தனர் தாயும் பிள்ளையும்.
அவர்களின்
வீடெனும் வீட்டில்
பொன்னொளியை கசிந்தபடி
எரிகிறது ஒரு சிம்னி விளக்கு.

புதிதாக எழும்பும் கட்டுமானப் பகுதியில்
தென்பட்டதொரு குடும்பம்
சேலைகளால் கட்டப்பட்ட அவ்வீட்டில்
என் இளைய மகனையொத்த
இரு குழந்தைகள்
இரு தொட்டில்கள்.
இரட்டைப் பிள்ளைகளாயிருக்கலாம்
குழந்தைகள் தவழ்கின்றன நடக்கின்றன
முன்று சக்கர சைக்கிளை ஓட்டுகின்றன.

விரைவாகக் கட்டப்படும் அக்கட்டுமான தளத்தில்
அவர்களின் தங்குமிடங்களும் விரைவாக
காணாமல் போயின
தொட்டிலாடிய அவ்விடத்தில்
இப்போது
வேலியிடப்பட்ட குரோட்டன் செடிகள் வளர்கின்றன.

கட்டிட வேலைக்காக
நகரம் வந்த குடிசைக் குடும்பத்தில்
பாட்டியும்
ஒன்றரை வயது பிள்ளையும்
தீக்கிரையாயினர்.
பாதி கருகிய நிலையில்
அம்முற்றத்தில் நின்றிருந்த
முன்று சக்கர சைக்கிள்
ஆண்டுகளோடியும்
கண்ணகல மறுக்கிறது.

பெண்களும்
தோள்களில் கிடத்தப்பட்ட குழந்தைகளும்
கீழே வைக்கப்பட்ட பைகளுமாக
வாகனங்கள் விரையும் அச்சாலையில்
கும்பலாக
நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள்
அங்கு பணிபுரியும் கட்டுமானத்
தொழிலாளிகளின்
குடும்ப உறுப்பினர்களாக இருக்கக் கூடும்.

நகரின் பிரதான காய்கறிச் சந்தையருகே
ஓடும் சவமாக்கப்பட்ட நதி.
அக்கரையோரம் இருக்கும்
ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைகளிலிருந்து
வெளியேறும் அக்கூட்டம்
ஆரஞ்சு நிறத் தொப்பியணிந்தபடி
கையில் ஒரு சுத்தியலுடன்
எம்முகமும் ஒருமுகமாகி
மொழுமொழுவென சாலைகளை கடந்து
கட்டுமானத்தின் பிரம்மாண்டங்களுள்
கரைவதை பார்க்கையில்
ஆஹா என்றிருக்கும்.

கூலிக்கு இடம்பெயர்ந்த
இளைஞர்களை காணுந்தோறும் எழும் கேள்வி
அவர்களுள் காதல் துளிர்க்குமா?

ஒற்றைச் சிரிப்பு டன் உங்கள் உதாசீனங்களைக் கடந்து வருதலில், மிளிர்கிறது என் தன்னம்பிக்கை.

- தீபா சாரதி

ஒரு மனிதனை குப்பையென தூக்கிப் போட்டாலும்
அந்த குப்பைத் தொட்டியை பார்
அந்த குப்பையையும் பங்கு போட எத்துனையோ
பறவைகள்
சில பறவைகளுக்கு வாழ்வாதாரமாக!

- விமலா சஞ்சீவ்குமார்

காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கும்
மருத்துவத்துறையில் பணிபுரியும் செவிலிப்பெண்களுக்கும்
யாரும் ‘கண்ணு’ வெக்காத மாதிரி
தொளதொளன்னு நைட்டியை
யூனிஃபார்மாகக் கொடுக்குமாறு
இந்த கோர்ட் உத்தரவிடுகிறது!

- நறுமுகை தேவி

மகளுக்கும் எனக்குமான உரையாடல்...
மகள்: அம்மா, நீ எப்பவும் தம்பிக்குதான் சப்போர்ட் பண்ணுற...
நான்: அது ஏன்னா, 2 காரணங்கள்...
1. அவன் வயசுல சின்னவன்.
2.  உனக்குதான் மெச்சூரிட்டி அதிகம். நீ சொன்னா புரிஞ்சுப்ப...
மகள்: மூணாவதா ஒரு காரணம் இருக்குமா... அது அவன் சொல்றபடி கேட்கலன்னா செம அடி கொடுப்பான்!

யாரும் வேண்டாமென உள் புறம் தாழிட்டு விட்டு இருக்கும் நமக்கு சில நேரம் வெளிப்புறமும் தாழிடப்படலாம் என்பது தெரிய வருவதில்லை.

- வடுவூர் ரமா

கொஞ்சம் நகைச்சுவை!

- விக்னேஸ்வரி சுரேஷ்