வெள்ளரிக்காய்



பசியோடு இருப்பவருக்கு வயிற்றை நிரப்பும். பசியே இல்லாதவருக்கு பசியைத் தூண்டும். தேவைக்கேற்ப இரண்டாகவும் செயல்படுகிற குளுகுளு காய் வெள்ளரி. பருமன் பிரச்னை, நீரிழிவு என நோய் பாதித்த வர்களுக்கும், சரும அழகையும் இளமையையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அழகுப் பிரியர்களுக்கும் முதல் சாய்ஸ் வெள்ளரிக்காய். ‘சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்’ என்பது இதன் சிறப்பாக இருந்தாலும், வெள்ளரிக்காயை முழுமையாக சமைத்தும் உண்ண முடியும் என்பது பலரும் அறியாத சேதி.

வில்லங்கமே இல்லாத வெள்ளரிக்காயின் அற்புதப் பலன்களைப் பற்றிப் பேசுவதுடன், அதை வைத்துச் செய்கிற சுவையான 3 ரெசிபி களையும் செய்து காட்டுகிறார் டயட்டீஷியன் ஷைனி எஸ்தர்.

‘‘வெள்ளரிக்காயை பெரும்பாலும் பச்சையாகவே உண்ணுவார்கள். இதை சாலட், ரைத்தா மற்றும் குழம்புகளில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய். இதன் விதை குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. வெள்ளரிக்காயில் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் வரும் வாய்ப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது என்று வலுவான ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளரிக்காய் உடல் சூட்டை உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் குறைக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள நீர் உள்ளடக்கம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.

வெள்ளரிக்காயில் Cucurbitacins என்னும் தாவர ஊட்டச்சத்துகள் உள்ளன.  சிறுநீரக கற்களைக் கரைக்கும் திறன் கொண்டது வெள்ளரிக்காய். மற்ற காய்களுக்கு தரும் முக்கியத்துவத்தை யாரும் வெள்ளரியின் நன்மைகளுக்கு தருவ தில்லை. இதில் தனித்தன்மையான ஊட்டச்சத்து கலவை உள்ளது. வெள்ளரிக்காயின் தாவர ஊட்டச்சத்தின் பட்டியலில் Cucurbitacins, Lignans மற்றும்  Flavonoids  ஆகியன முதல் இடத்தில் உள்ளன. இந்த மூன்று தாவர ஊட்டச்சத்துகள் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் (Antioxidant),  Antiinflam matory மற்றும் Anticancer  திறன் கொண்டவை.

ஊட்டச்சத்துகள் நிறைந்த வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய் குறைந்த கலோரிகள் கொண்டது. இதில் பொட்டாசியம் அதிகம். பொட்டாசியம் உடலுக்கு மிகவும் தேவையானது. இது இதயத்துக்கு நன்மை செய்யக்கூடியதுமான எலெக்ட்ரோலைட். இதனால் இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். பீட்டா கரோட்டின் (Beta Carotene), வைட்டமின் A, C, Zeaxanthin, லியுடின் (leutin) ஆகிய சத்துகளையும் கொண்டது. இதில் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான அளவுக்கு வைட்டமின் ரி உள்ளது. அல்சீமர் நோய் உள்ளவர்களுக்கு மூளையில் ஏற்படும் நரம்பு சேதத்தைக் குறைக்கும்.

ஆரோக்கிய நலன்கள்

உடல் குளிர்ச்சி: வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இதனால் உடலில் உள்ள தேவை இல்லாத நச்சுப் பொருட்கள் வெளியேறும். ஒரு நாளைக்குத் தேவையான எல்லா வைட்டமின்களும் இதில் உள்ளன. வெள்ளரிக்காயின் தோலில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், தோலுடன் உண்ணுவது நல்லது. தொற்று நோய்களை வர விடாமல் தடுக்கும் தன்மையும் இதற்கு உள்ளதாக பல ஆராய்ச்சிகளில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளை ஆரோக்கியம்

வெள்ளரிக்காயில் fisetin என்னும் என்சைம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு தேவையானது. இது நரம்பு அணுக்களைப் பாதுகாத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். இது ஞாபக மறதியைத் தடுக்கும்.

வாய்க்கு புத்துணர்வு

வெள்ளரித் துண்டை வாயின் மேல் பகுதி யில் வைத்தால், அது தேவை இல்லாத கிருமி களை கொன்று வாய் துர்நாற்றத்தை தடுக்கும்.

மன அழுத்தத்துக்கு...

வெள்ளரிக்காய் பி வைட்டமின்கள் நிறைந்தது. வைட்டமின் பி1, வைட்டமின் பி5 மற்றும் பயோடின் (Biotin) நிறைந்தது. இந்த வைட்டமின்கள், பதற்றம் போன்ற உணர்வுகளை குறைத்து, மன அழுத்தத்துக்கு காரணமான சேதத்தைத் தவிர்க்கும்.

ஜீரணத்துக்கு...

வெள்ளரிக்காய், தண்ணீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இவை இரண்டும் ஆரோக்கியமான செரிமானத்துக்கு தேவையானவை. வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும். அதை போலவே வெள்ளரிக்காய் பணிபுரியும். வெள்ளரிக்காயின் தோலில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல்
பிரச்னையை தடுக்கும். இதனால் உணவு சரியாக ஜீரணமாகும்.

ஆரோக்கியமான எடையை பராமரிக்க...

வெள்ளரியில் குறைந்த கலோரிகளே உள்ளது. அதனால் இது வயிற்றை நிறைக்கும் சிற்றுண்டி. இதில் இருக்கும்   நார்ச்சத்து செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுப்பதால் வயிறு காலியாக இருக்காது. எனவே நாம் வேறு எதுவும் உண்ண மாட்டோம். இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

வெள்ளரிக்காயில் சிலிக்கா உள்ளது. இது மூட்டு வலியை தடுத்து மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தடுக்கும். உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து மூட்டு வலி வராமல் தடுக்கும்.

சருமம்  மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு...

வெள்ளரிக்காயின் தோலை, சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயில் தோலுக்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிகான் போன்ற தாதுப் பொருட்கள் நிறைந்து உள்ளன. வெள்ளரிக்காய் இறந்த தோலுக்கு மீண்டும் உயிர் தரும் திறன் கொண்டது. இது தோலை உறுதியாக்கும் தன்மை கொண்டது. தோலை வெண்மையாக்கும் திறன் மற்றும் பளபளப்பாகும் திறன் கொண்டது. வெள்ளரிச் சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்துக்கு பிறகு முகத்தை கழுவினால், முகம் புத்துணர்வான தோற்றம் பெறும். வெள்ளரிக்காய் துண்டை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் வீக்கம் குறைந்து விடும்.

இதில் உள்ள சிலிகான், சல்பர், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் முடி வளர்ச்சியை தூண்டி, முடியை உறுதியாக்கும். ஒரு கிளாஸ் வெள்ளரிச் சாறு ஒரு நாளைக்கு பருகி வந்தால் அது முடி உதிர்வதைக் குறைக்கும். முடியை வெள்ளரிச் சாறில் கழுவினால், அது கூந்தலுக்கு மென்மையான மற்றும் பளபள தோற்றத்தை தரும்.

பக்க விளைவுகள்

வெள்ளரிக்காயை அளவுக்கு மீறி உட்கொண்டால் அது, வாயை சுற்றி ஒவ்வாமை, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளரியில் உள்ள ஒருவித என்சைமான Cucurbitacinஐ அதிகமாக உட்கொண்டால் வாயு மற்றும் அஜீரணப் பிரச்னை களைத் தரும். வெள்ளரியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும். இதனால் முடி உதிர்தல் ஏற்படும்.

ஸ்ட்ராபெரி - வெள்ளரி ஜூஸ்


என்னென்ன தேவை?

ஸ்ட்ராபெரி - 6,
வெள்ளரிக்காய் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டவை ),
ஆப்பிள்-  1, 
கேரட் - 2 (தோல் சீவப்பட்டது).

எப்படிச் செய்வது?

எல்லாவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டி ஜூஸை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

வெள்ளரிக்காய் மசாலா சப்ஜி

என்னென்ன தேவை?

நடுத்தர சைஸ் வெள்ளரி -  2,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை -  சிறிதளவு,
புளி - சிறிதளவு,
தக்காளி (நறுக்கியது) -   1/2 கப்,
துருவிய தேங்காய்   - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் -  2 சிட்டிகை,
கடுகு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்,
கோதுமை மாவு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

சிறிதளவு தண்ணீரில் எல்லா மசாலா தூள்  களையும் சேர்த்து கலந்து அதை பேஸ்ட் போன்ற பதத்துக்கு செய்து வைத்துக்கொள்ளவும். வெள்ளரியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். அந்த கலவையுடன் புளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

தக்காளி, வெள்ளரிக்காய், தேங்காய்,  கொத்தமல்லி சேர்த்து சிறிது சூட்டில் பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.வெள்ளரி வெந்த பிறகு மூடியை திறக்கவும்.பின்னர் உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும். சிறிது  கோதுமை மாவு தூவி, நன்கு கலந்து கொள்ளவும்.கலவையில் உள்ள கூடுதலான தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். சூடாக சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.

வெள்ளரிக்காய் தக்காளி குழம்பு


என்னென்ன தேவை?


வெள்ளரிக்காய்  - 2 கப் (சிறு துண்டுகள்),
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம் (பெரியது) - 1 (துண்டு துண்டாக நறுக்கியது),
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
தக்காளி - 2,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - அழகுப்படுத்துவதற்காக.

தாளிக்க:


எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம்-  1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில்  எண்ணெயை சூடாக்கவும். தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கவும். சிறிது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும்.

1/2 கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகரித்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குளிர்ந்த பிறகு, மூடியை திறந்து அதில்  தண்ணீர் இருந்தால், அந்த தண்ணீர் வற்றும் வரை சமைக்க வேண்டும்.இறுதியாக கொத்தமல்லி இலைகளை அழகுப்படுத்த சேர்த்துப் பரிமாறவும்.

எப்படித் தேர்வு செய்வது?/ பத்திரப்படுத்துவது?

வெள்ளரியின் நிறம், பச்சையாக இருக்க வேண்டும். அது உறுதியாகவும் எந்தக் கீறலும் இல்லாமலும் இருக்க வேண்டும்.வெள்ளரி மஞ்சள் நிறமாகவோ அல்லது அதில் புள்ளிகள் இருந்தாலோ, அதனை வாங்கக்கூடாது. வெள்ளரியை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைக்கலாம். வெள்ளரியின் தோலை சீவிய பிறகு காற்று புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். வெள்ளரியில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அதனை வாங்கிய இரண்டு நாட்களுக்குள் உண்ண வேண்டும்.