மலாலா மேஜிக்-12



நிரந்தரப் போர் தற்காலிக அமைதி

கவலைப்பட வேண்டாம், தாலிபான்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர்! வெளியேறிச் சென்றவர்கள் அனைவரும் இனி பத்திரமாகத் திரும்பிவரலாம் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து ஒரு வாரம் கழிந்த பிறகே மெல்ல மெல்ல ஸ்வாட் பள்ளத்தாக்கு உயிர் பெற்று எழுந்தது. 24 ஜூலை 2009 அன்று மலாலாவும் அவருடைய குடும்பத்தினரும் மூன்று மாதப் பிரிவுக்குப் பிறகு தங்கள் வீட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். நம்மைப் போலவே அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பி வருவார்களா? ஒருவருக்கும் தெரியாது. முதலில் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு நண்பர்களைத் தேட வேண்டும். பிறகு, பள்ளிக்கூடம். அதற்குப் பிறகு, தோட்டம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பூத்துக்குலுங்கிய மலர் செடிகள் மிதிபட்டிருக்குமா? மரங்களில் குண்டுகள் பாய்ந்திருக்குமா? மனிதர்களைப்போல் இயற்கையை இடமாற்றம் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. பிடுங்கிச்சென்று வேறோரிடத்தில் நட்டால் அந்தச் செடி மீண்டும் பழையபடி பூத்துக்குலுங்கும் என்று யாரும் உத்தரவாதம் தரமுடியாது. எத்தனைமுறை பறித்து வீசினாலும் எவ்வளவுதான் சிதறடித்தாலும் வந்து விழும் இடத்தில் அவசர அவசரமாக வேர் கொண்டு, விடாப்பிடியாக உயிர்த்திருக்க செடிகளும் மரங்களும் என்ன மனிதர்களா?

நடந்து கொண்டிருந்த அப்பாவின் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டதும் பார்வையைத் திருப்பிக்கொண்டார் மலாலா. சிலருடைய வீடுகளில் சில கற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இன்னும் சில வீடுகள் தூசியாகிப் பறந்து காற்றோடு கலந்துவிட்டிருந்தன. தன் வீட்டைக் கண்டதும் கன்றுக்குட்டியைப்போல் தாவி குதித்து உள்ளே ஓடினார் மலாலா. நிதானமான அப்பாவும் கூட பரபரப்புடன்தான் விட்டுச்சென்றதைக் காண விரைந்தார். அம்மாவுக்கு அவருடைய பொருட்கள். தன் புத்தகப் பையைப் பாய்ந்து எடுத்து முத்தமிட்டுவிட்டு திறந்து பார்த்தார். முழு திருப்தியில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்து சரிபார்த்த பிறகே மூச்சுவிட முடிந்தது.

அம்மா, அப்பாவின் உடைமைகள் அனைத்தும் போட்டது போட்ட இடத்தில் இருந்தன. பாவம், அடல். எல்லோரும் வீட்டுக்குள் ஓடும்போது தோட்டத்துக்கு ஓடிச்சென்றது அவன் மட்டும்தான். உடனே அழவும் ஆரம்பித்துவிட்டான். அவனுடைய செல்லக் கோழிக்குஞ்சுகள் இறந்து, காய்ந்து, பஞ்சு துகள்களாக மாறிப் போயிருந்தன.அருகில், எதிரில் சில கட்டிடங்கள் சாய்ந்திருந்தபோதும் பள்ளிக்கூடம் அப்படியே இருந்தது  ஆச்சரியம்.  ஜியாவுதினும் மலாலாவும் உள்ளே சென்று பார்வையிட்டனர். சுவற்றில் இருந்த ஓட்டைகள்தான் மலாலாவின் கண்களுக்கு முதலில் தெரிந்தன. குண்டுகள் பாய்ந்ததால் ஏற்பட்ட ஓட்டை என்பது சொல்லாமலேயே விளங்கியது.

அப்படியானால் இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உள்ளே ஆயுதங்கள் நுழைந்திருக்கின்றன. இங்கிருந்தபடி சுட்டிருக்கிறார்கள். அந்தக் குண்டுகள் யார்மீதாவது பாய்ந்திருக்குமா? யார் உயிரையாவது குடித்திருக்குமா? அமைதியான பள்ளிக்கூடமும்கூட போரின் ஒரு பகுதியாக, கொலைக் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது மலாலாவுக்கு வருத்தத்தை  ஏற்படுத்தியது.பலகையில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. நெருங்கி சென்று வாசித்துப் பார்த்தார். ’வாழ்க பாகிஸ் தான், வாழ்க ராணுவத்தின் வீரம்’ என்றெல்லாம் புகழ் வாசகங்கள் கிறுக்கப்பட்டிருந்தன. ஓ, அப்படியானால் இந்தப் பள்ளிக்கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் ராணுவத்தினரா? சில நோட்டுப் புத்தகங்களில் அவர்கள் காதல் கவிதைகள் கூட கிறுக்கி வைத்திருந்தார்கள். தரை முழுக்க கால் தடங்கள், குண்டுகள், குப்பைகள். அழிவு இங்கிருந்து தொடங்கியதா அல்லது இங்கிருந்து முடித்துவைக்கப்பட்டதா?  

ஜியாவுதின் குனிந்து ஒரு கடிதத்தைக் கண்டெடுத்தார். ஒரு பாகிஸ்தானிய வீரனின் மொட்டைக் கடுதாசி அது. நடந்த அனைத்துக்கும் ஸ்வாட் மக்களை அவன் குற்றம்சாட்டியிருந்தான். ‘உங்களுடைய கவனக்குறைவால் தான் தாலிபான்கள் இங்கே அதிகரித்துவிட்டனர். அவர்களை அழிக்கும் போராட்டத்தில்
அநியாயமாக எங்கள் வீரர்கள் உயிர் துறந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் நீடூழி வாழ்க!’ ஜியாவுதினுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. முதலில் தாலிபான்கள் நம்மை ஈர்க்க முயன்றார்கள். பிறகு கொல்லத் தொடங்கினார்கள். இப்போது ராணுவமும் நம்மைத் திட்டுகிறது. திரும்பும் பக்கமெல்லாம் இடிபட்டுக்கொண்டு வாழுமாறு நாம் சபிக்கப்பட்டிருக்கிறோம் போலும்.

வகுப்பறையின் ஒரு மூலையில் ஆடுகளின் வெட்டப்பட்ட தலைகள் அழுகிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து பின்வாங்கினார் மலாலா. ராணுவத்தினர் இங்கே சமைத்துச் சாப்பிட்டிருக்க வேண்டும்! கடவுளே, காற்றில் கலந்திருக்கும் இந்த ரத்த வாடை எப்போது மறையும்? எதைக்கொண்டு அதனை மறைப்பது?இறங்கி வீதியில் நடக்கத் தொடங்கியபோது காதும் மனதும் ஒருசேர அதிரும் வண்ணம் செய்திகள் வந்து குவியத் தொடங்கின. இதோ இங்கே சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கே ஓருடல் அழுகித் தொங்கிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபஸ்லுல்லாவின் ஆட்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவருக்கு உதவி செய்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஃபஸ்லுல்லாவை மட்டும் இன்னும் பிடிக்கமுடியவில்லை. தலைமறை வாகிவிட்டார். மலாலாவுக்குப் புரியவில்லை. முக்கியமான தலைவர் தப்பிவிட்டார் என்றால் ஸ்வாட் பள்ளத்தாக்கு எப்படி பாதுகாப்பானதாக இருக்கமுடியும்? அமைதி திரும்பிவிட்டது என்று எப்படி நிம்மதியடைய முடியும்? அமைதிக்கு இங்கே தற்காலிக வாசம்தான். நிரந்தரமாகவே. தொலைந்த அமைதியின் துயரத்தைவிட நிலவும் அமைதியின் கம்பீரம் உயர்ந்தது. இந்தப் புரிதல் மட்டும் இருந்துவிட்டால் வேதனைகளை நினைவு அடுக்குகளில் இருந்து உந்தித் தள்ளிவிடுவது சாத்தியம். பிறகு வழக்கம்போல் சுவாசிக்கலாம். வாழ்க்கை இயல்பானதாகிவிடும். ஸ்வாட் பள்ளத்தாக்கு மீண்டும் அழகாகிவிடும். எனவே அடல், இறந்த கோழிக்குஞ்சுக்காக வருந்தாதே; நம்பிக்கையுடன் இறக்கைகளை விரித்து பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்து உத்வேகம் கொள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது மலாலாவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மணி அடிக்கும் வரைகூட காத்திருக்க முடியவில்லை. வகுப்பறைக்குச் செல்லவும், தோழிகளைப் பார்க்கவும், கதை பேசவும் (ஒவ்வொருவரிடமும் சில ஆயிரம் கதைகளாவது இருக்காது?) துடிதுடித்துக்கொண்டிருந்தார். மோனிபா தொடங்கி அவ்வளவு பேரும் திரும்பி வந்ததைக் கண்டு கண்கள் முழுக்க ஆனந்தம். தோழிகளுக்கும் மலாலாவை மீண்டும் கண்டதில் ஆனந்தம். ஆனால், ஆனந்தத்தோடு சேர்த்து ஒருவித பிரமிப்பும் அவர்கள் பார்வையில் வெளிப்பட்டது. காரணம், அவர்கள் கண்டது பழைய மலாலாவை அல்ல. பிபிசி மலாலா வை. தொலைக்காட்சி மலாலாவை. வானொலி மலாலாவை. இந்த மலாலா இன்னமும் என்னுடைய தோழிதானா? பழையபடி மீண்டும் நெருங்கி பழகமுடியுமா?

ஒருவேளை வாய்விட்டுக் கேட்டிருந்தால், மலாலா அவசரமாக மறுத்திருப்பார். ஐயோ, நான் பழைய மலாலாதான்; பார்த்தால் தெரியவில்லையா என்று கையைப் பிரித்து அடித்து சத்தியம் செய்திருப்பார். வாய்விட்டுச் சிரித்திருப்பார். ஆனால், தோழிகள் எப்படியும் நம்பியிருக்கப்போவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை மலாலா சற்றே விலகிதான் போயிருந்தார். தொட்டுவிடக்கூடிய அளவுக்கு அருகில் இருந்தாலும் தொடமுடியாத உயரத்துக்கு அவர் சென்றுகொண்டிருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது.

சில தினங்களில் இஸ்லாமாபாத் செல்வதற்கு மலாலாவுக்கு வாய்ப்பு வந்தது. தாலிபான் பிடியில் இருந்த குழந்தைகள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தலைநகருக்கு அழைத்துச் சென்று, ஊர் சுற்றிக் காண்பித்து, சில பயிற்சிப் பட்டறைகளிலும் அவர்களைக் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்பது ஏற்பாடு செய்தவர்களின் திட்டம். மலாலாவுடன் சென்றிருந்த பலர் அப்போதுதான் முதல்முறையாக பள்ளத்தாக்குக்கு வெளியில் பயணம் சென்றிருந்தனர். இது இஸ்லாமாபாத் அல்ல, நியூ யார்க் என்று சொல்லியிருந்தால் ஓ, அப்படியா என்று அவர்கள் நம்பியிருப்பார்கள்.

பயணத்தின் ஒரு பகுதியாக, ராணுவ ஜெனரல் ஒருவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது மலாலா  வரிசையாகக் கேள்வி கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஜெனரல் ராணுவத்தின் மகத்தான பணிகள் குறித்தும் மாபெரும் வெற்றிகள் குறித்தும் குழந்தைகளுக்கு கதை கதையாக அடுக்கிக்கொண்டே போனார். குழந்தைகளே, ஏதாவது கேள்வி இருக்கிறதா என்றதும் கையை உயர்த்தி முதலில் எழுந்து நின்றார் மலாலா.

படபடவென்று குண்டுகள்போல் பாய்ந்து வந்தன அவர் கேள்விகள். ராணுவத்தின் மகத்தான பணிகள் பற்றி சொன்னீர்கள், நன்றி. தலைவன் ஃபஸ்லுல்லாவைப் பிடிக்காமல் தாலிபான்களை முழுமையாக வென்றெடுப்பது சாத்தியமில்லையே! அவர் இப்போது எங்கிருக்கிறார்? பாகிஸ்தானிலா, ஆப்கானிஸ்தானிலா? அவரை எப்படிப் பிடிக்கப்போகிறீர்கள்? எப்போது? பிறகு, எங்கள் பள்ளத்தாக்குக்கு வந்திருந்து போரிட்டீர்கள். நிறைய வீடுகளும் கட்டிடங்களும் சாய்ந்து கிடக்கின்றன. எல்லாம் முடிந்தது, அமைதி திரும்பிவிட்டது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

குண்டு வீசி தகர்ப்பது மட்டும்தான் ராணுவத்தின் பணியா? உடைந்ததைத் தூக்கி நிறுத்தப் போவது யார்? நடந்த தவறுகளைச் சரிசெய்யப் போவது யார்? அது ராணுவத்தின் பணி அல்ல என்றால் வேறு யாருடைய பணி? சற்றே திகைத்து பின்வாங்க நேரிட்டது என்பதாலும் ஒரு கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை என்பதாலும் அந்த ஜெனரல் கடினமான, குழப்பமான வார்த்தை களைக் கொண்ட நீள நீளமான வாக்கியங்களை வீசியெறிந்துவிட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார்.

‘யுனிசெஃப்’ ஏற்பாடு செய்திருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான உதவி அமைப்பில் அங்கத்தினராகப்  பங்கேற்க ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த அறுபது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மலாலாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். பதினோரு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சிறுவர்கள். அந்த அமைப்பின் (டிஸ்ட்ரிக்ட் சைல்ட் அசெம்பிளி, ஸ்வாட்) முதல் சந்திப்பு நிகழ்ந்தபோது அரசியல்வாதிகள், போராளிகள் என்று பலரும் பங்கேற்றனர். ஸ்பீக்கர் பதவிக்கு மாணவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அறுதிப் பெரும்பான்மை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் மலாலா. 

‘மலாலா’ என்று அல்ல, ‘மேடம் ஸ்பீக்கர்’ என்றுதான் பங்கேற்பாளர்கள் அனைவரும் இனி  அவரை அழைக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் அவை கூடும். சிறு மேடையில் நடுநாயகமாக மலாலா அமர்ந்திருப்பார். அவர் தலைமையில்தான் விவாதங்கள் நிகழும். அவர் சம்மதம் பெற்ற பிறகே தீர்மானங்கள் நிறை வேற்றப்படும். எளிய, சிறிய அமைப்புதான். ஆனால், இந்தக் குழந்தைகள் விவாதித்து கொண்டுவந்த தீர்மானங்கள் ஒன்பது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப் படவேண்டும்; ஆதரவற்ற, வீதியோர குழந்தைகள் நலனுக்கு நன்கொடையும் ஆதரவும் திரட்ட வேண்டும்; தாலிபான்கள் வீழ்த்திய பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் மறுகட்டுமானம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக உருப்பெற்றன. அவை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை அவர்கள் பரிசீலித்ததோடு மட்டுமல்லாமல், செயல்படுத்தவும் செய்தனர்.

கிட்டத்தட்ட அதே சமயம், பிரிட்டிஷ் இதழியல் நிறுவனம் ஒன்றில் (இன்ஸ்டிடியூட் ஃபார் வார் அண்ட் பீஸ் ரிப்போர்ட்டிங்) இணைந்து பத்திரிகை எழுத்தின் அடிப்படைகள் சிலவற்றைக் கற்க ஆரம்பித்தார் மலாலா. எதற்காகப் பத்திரிகை எழுத்து கைவரவேண்டும்? அது முக்கியம் என்று ஏன் நினைக்கவேண்டும்? எதற்காக விநோதப் பெயர்களைக் கொண்டுள்ள அமைப்புகளில் இணைந்துகொள்ள வேண்டும்? எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறுகுறுப்பு ஏன் உள்ளுக்குள் எழுகிறது? எதற்காக ஒரே சமயத்தில் இவ்வளவு பயிற்சிகள்? எதற்காக இத்தனை மெனக்கெடல்? மலாலாவின் ஒவ்வொரு செயலையும் வியப்புடன் நோக்கும் தோழிகளுக்கு மட்டுமல்ல, மலாலாவுக்குமேகூட அப்போது எதற்கும் விடை தெரியாது. இவை அனைத்தும் தன்னை எங்கே இட்டுச்செல்கிறது என்பதை அவர் அப்போது உணரவில்லை.

ஜூலை 2010ல் மலாலாவுக்கு பதிமூன்று வயது தொடங்கியபோது, சில்லென்ற காற்றுடன் வானம் திறந்து மழை பொழியத் தொடங்கியது. மழை, பெரும் மழையாகி, அடர்த்தி அதிகரித்துக்கொண்டே போக, தடுப்புகள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் பெருகத் தொடங்கியது.  பள்ளிக்கூடங்கள் அவசரமாக மூடப்பட்டு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மழை எப்போது ஓயும், ஏன் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது, ஏன் பள்ளத்தாக்கு இப்போது மிதந்துகொண்டிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால், சூழலியல் ஆய்வாளர் கள் இது பற்றி முன்கூட்டியே எச்சரித்திருந்தனர். தாலிபான்கள் கட்டுப்பாடின்றி அதிக அளவிலான மரத்தை  வெட்டி கடத்திக் கொண்டிருந்ததை அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்கள். இந்தக் கடத்தல் நிறுத்தப்படாவிட்டால் வெள்ளம் பெருகும் அபாயம் ஏற்படும் என்றும் பதிவு செய்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் யார் படிப்பது, யார் நடவடிக்கை எடுப்பது?

ஸ்வாட் மட்டுமல்ல, பாகிஸ்தான் முழுவதிலும் அழிவின் தடங்கள் நீண்டு படர்ந்திருந்தன. சாலைகள், வீடுகள், கட்டிடங்கள், வயல்வெளிகள் அனைத்திலும் சேறும் சகதியும் திரண்டிருந்தன. வீட்டுக்குள் நீர். வீட்டுக்கு வெளியில் நீர். மரங்கள், வீட்டுப் பொருட்கள், கால்நடைகளின் சடலங்கள் அனைத்தும் நீரில் மிதந்து வந்தன. சில பகுதிகளில் ஒட்டுமொத்த கிராமமும் வேரறுக்கப்பட்டதாகவும் தண்ணீரில் மிதந்து சென்றதாகவும் செய்திகள் வந்தபோது மலாலா அதிர்ச்சியில் உறைந்துபோனார். பெருமிதத்துக்குரிய சிந்து நதி தனது சீற்றத்தை முதல்முறையாக வெளிப்படுத்தியிருந்தது.  இமயமலையில் தொடங்கி பஞ்சாப், கராச்சி, அரபிக் கடல் என்று அமைதியாக, அழகாக கிளைகளைப் பரப்பிக்கொண்டு விரிவடைந்து செல்லும் அந்த நதி இப்போது ஆயிரம் கைகளால் ஓங்கி அறைந்திருக்கிறது.  மூவாயிரம் ஆண்டுகளாக சிந்து நதி கவனத்துடன் காத்து வந்த அமைதி ஒரு கணம் தடம் புரண்டிருக்கிறது. அந்த ஒரு கணத்தில் இரண்டாயிரம் உயிர்கள் மின்னி மறைந்துவிட்டன.  பள்ளிகளை இருள் விழுங்கிவிட்டது.

கணக்கில்லா வீடுகள் சர்க்கரைக்கட்டிகளாக நீரில் கரைந்துவிட்டன. மலாலா குஷால் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பார்த்தார். கால்களை மட்டுமல்ல, கண்களையும் கூட பதிக்க முடியவில்லை. வகுப்பறையே சகதிக் கடலில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பலவீனமாகச் சுருண்டு கிடந்தது இந்தப் பள்ளி. அதற்குக் காரணம் மனிதர்கள் தொடுத்த போர்.

இது இயற்கை தொடுத்த போர். இயற்கையைக் கண்டு மனிதர்கள் கற்கவேண்டியது போய், மனிதர்களிடம் இருந்து இயற்கை கற்க ஆரம்பித்துவிட்டதா? ஆக்கும் திறனைத் தொலைத்துவிட்டு அழிக்கும் ஆற்றலை அது பெற்றுவிட்டதா? மகிழ்விக்கும் மனநிலையைத் துறந்துவிட்டு துன்புறுத்தும் வழக்கத்தை அது பழகிக்கொண்டுவிட்டதா? மனிதர்களுடன் இயற்கை கைகுலுக்கிக்கொண்டுவிட்டதா? அந்தக் கைகுலுக்கலில் மனித இயல்புகள் நோய்க்கிருமிகள்போல் அதற்குத் தொற்றிக்கொண்டுவிட்டதா? இயற்கையை இடம் பெயர்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியது தவறு. வாழ்வதில் மட்டுமல்ல, கனவு காண்பதிலும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கனவுகள் நிஜமாகக்கூடும்! அதைவிடப் பெரிய அபாயம் வேறு உண்டா?

‘‘வகுப்பறையே சகதிக் கடலில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பலவீனமாகச் சுருண்டு கிடந்தது இந்தப் பள்ளி. அதற்குக் காரணம் மனிதர்கள் தொடுத்த போர். இது இயற்கை தொடுத்த போர். இயற்கையைக் கண்டு மனிதர்கள் கற்கவேண்டியது போய், மனிதர்களிடம் இருந்து இயற்கை கற்க ஆரம்பித்துவிட்டதா?’’

வகுப்பறையின் ஒரு மூலையில் ஆடுகளின் வெட்டப்பட்ட தலைகள் அழுகிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து பின்வாங்கினார் மலாலா. ராணுவத்தினர் இங்கே சமைத்துச் சாப்பிட்டிருக்க வேண்டும்! கடவுளே, காற்றில் கலந்திருக்கும் இந்த ரத்த வாடை எப்போது மறையும்?     

(மேஜிக் நிகழும்!)