பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் நியோகா



-  மகேஸ்வரி

ஒரு பெண் தன் கணவனை இழந்துவிட்டால், அவள் எந்த வயதை உடையவளாக இருந்தாலும், கணவனை இழந்தவளாகவே கடைசிவரை வாழ்ந்து, ஆண் துணையற்றவளாய், ஆணைப் பற்றி சிந்திக்காதவளாய், அடிப்படை உடல் தேவை குறித்த விருப்பமற்றவளாய் சமூகத்தின் முன் நடித்து, இறுதி மூச்சுவரை  வாழ்ந்து மடியவேண்டும். கணவனை இழந்த பெண் மீது இச்சமூகம் கட்டமைத்திருக்கும் கட்டுப்பாடுகள் நெருக்கடி நிறைந்தது. கலாச்சாரம், பண்பாடு எனும் போர்வையில் திணிக்கும் விசயங்களும் ஏராளம்.

தேவையற்ற அழுத்தங்களை  துணையை இழந்த பெண்கள் மீது வலிந்து திணித்து, பெண்களின்  உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாய், புரிந்தாலும், சமூகம் தரும் அழுத்தத்தால் அவற்றை மீறத் துணிவற்றவர்களாக இருப்பவர்களே இங்கு ஏராளம். ஈழத்துப் போரில் கணவனை இழந்தும், கடத்தப்பட்ட நிலையிலும் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தன் கணவனுக்கு என்ன நடந்ததென தெரியாமல், பல பெண்களின் துணைகள் காணாமல் போனவர்களாகவே இருக்கின்றார்கள். 

அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? வருவார்களா, வரமாட்டார்களா? போன்ற எண்ணற்ற விடைதெரியாக் கேள்விகளைச் சுமந்தபடி ஈழத்துப் பெண்கள் பலர், ஆண்டுகள் கடந்தும் காத்திருக்கிறார்கள். போரில் காணாமல் போனவர்கள் அதிகம் பேர் ஆண்களாக இருக்கின்றபோது பெண்கள் பொருளாதார நெருக்கடிகளையும், சமூகச் சுரண்டல்களையும், பாலியல் ரீதியான அத்து மீறல்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உள்மன உணர்வையும், அவள் சந்திக்கும் சிக்கல்களையும், தன் இறுக்கத்தையும் மீறி, தன் வாழ்க்கை குறித்து அவள் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதையும் மெல்லிய உணர்வுகளுடன் இறுதியில் அதிரடியாக வெளிப்படுத்துவதே ‘நியோகா’குறும்படம். இப்படம் இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லாஸ் ஏஞ்செல், ஃப்ளோரிடா, இந்தோனேஷியா, இலங்கையில் (யாழ்ப்பாணம்) நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் நார்வே, டொரன்டோவின் யோர்க் திரையரங்கிலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றிருக்கின்றது.

ஜகார்த்தா பெண்கள் சர்வதேசத் திரைப்பட விழாவில் சொர்ண விருதையும் பெற்றிருக்கிறது. தன் கணவன் கடத்தப்பட்ட நிலையில், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் குடியேறிய தமிழ் குடும்பம், ஆண்டுகள் கடந்தும், கடத்தப்பட்டவனைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில், தன் அகமன உணர்வுகளை அடக்கி, கணவனை எதிர்பார்த்து, வீட்டு வேலைகள், தொலைக்காட்சி, செடி கொடி, மரங்கள், பூக்களுடன் ஒரு கட்டுப் பாட்டுக்குள் வாழும் மலர் பாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது.

மலருக்கு எழும் உடல் சார்ந்த தேவைகள், குறித்த வெளிப்பாடுகள் குறியீடுகள் வழியே ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலரின் இளைய சகோதரன் ஜீவாவும், அவரின் மனைவியும் மலரின் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். மலரின் பெற்றோர், மலரின் கணவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மலரின் சகோதரனின் மனைவி, மலரை தொடர்ந்து கவனித்து, அவரின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளும், விசாலமான சிந்தனை கொண்ட பெண்ணாக இருக்கிறார்.

மலருக்கு மறுமணம் செய்து வைக்கலாம் என்ற யோசனையை பெற்றோரிடம் அவர் முன்வைக்கின்றார். பெற்றோர் வழக்கம்போல் மலருக்கு இதெல்லாம் பிடிக்காது, இப்படிப் பேசுவது தெரிந்தாலே செத்துப்போய்விடுவாள் என்று சொல்லிக் கடந்துவிடுகிறார்கள். பிற்போக்கான மனநிலையில் அவர்களின் கருத்தை மலரின் மீது வலிந்து திணிக்கிறார்கள். மனித உணர்வுகளின் இயல்பான தளங்களில் நின்று யோசிப்பதற்குக் கூட அவர்கள் முயற்சிக்கவில்லை.

நீண்ட நாள் கனடாவில் வாழ்க்கை போகும் போக்கில் வசித்து வரும் மலரின் சகோதரன், தன் மனைவி தன் அக்கா மலரின் மறுமணம் குறித்து அவனிடம் பேசும்போது, “மலர் அக்காவிற்கு தெரிந்தால் செத்துவிடுவாள்” என்கிறான். ‘‘இதென்ன உங்கள் பேமிலி டயலாக்கா” என அவரின் மனைவி கிண்டலடிக்கிறார். “அக்காவை வேலைக்கு அனுப்பலாமே, அவரை இந்தச் சமூகத்துக்கு ஏற்றது போல் நாம் பழக்கி எடுக்கலாமே” என்று கேட்கும் போது ‘‘மலர் அக்காவுக்கு இதெல்லாம் பிடிக்காது’’ என்கிறான்.

“அவரை வேலைக்கு அனுப்பினால் அவர் யாரையாவது காதலித்துவிடுவார் என்று பயப்படுகிறீர்கள்தானே?” என ஜீவாவின் மனைவி முகத்திற்கு நேராக கேட்கும்போது, ஜீவா அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறான். சமூகம் தரும் அழுத்தத்திற்குபின் மறைந்திருக்கும் கசப்பான உண்மையை தட்டிப்பார்க்கும் கேள்வியாக மலரின் தம்பி மனைவியின் கேள்வியும், நக்கலும், அணுகுமுறையும் படம் முழுவதும் தொடர்கிறது.

தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத குடும்பத்தை மீறி ஏதோவொரு வகையில் மலர் கர்ப்பம் தரிக்கின்றார். ஆனால், எந்த வழியில் என்று தெரிவிக்கப்படவில்லை. அதை நம் யூகத்திற்கே விடுகிறார் இயக்குநர். தான் கர்ப்பம் தரித்திருப்பதை குடும்பத்தினர் மத்தியில் மிகவும் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார். சில வருடங்களுக்குப்பின் கனடாவில் வாழ்க்கையோடு ஒன்றக்கூடிய உடையில், தன் மகளுடன் சிரித்துப் பேசியவாறு பூங்காவில் இருப்பதாகத் திரைப்படம் முடிகிறது.

‘நியோகா’ முழுநீளப்படத்தின்  திரைக்கதையை கருப்பி சுமதி என்கிற சுமதி பலராமனும், ஷோபாசக்தியும் எழுதியிருக்கிறார்கள். மலர் கர்ப்பம் தரிக்கும் விஷயத்தில் படத்தின் தலைப்பான ‘நியோகம்’ குறித்து யோசிக்கவேண்டியுள்ளது. நியோகம் என்பது கணவருடன் இணைந்து குழந்தையைப் பெற முடியாத ஒரு பெண், மற்றொரு இணையுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளுதலாகும்.

படத்தின் முடிவு குழந்தைப்பேறு மட்டுமே பெண்ணின் விருப்பமா என்ற வினாவை மனதில் எழுப்பினாலும், குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்வது மலரின் சுய விருப்பமாகக் கூட இருக்கலாம். மலரின் விசயத்தில் அது செயற்கை கருவூட்டலாகக்கூட இருக்கலாம். படத்தில் சில குறைகள் இருந்தாலும் பேசத் தயங்கும் விசயத்தை பேசத் துணிந்ததற்காக இயக்குநரை பாராட்டலாம்.

நியோகா என்பது பண்டைய இந்துச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் உறவு முறை. இந்து தர்மமான மநுஸ்மிருதியில் இம்முறை குறித்துச் சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற முடியாத கணவனைக் கொண்ட அல்லது கணவனை இழந்த பெண்ணொருத்தி வேறொரு ஆடவனோடு கூடி குழந்தையைப் பெற்றுக்கொள்ளலே இம்முறை. இந்து மதம் இதை ‘நியோகா தர்மா’ என்று கூறுகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களில் பலரின் பிறப்பும் அமைந்துள்ளது. மகாபாரதத்திலே திருதராட்டினன், பாண்டு, கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் எல்லோருமே இம்முறையிலேயே பிறப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆணுக்கு ஆண்மைக் குறை இருப்பின் வம்ச விருத்திக்காக அவனது மனைவியை வேறு ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளச் செய்வதன் மூலம் கருத்தரிக்க வைப்பது தான் நியோகா என்று சுருக்கமாகக் கூறலாம். ’மாதொருபாகன்’ நூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த வழக்கத்தைப் பற்றி எழுதியதால் தமிழ்நாட்டில்  பல தாக்குதல்கள் அவர் மீது நிகழ்த்தப்பட்டதை நாமறிவோம்.

க ருப்பி சுமதி இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிப்பவர். இதுவரை 6 குறும்படங்கள் மற்றும் சில சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி ஊடகத்திலும் பணியாற்றிய இவர் பெரும்பாலும் பெண்கள் பிரச்சனைகளை தமது படைப்பில் பதிவு செய்கிறார், ”நியோகா எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் உண்மைக் கதை” என்கிறார். ”அவள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக திரைப்படமாக்கினேன்.

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான நட்பில் பத்து விஷங்கள் இருந்தால் அதில் ஒன்று மட்டும்தான் பாலியல் தேவையாக இருக்கும். மற்ற ஒன்பது விஷயங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது, வெளியில் செல்வது, சினிமா பார்ப்பது, உரையாடுவது என எத்தனையோ விஷயங்கள் உண்டு. செக்ஸ் மட்டுமே  ஆணுக்கும் பெண்ணுக்குமான தேடல் அல்ல. போரால் இறந்த, காணாமல் போன, கடத்தப்பட்டு தங்கள் கணவனை இழந்து வாழும் பெண்கள் பிரச்சனைகள் இங்கு அதிகம் பேசப்படவில்லை.

புலம்பெயர்ந்து கணவனின்றி வாழும் ஒரு பெண் எமது கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வாழ நிர்பந்திக்கப்படுவதும், தனது சூழலுக்கும் மன உணர்வுகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் என்ன முடிவை எடுக்கிறாள், இந்த முடிவை எடுப்பதில் அவள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்கிறாள் என்பதே இந்தப் படத்தின் கரு.

கணவனை இழந்து வாழ்பவர்கள் சுகந்திரமாகச் சமூகத்தில் தனித்தே இருக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் பெரும் பட்டியலில் சேரும். அதேபோல் கணவனை இழந்து குடும்பத்துக்குள் வாழும் பெண்களுக்குக் குடும்ப அதிகாரம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத இயந்திரமாக அவர்களை நசுக்குவதை நடுக்கத்துடன் அவதானிக்க வேண்டியுள்ளது ” என்கிறார் சுமதி.