இருமனம் கொண்ட திருமண வாழ்வில்மகேஸ்வரி - 3

திருமணமாம்... திருமணமாம்...

பெண்ணிற்கும் சரி... பையனுக்கும் சரி... தங்கள் கல்யாணத்தைப்பற்றி  ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் மனதிற்குள் சிறகடிக்கும். தங்கள் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என எண்ணற்ற கற்பனைகளில் இளைஞர்கள் வலம்வர.. பெற்றோர்களுக்கோ நல்ல பையன் கிடைக்க வேண்டும், நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் போய், நல்ல கல்யாண மண்டபம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனைகளே இப்போது நகரங்களில் வாழும் மக்களின் சிந்தனைகளில் ஒன்றாய் இருக்கிறது.

அதுதான் உண்மை. திருமணம் என்றாலே திருமண மண்டபத்தை பிடிப்பதே இங்கு மிகப் பெரிய விஷயமாக உள்ளது. பெருநகர வாழ்வின் நெருக்கத்தில், கல்யாண மண்டபங்கள் அனைத்தும மிகப் பெரிய வணிகமயமான சூழலில் பிரமாண்டம் காட்டி நிற்கின்றது. முகூர்த்த தினங்கள் குறைவாகவும், திருமணங்கள் நூற்றுக்கணக்கிலும் உள்ள நிலையில், மண்டபங்கள் கிடைக்காமல் பெற்றோர் திணறும் நிலையும் இங்கே நிதர்சனம்.

ஒரு வருடத்திற்கு உள்ள கல்யாண தேதியில், அத்தனை மண்டபங்களும் முன் கூட்டியே நிரப்பப்பட்டு விடுகின்றன. இதனால் கல்யாணத்தை நிச்சயம் செய்தவர்கள் மண்டபம் கிடைக்காமல் அலையும் நிலை இங்கே கண்கூடு. முன்பெல்லாம் திருமணம் உறுதியானால் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமண மண்டபத்தை உறுதி செய்யக் கிளம்புவார்கள். ஆனால் இன்றைய நவீன யுகத்தில், ஒரு ஆண்டுக்கு முன்பே மண்ட பத்தை உறுதி செய்துவிட்டு, மண்டபம் கிடைக்கும் தேதியில் கல்யாணத் தேதியை முடிவு செய்கிறார்கள்.

பெரும்பாலான மண்டபங்கள் இந்த ஆண்டு முழுவதும் முன்பதிவு முடிந்த நிலையில், மண்டபமே கிடைக்காத நிலையில் பல மணமக்கள் மாதக்கணக்கில் காத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. திருமண மண்டபம் கிடைக்காத நிலை ஒரு பக்கம் என்றால், தாறுமாறாக ஏறிக் கிடக்கும் கல்யாண மண்டபங்களின் வாடகையும் மக்களை மூச்சு முட்டச் செய்கிறது.

சென்னையில் கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், தியாகராய நகர், அடையாறு, எழும்பூர் போன்ற முக்கியமான இடங்களில் உள்ள திருமண மண்டபங்கள் அனைத்தும், இந்த ஆண்டுடிற்கான முகூர்த்த தினங்கள் முழுதும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மண்டபம் கிடைக்காமல் அவதிப்படும், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள், வேறு வழியில்லாமல் கோயில்களில், சர்ச்சுகளில் வைத்து கல்யாணத்தை நடத்தி விடுகிறார்கள்.

அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு என மிக எளிமையாக நடந்து முடிந்து விடு கிறது இவர்களின் திருமணங்கள். தற்போதைய பொருளாதாரச் சூழலில், சாதாரண மண்டபம் முதல் மிகப்பெரிய மண்டபங்கள்வரை வாடகை ஏகமாக உள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள மாநகராட்சி கம்யூனிட்டி ஹாலில் திருமணத்தை நடத்துபவர்களும் சென்னையில் இருக்கிறார்கள். அவற்றின் ஒருநாள் வாடகை என்பது சாதாரண எளிய மக்கள் தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளது.

ஆனால் பிரபலங்களும், பெரும்  பணக்காரர்களும் தங்கள் வீட்டுத் திருமணத்தை போட்டி போட்டுக்கொண்டு மிக விமர்சையாக நடத்தவே எத்தனிக் கிறார்கள். கல்யாண மண்டபங்களுக்காக லட்சங்களை வாரி இறைப்பதுடன், தங்கள் கனவுகளுக்கு ஏற்ற அமைப்பில் உள்ள கல்யாண மண்டபங்களை சில திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங் கள் மூலம் தேடத் தொடங்குவதை டிரண்டாக்கியுள்ளனர்.

இவர்களது எதிர் பார்ப்புகளை ஈடுசெய்வதற்காகவே சென்னை ஹால்ஸ்.காம், பார்ம் ஹவுஸ் ஃபார் ரென்ட்டட்.காம் போன்ற  இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தொடர்பு கொண்டால் பட்ஜெட்டிற்கு ஏற்ற திருமண ஹால்களை நாம் கேட்கும் பகுதிகளில் அவர்கள் பிடித்துத்தர தயாராகக் காத்திருக்கிறார்கள்.

பணக்காரர்களின் கனவுகளை நிறைவேற்ற பல விதமான திருமண மண்டபங்கள் தங்களுக்குள்  போட்டிபோட்டுக்கொண்டு பல வித்தியாசங்களை வழங்கும் வகையிலும் பெரும் நகரங்களிலும், கார்ப்ரேட் சிட்டிகளிலும் வரத் துவங்கிவிட்டன.

திருமண மண்டபம்
ஆயிரம்பேர் அமரக்கூடிய அவுட்டோர் அமைப்பு, சிறிய நிகழ்ச்சிகளை நிகழ்த்த மினி ஹால், ஆயிரம்பேர் நின்று அமர்ந்து சாப்பிட திறந்தவெளி உணவுக்கூடம்,  ஒரே நேரத்தில் ஐம்பாதியிரம்பேர் மேடையினை நோக்கி அமர்ந்து திருமணத்தை பார்க்க இருக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட திருமண ஹால், உறவினர்கள், நண்பர்கள் தங்குவதற்கு அட்டாச் பாத்ரூம் உள்ள குளிரூட்டப்பட்ட இருபது தனிப்பட்ட தங்கும் அறைகள், ஒரே நேரத்தில் ஆயிரம் கார்வரை நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதி என, சமையல் முதல் திருமண ஹால் வரை நவீன டெக்னாலஜி என ஒரு நாள் வாடகை மட்டும் லட்சங்களை  தாண்டி பிரமாண்டம் காட்டுகிறது, சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி கல்யாண மண்டபம். மிகப்பிரமாண்டம் என்ற வகையில் அனைவராலும் சென்னையில் கை காட்டப்படும் மண்டபம் இதுவே.

பென்ஹேட் ஹால் (Banquet Hall)
மண்டபத்திற்குள் நிகழ்ந்த திருமணங்கள் நிலைமாறி, மிகப் பெரும் ஹோட்டல்களிலும், ஸ்டார் ஹோட்டல்களிலும் திருமணத்திற்கென ஹால் மற்றும் அதனருகிலேயே உணவு அருந்தக்கூடிய அறைகளுடன் கூடிய பென்ஹேட் ஹால் வசதிகள் இப்போது வரத் துவங்கியுள்ளன. இவை ஹோட்டல்களின் தரத்தைப் பொறுத்து ஓரளவிற்கு பட்ஜெட்டுக்குள் அடங்கக்கூடிய வகையிலும் கிடைக்கிறது. அதிலும் மிகப் பிரமாண்டம் காட்ட விரும்புகிறவர்களுக்கு, ஸ்டார் அந்தஸ்து பென்ஹேட் ஹால்கள் மிகப் பிரம்மாண்டத்தை காட்டி கை கொடுக்கின்றன.

டெஸ்டினேஷன் வெட்டிங் (Destination Wedding)
தங்கள் வீட்டுத் திருமணத்தை வேறு ஒரு ஊரில் அல்லது வெளிநாட்டில் நிகழ்த்த வேண்டும் என்றால் அதற்கென சில டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானர்ஸ் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், கோவா, உதய்பூர், ராஜஸ்தான் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ராயல் வெட்டிங்காகவும், வெளிநாடுகளிலும் நிகழ்த்தித் தரவும் தயாராகக் காத்திருக்கிறார்கள்.

பீச் ரிசார்ட்ஸ் வெட்டிங் (Beach Resorts Wedding)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடலோரம் அமைந்துள்ள எம்.ஜி.எம், வி.ஜி.பி போன்ற நிறுவனங்கள் கடலை ஒட்டி சில பீச் ரிசார்ட்டுகளை திருமணத்திற்கு வாடகைக்கு விடுகின்றனர். பல்வேறு கனவுடன், இயற்கையான சூழலில் கடலை ஒட்டி தங்கள் வீட்டுத் திருமணத்தை நடத்த நினைப்பவர்கள், கடற்கரை ஓரங்களை இந்த நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்குப் பெற்று தங்கள் மனதிற்குப் பிடித்த வண்ணம் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மேடை அலங்காரங்களைச் செய்து திருமணத்தை நடத்தி உறவுகளோடு கூடி மகிழ்ச்சி அடைகின்றனர்.

சமீபத்தில் அருண் எக்ஸெல்லோ குரூப் மகாபலிபுரம் அருகில், கிழக்குக் கடற்கரை சாலையில் காஃன்புளூயன்ஸ் வெட்டிங் ரிசார்ட் (Confluence Wedding Resorts)என்ற பிரமாண்ட கட்டிடத்தை கடற்கரை ஓரம், பல ஏக்கரில் கட்டி எழுப்பி லட்சங்களிலும், கோடிகளிலும் புரளுபவர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. ஹால், ரெஸ்டாரன்ட், வில்லாஸ், அறைகள், நீச்சல் குளம் என அத்தனையும் இதில் அடக்கம். திருமணத்திற்கு வரும் உறவுகள், நட்புகள் அங்கேயே கூடிக் கழித்து, தங்கியிருந்து திருமணத்தை முடித்துவிட்டு திரும்பலாம்.

திறந்தவெளித் திருமணம் (Open Ground Wedding)
பரபரப்புகள் கொஞ்சமும் எட்டிப் பார்க்காத அமைதியான சூழல், மக்கள் நெருக்கடியற்ற இடம், மிகப் பெரிய திறந்தவெளி என இயற்கை சூழலில் தங்கள் இல்லத் திருமணங்களை பிரமாண்டம் காட்டி நடத்த நினைப்பவர்களுக்காக சென்னை அண்ணா நகர் மற்றும் கோயம்பேட்டிற்கு மிக அருகில் இயற்கை சூழலில், 14 ஏக்கரை உள்ளடங்கிய இயற்கை சார்ந்த நிலப்பரப்பில், ‘சிவபார்வதி புஷ்பா கார்டன்ஸ்’ என்ற நிறுவனம், திறந்தவெளி திருமண நிகழ்வுகளை வடிவமைத்துத் தருகின்றனர்.

இந்தவகை திருமணங்கள் மனதிற்கு இதமாகவும், மகிழ்வாகவும், நிறைவாகவும் இருப்பதாக திருமணத்தை நிகழ்த்துவோர் கருதுகிறார்கள். உலகமயமாக்கலின் உச்சத்தில், இணைய வழியில்….உலகம் ஒரே கூரையின் கீழ் இயங்க, நவீனத்துவத்தின் வெளிப்பாடாய்,  திருமணங்களும் பல புதுமைகளை படைக்கத் துவங்கியுள்ளன.

(கனவுகள் தொடரும்…)