ஹேப்பி ப்ரக்னன்ஸிபிரசவ கால கைடு - 11

இளங்கோ கிருஷ்ணன்

தாய்மை எனும் அற்புத வைபவத்தின் தலைவாசல்தான் மூன்றாவது ட்ரைமஸ்டர். கடந்த இரண்டு ட்ரைமஸ்டர்களில் கண்ணும் கருத்துமாய் வயிற்றில் காத்த சிசு இந்த உலகுக்கு வருவதற்கு தயாராகும் காலம் இந்த மூன்றாவது ட்ரைமஸ்டர்தான். இதோ இன்னும் சில வாரங்களே உள்ளன உங்கள் குட்டி பாப்பாவை நீங்கள் பார்க்கவும்; உங்களை குட்டிப்பாப்பா பார்க்கவும்.

இந்தப் பருவத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன அதற்கான எளிய தீர்வுகள் யாவை என்பதை இந்த இதழில் பார்ப்போம். தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்களில் மூன்றாவது ட்ரைமஸ்டரின் ஒவ்வொரு வாரத்திலும் கருவின் வளர்ச்சி, தாயின் உடல்நிலை, செய்ய வேண்டிய பரிசோதனைகள் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

முதுகுவலி
மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது உங்கள் எடை அதிகரித்து இருப்பதாலும் வயிறு முன்நோக்கி தள்ளி இருப்பதாலும் முதுகுவலி ஏற்படும். மேலும், இடுப்பில் உள்ள தசைநார்கள் பிரசவத்துக்குத் தயாராவதற்காக சற்றே தளர்வாக இருப்பதால் இடுப்புப் பகுதியில் அசெளகர்யமான உணர்வும் ஏற்படும்.

உங்கள் உடலின் போஸ்சரை சரியாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அமரும்போது நேராக அமர்வது, நேரான சாய்மானம் உள்ள நாற்காலியைப் பயன்படுத்துவது, உறங்கும்போது கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணை வைத்துக்கொள்வது ஹீல்ஸ் இல்லாத காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை நல்ல பலன் தரும். அளவுக்கு அதிகமான முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெறத் தயங்க வேண்டாம்.

ரத்தக் கசிவு
சிலருக்கு மெல்லிய ரத்தக் கசிவு இருக்கும். துளித் துளியாய் ரத்தக் கசிவு இருந்தாலும் அது ஒரு சீரியஸான பிரச்சனைதான். ப்ளெசண்டா ப்ரீவியா, நஞ்சுக்கொடி விலகுதல், குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களுக்கான அறிகுறியாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

பொய் வலி
இடுப்பு வலிதான் பிரசவத்திற்கான முதல் சமிக்ஞை. கர்ப்பப்பையில் உள்ள தசைகள் இறுகி வலி எடுக்கும். இதனை ஆங்கிலத்தில் Labor pain என்பார்கள். ஆனால், மூன்றாவது ட்ரைமஸ்டரில் லேபர் பெய்ன் போலவே பொய்வலி ஏற்படும். இதனை உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது தயாரிப்பு நிலை எனலாம். ஆனால், பொய்வலிக்கும் நிஜமான பிரசவகால இடுப்புவலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பொய்வலி சில சமயங்களில் வலியாக இல்லாமல் அசெளகர்யமான உணர்வாக இருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு வராது. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது பொய்வலி ஏற்பட்டால் போஸ்சரை மாற்றியதும் வலி விலகும். நெடுநேரமாக வலி தொடராது. இது எல்லாம் பொய் வலியின் அறிகுறிகள். பொதுவாக, பொய் வலிக்காக அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், எப்போதும் வலி இருந்துகொண்டிருந்தாலோ, வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

மார்பகம் பெருத்தல்
தாய்மைக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் கர்ப்பிணிகளின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் தாய்ப் பால் சுரப்பதற்குத் தயாராகி, மார்பகங்கள் விரிவடையும். சிலருக்கு மார் காம்புகளில் இருந்து மஞ்சள் நிற திரவம் கசியத் தொடங்கும். இதனை சீம்பால் என்பார்கள். குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு மிகவும் அத்தியாவசியமானது சீம்பால். எனவே, அச்சம் வேண்டாம். தரமான, அளவு சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். அசெளகரியமான உள்ளாடைகளை தவிர்த்திடுங்கள்.

திரவக் கசிவு
இந்தப் பருவத்தில் கர்ப்பிணிகளுக்கு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான திரவக் கசிவு ஏற்படுவது இயல்புதான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அடர்த்தியான, தெளிவான, கொஞ்சம் உதிரம் கலந்த திரவக் கசிவு ஏற்படும். இது, செர்விக்ஸ் பகுதி பிரசவத்துக்கு நெகிழ்வாவதன் அறிகுறி.

இந்த திரவக் கசிவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல, திடீரென அளவுக்கு அதிமாக திரவம் பெருக்கெடுத்தால் அது பனிக்குடம் உடைந்ததன் அறிகுறியாக இருக்கலாம். எட்டு சதவிகிதம் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் முன்பே பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.

உடல் சோர்வு
இரண்டாம் ட்ரைமஸ்டரில் உற்சாகமாக இருந்தவர்கள்கூட மூன்றாம் ட்ரைமஸ்டரில் சோர்வாக இருக்க வாய்ப்பு உள்ளது. எடை அதிகரித்திருப்பது, இரவு உறக்கத்துக்கு நடுநடுவே சிறுநீர் கழிப்பதற்காக எழுவதால் தூக்கம் பாதிப்பது, பிரசவ தேதி நெருங்குவதால் ஏற்படும் பதற்றம் போன்ற காரணங்களால் சிலர் சோர்வாக இருப்பார்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்பது, மருத்துவர் பரிந்துரைப்படி சிறிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், நடைப் பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் சோர்வை வெல்லலாம்.

மிகுந்த சோர்வாக இருந்தால் குட்டித் தூக்கம் போடுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லை எனில், ரிலாக்ஸாக கொஞ்ச நேரம் அமர்ந்திருங்கள். உங்கள் செல்லக் குழந்தையை இவ்வுலகுக்கு கொண்டுவருவதற்கான பலத்தை உடலில் அதிகரிக்க இந்த ஓய்வு அவசியம். எனவே, சோர்வை விரட்ட நடவடிக்கை எடுங்கள். இதைத் தவிரவும்  இன்னும் சில உடல் உபாதைகள் மூன்றாம் ட்ரைமஸ்டரில் ஏற்படும் அவற்றைப் பற்றி அடுத்த இதழில் தொடர்ந்து பார்ப்போம்.

(வளரும்)

டாக்டர் ஒரு டவுட்

எனக்கு அடிக்கடி பொய் வலி ஏற்படுகிறது. இதனால், நிஜமான பிரசவ வலி ஏற்படும்போது அதை உணர முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது. இதற்கு என்ன தீர்வு?
- ஆர்.சி.கலா, சென்னை.

பொய் வலியை Braxton Hicks Contractions என்பார்கள். பொய் வலிக்கும் நிஜ வலிக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, உங்களுக்கு நிஜமான வலியை உணர முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம். கர்ப்பப்பை தசைகள் சுருங்கி வலி உண்டாவதைத்தான் பொய் வலி என்போம். பொதுவாக, பொய் வலி ஓரிரு நிமிடங்களே நீடிக்கும். திடீர் என்று வலிக்கும் பிறகு இயல்பாகும். நிஜமான வலி என்றால் திடீரென தோன்றி மறையாது. அது நெடுநேரம் நீடிக்கும். வலியும் கடுமையாக இருக்கும்.

பொய் வலி ஏற்படும்போது நீங்கள் இருக்கும் நிலையை மாற்றினாலே வலி நீங்கிவிடும். நிஜமான வலி அவ்வாறு விலகாது. பொய் வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால்கூட பொய் வலி ஏற்படும். எனவே, நீராகாரங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். பொய்வலி ஏற்படும்போது நேராக அமர்ந்து சீராக மூச்சை இழுத்து, வெளியேவிடும் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.

இடதுபுறமாகத் திரும்பிப் படுத்து கால்களுக்கு அடியில் தலையணை வைத்துக்கொள்ளலாம். சிறுநீர்ப்பை நிறைந்திருந்தாலும் பொய் வலி ஏற்படும். எனவே, உடனடியாக சிறுநீர் கழிப்பதும் நல்ல தீர்வே. பொய்வலியைக் கண்டு அச்சம் வேண்டாம். அது உங்கள் உடல் பிரசவத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதன் ஆரோக்கிய அறிகுறிதான். அளவுக்கு அதிமாக வலி இருந்தாலோ நெடுநேரம் வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ப்ரக்னன்ஸி மித்ஸ்

மூன்றாவது ட்ரைமஸ்டரின்போது வேலை செய்யக் கூடாது என்கிறார்களே அது சரியா என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இது தவறான கருத்து. மூன்றாவது ட்ரைமஸ்டரில் கர்ப்பிணியின் உடல் சோர்வாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், தினசரி ஒரு அரை மணி நேரமாவது காலாற நடப்பது.

டாக்டரின் பரிந்துரையோடு சின்னச் சின்ன ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்வது போன்றவற்றின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. உடலை வருத்தும் வேலைகள், குனிந்து நிமிர்ந்து சிரமப்படும் வேலைகள், பாரமான பொருட்களைத் தூக்குவது போன்றவற்றை செய்வதைத் தவிர்க்க வேண்டும்தான். அதற்காக, வீட்டிலேயே ஒரே இடத்தில் முடங்கிக்கிடப்பது சரி அல்ல. சின்னச் சின்ன வேலைகளை சோம்பலை உதறிச் செய்வதுதான் நல்லது.