பிரியங்களுடன்...



`Queen of the Dark’ குறித்த தகவல்களை அறியத் தந்த ‘தோழி’க்கு நன்றிகள் பல! சிவகாமி ஐ.ஏ.எஸ். ‘எழுத்தாளர் என்பதே பிடித்த அடையாளம்’ எழுத்தை நேசிப்பவர்கள் எல்லோருக்கும் பிடித்த வரிகள். எதுவும் அரசியலில் அகப்படாமல் இல்லை. அதில் அணைகளும் அடக்கம் என அறிவுறுத்தியது ’நீராலானது இவ்வுலகு’!
- எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் எழிலரசி நிகழ்த்தியிருக்கும் சாதனையை ’தோழி’ உலகறியச் செய்திருந்தது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

முன்னணியிலிருக்கும் பின்னணி குரலுக்குச் சொந்தமான சவீதாவின் சாதனை கட்டுரை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை-64.

டி.ஆர். ராஜகுமாரியின் வரலாறு சோகத்தில் முடிந்ததை படித்ததும் வேதனை மேலிட்டது. ‘மனோகரா’ படத்தைப் பார்த்து ‘வசந்த சேனா’ என்னும் பெயரை பலரும் தன் பெண்களுக்கு வைத்ததை என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்.
- வரலக்ஷ்மி, முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

‘தமிழகத்தின் மர்லின் மன்றோ’ என்று வருணிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி குறித்து சிறப்பாக வெளிப்படுத்தி பா.ஜீவசுந்தரி வாசகர்களை பிரமிக்க வைத்துவிட்டார்!
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

 மகசேசே விருது பெறும் ’கெத்சி சண்முகம்’ பற்றிய தகவல்கள் படித்து, அகமகிழ்ந்து, மெய்சிலிர்த்துப் போனேன்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

‘முசெட்’ திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை சோக கீதத்தை மனதிற்குள் இசைத்தது.
- என்.ஜெயம் ஜெயா, காரமடை, கோவை.

கானுயிர் புகைப்படத் துறையைத்தான் தேர்ந்தெடுத்து கால் பதித்து, சாதித்துவிட்டாரே, திவ்யா பாரதி. ஜோதி இசையை நேசித்துப் பாடி, திரைப்படம் வரை வந்தவர் பார்வையற்றவர் என்றாலும், ‘கண்ணான கண்ணம்மா’தான்.
- அசோக் நகர் மயிலை.கோபி.

சென்னை தினத்திற்காக எத்திராஜ் கல்லூரியில் நிகழ்ந்த கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களை இன்றைய தலைமுறை பார்த்ததும் தன்னை மறந்து நிற்பார்கள். ஸ்மார்ட் போன்களால் குழந்தைகள் மட்டும் இன்றி பலரும் பாதிப்பு அடைகிறார்கள். அதனால் எதையும் அளவுக்கு மீறி பயன்படுத்தக்கூடாது என்பதற்கு தேவை இந்த எச்சரிக்கை கட்டுரை.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.