செல்லுலாய்ட் பெண்கள்



நெஞ்சோடு நெஞ்சம் கொஞ்சிய அழகுப் புறாராஜம்மா

1952ல் வெளியான ‘தாய் உள்ளம்’ பல சிறப்புகள் ஒருங்கிணைந்த படம் என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாத படம். கதாநாயகி ராஜம்மா, நாயகன் ஆர்.எஸ். மனோகர். இவர் பின்னாளில் கொடூர வில்லனாகத் திரையில் மாறியவர். ‘நாடகக் காவலர்’ என்ற பட்டத்துடன் நாடக உலகில் பல வெற்றிகரமான நாடகங்களையும் நடத்தியவர். ஆர்.கணேஷ் வில்லன், இவர் பின்னர் புகழ் பெற்ற கதாநாயகனாக மாறிய ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்.

இருவருமே தங்கள் துறையில் எதிர் எதிர் நிலைக்கு மாறியவர்கள். இப்படத்தின் கதையும் ஈஸ்ட் டய்லன் எழுதிய ‘மிஸஸ். ஹென்றி வுட்’ என்ற ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான். ‘கேமரா மேதை’ என்றழைக்கப்பட்ட கே.ராம்நாத் இயக்கத்தில், வி.நாகையா -ஏ.ராமாராவ் இருவர் இசையமைப்பில் அன்றும் இன்றும் என்றும் மறக்க இயலாத எவர்க்ரீன் பாடலான ‘கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம்….’ பாடல் இப்படத்தில்தான் இடம் பெற்றது.

கதாநாயகி ராஜம்மா பால்கனியில் நின்றபடி வயலின் வாசித்தவாறே பாடுவதாக அமைந்த காட்சி என்றும் அழியாத பிம்பமாக ரசிகர்களின் மனத்திரையில் பதிந்து போனது. பாடியவர் எம்.எல்.வசந்தகுமாரி. இந்தியிலும் இப்பாடல் லதா மங்கேஷ்கரின் தேனினும் இனிய குரலில் ‘டண்டி ஹவாயேங்…’ என்றென்றைக்கும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘கதையைக் கேளடா’ என்ற மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு.

கன்னத்தில் மரு வைத்துக் கொண்டால் பிறருக்கு அடையாளம் தெரியாது என்ற மாயை திரையுலகில் நிலவுவது போன்றே, கருப்புக்கண்ணாடி அணிந்து கொண்டாலும் அடுத்தவர் அடையாளம் காண முடியாது என்று நிறுவியது இப்படம்.

ஆம், கதாநாயகி ராஜம்மா, தான் சித்தாள் வேலை செய்து சிறுகச் சிறுகச் சம்பாதித்த பணத்தில் ஒரு கருப்புக் கண்ணாடியை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்தவர் ‘அடையாளம்’ காண முடியாமல் மாறி விடுவார். தனக்கு வில்லனாக, ஸ்டைலாக நடித்த ஜெமினி கணேசனுக்கு அன்னையாக அடுத்த சில ஆண்டுகளில் அவர் மாறியது திரையுலகின் விநோதம் என்று சொல்வதா, காலத்தின் மாறுபாடு என்பதா?

கதாநாயகி நிலையிலிருந்து தாய்மையின் பிம்பமாக…
1950 வரை கதாநாயகியாக நடித்தவர், ஒரு சில ஆண்டுகளிலேயே தன் உடன் நடித்த நடிகர்களுக்கே அம்மாவாக மாறினார். 1952க்குப் பின் எம்.ஜி.ஆர்,  சிவாஜி என்ற இரு நட்சத்திர நடிகர்களின் உருவாக்கத்துக்குப் பின், புதிய கதாநாயகிகளின் வருகை அதிகமானது.

30களில் இளம் பெண்ணாகத் திரையுலகில் நுழைந்தபோதே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க மறுத்து, இரண்டாவது நாயகி என்றாலும் பரவாயில்லை என்ற நிலையை எடுத்தவர் தன் மத்திம வயதில் கதாநாயகி வேடம் கிடைக்காதது பற்றி எல்லாம் யோசித்தவரில்லை என்பது அவரது அடுத்தடுத்த படங்களின் பாத்திரங்கள் வாயிலாகத் தெரிந்தது.

அதனால், எந்தக் கவலையுமற்று இயல்பாகவே ராஜம்மாவும் கதாநாயகர்களின் ’அம்மா’ வாகிப் போனார். பல படங்களில் கசிந்துருகி, கண்ணீர் சிந்தியதுடன் மட்டுமல்லாமல், பாசத்தைப் பொழிபவராகவும் கண்டிப்பையும் கறார்த்தன்மையையும் சில நேரங்களில் வெளிப்படுத்தியும் இறுதி வரை அம்மா வேடங்களையே ஏற்றார்.

‘முரடன் முத்து’ பி.ஆர்.பந்துலுவின் சொந்தத் தயாரிப்பு, இயக்கத்தில் உருவானபோது, பந்துலுவின் மனைவியாகவே நடித்தார். சிவாஜியின் அண்ணியாக, குடும்பத்தைத் தாங்கும் தலைவியாக அற்புதமாக நடித்தார். கூட்டுக் குடும்பத்தின் உயர்வை, உழைப்பின் மேன்மையைச் சொல்லும் படமாக அது அமைந்தது. ‘செவ்வந்திப்பூ செண்டு போல கோழிக்குஞ்சு’ என்று பாடல் காட்சியில் நடித்தார் ராஜம்மா. வர்த்தக ரீதியாக அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பேர் சொல்லும் ஒரு படமாக அமைந்தது. பின்னர் ’கோபி’ யாக திலீப் குமாரின் நடிப்பில் இந்தியிலும் வெளியானது.

குந்தி தேவியின் மறு பிம்பமாக ஜொலித்தவர்

குந்தி போன்ற ஒரு பெண் - பாண்டவ வம்சத்தைத் துளிர்க்கச் செய்யப் பாத்தியப்பட்ட இடத்தில் உள்ள ஒரு பெண், எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட இயலாதவள். இயல்பான பெண்களின் குணம் அதுவென்றாலும், அரச பரம்பரையைச் சார்ந்தவள் என்பதால், பல ரகசியங்களைக் காக்க வேண்டியவளாகவும் வாழ வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு விதிக்கப்படுகிறது. இரட்டை மனமும், குற்ற உணர்வும் அவளுள் எப்போதும் குமைந்துகொண்டே இருக்கும்;

அதுவும் தமது வம்சத்துக்கே ஒரு நெருக்கடி என்று வரும்போது எது நீதி, எது அநீதி என்பதைக்கூட சிந்தித்து அறிய முடியாதவளாகவே அவள் உருவாக்கப்பட்டிருப்பாள். எது தமது கணவனுக்கும் அவனுடைய குலத்துக்கும் வாரிசுகளுக்கும் நல்லதென்று சொல்லப்பட்டதோ அதுவே அவளுக்கும் சொல்லப்பட்ட நீதியாகும். அதனின்றும் அவள் ஒருபோதும் பிறழ்ந்து விட முடியாது. 

குருஷேத்திரப் போர் விரைவில் துவங்கஉள்ள நிலையில் கண்ணனின் சூழ்ச்சியால் கர்ணன்தான் தனது மூத்த மகன் என்பது குந்திக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கர்ணன் கௌரவர்கள் பக்கம் இருப்பவன். அவனுக்கு எதிரே உள்ள பஞ்ச பாண்டவர்களும் குந்தியின் புதல்வர்கள். குந்திக்கு இயல்பாகவே மூத்த புதல்வன் மீது வாஞ்சை மேலிடுகிறது.

ஆனால், கர்ணன் சாக வேண்டியவன் என்கிறான் மாயாவி கண்ணன். எனவே இதிகாசங்கள் கட்டமைத்த நியதிகளின்படி, தாயானாலும் அவளும் கர்ணனை ஆதரிக்க முடியாதவள். பாண்டவ வம்ச பாண்டு மகாராஜாவின் மனைவியான அவள், பாண்டவர்கள் அழிக்க நினைக்கும் கௌரவர்கள் பக்கம் நிற்கும் ஒரே மாவீரன் வெற்றி பெற வேண்டும் என மனதுக்குள் நினைப்பதுகூட நெறியல்ல. இச்சூழலில் குந்தியின் மனநிலையைப் பிரதிபலிக்க நம் நடிகைகள் சிறப்பாகவே செயல்பட்டார்கள்.

மகாபாரதக் கதை பல பகுதிகளாக, பல பெயர்களில் பல முறை படமாக்கப்பட்டிருந்தாலும் பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இந்தத் தலைமுறை ரசிகர்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டு, தமிழகமெங்கும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

‘கர்ணன்’ படத்தின் குந்தியாக உணர்வுக் கலவையாக நடிப்பைப் பிழிந்து தந்தவர். அறியாப் பருவத்தில் தான் அறியாமல் விரும்பாமல் பிள்ளையைப் பெற்று, கவச குண்டலங்களுடன் பிறந்த மகனை அறிந்தே பேழையில் வைத்து ஆற்றில் அனுப்பியவள், பல ஆண்டுகளுக்குப் பின் அவன் கர்ணன் என்ற பெயரில் அங்க தேசத்துக்கு மன்னனாகி, குருஷேத்திரப் போரில் தன் உடன் பிறந்த சகோதரர்கள் என்பது தெரியாமலேயே பாண்டவர்களுடன் நேரடியாக மோத இருக்கும் மகனைச் சந்திக்கும் அபாக்கியவதியான தாய் குந்தியாக உணர்வுப்பூர்வமான அந்தக் காட்சியில் ராஜம்மா சிறப்பாகத் தன் பங்கை வெளிப்படுத்தியிருப்பார்.

அவரைத் தவிர்த்து வேறொருவரை அப்பாத்திரப் படைப்பில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதற்கு நியாயம் செய்திருந்தார் ராஜம்மா. மிக நீண்ட வசனங்களுடன் கூடிய உணர்வுப்பூர்வமான காட்சி அது.

அண்ணாவின் வசனத்தில் ‘வேலைக்காரி’யானால், கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் ‘தாயில்லாப் பிள்ளை’யின் பெறாத தாயாக மாறி பாசத்தைப் பொழிந்து கலங்க வைத்தார். பார்ப்பனப் பெண்ணாக பாலையாவுடன் போட்டி போட்டு நடித்தார் என்றே சொல்லலாம். தாய்மைக்கு சாதி பேதமில்லை என்பதை மிக அழகாகவும் நுட்பமாகவும் அந்தப் பாத்திரம் வெளிப்படுத்திற்று. இப்படம் நூறு நாட்களைக் கடந்தும் ஓடியது. 

பிள்ளைக்குத் தாய், மருமகளுக்கு வில்லி

வழக்கமாக அமைதியாக, உணர்வைப் பிழிந்து தரும் அம்மாவாக நடித்திருந்தாலும் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘கொடிமலர்’ திரைப்படத்தில் மட்டும் சற்றே வில்லத்தனமான, பணத்திமிரும், அதிகார போதையும் ரத்தத்தில் ஊறிய ஆணவம் பிடித்த தாயாக நடித்திருப்பார்.

‘சியாமளா’ என்ற ஒரு வங்காளக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘கொடிமலர்’ சோக ரசத்தைப் பிழிந்து தரும் படம். ஒரு படத்தின் கதாபாத்திரம் பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைத்தால், அது அப்பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்புத்திறனுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டுதான் என்பதையும் பாத்திரப் படைப்பு என்பது கதாசிரியர் மற்றும் இயக்குநரின் கையில்தான் இருக்கிறது என்பதையும் உணர வைக்கும் அற்புதமான நடிப்பு ராஜம்மாவுடையது.

அதிலும் பிள்ளையின் உணர்வுகளுக்குக் கூட மதிப்பளிக்காத, தன் சொல்லைத் தட்டாமல் ஆண் பிள்ளைகள் இருவரும் வளர வேண்டும், தன் கைப்பிடிக்குள் அவர்கள் இருக்க வேண்டும் என கணவனை இழந்த ஒரு கைம்பெண் நினைப்பது தன் பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய அச்சம் என, பெண்ணின் ஆழ் மன உணர்வுகள் தொடர்புடையது என்பதை எல்லாம் மிக நுட்பமாகவே படம் பதிவு செய்கிறது.

ஆனால், இயல்பில் அப்படி ஒரு பெண் தன் வாழ்நாளில் இருந்து விட முடியாது என்பதையும் படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்து விடுவதும், பெண் நிலைக்கு இந்தச் சமூகம் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறது என்பதையும் புரிய வைத்து விடும். சோக ரசத்தைப் பிழிந்து கொடுக்கும் படத்தின் இயல்பை மீறி ராஜம்மாவின் பாத்திரம் கம்பீரமாகவே நிற்கிறது.

பணிப்பெண், மகாராணி, பிச்சைக்காரி மூன்று பரிமாணங்கள்

‘தங்கமலை ரகசியம்’ பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான படம். அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்து, பட்டத்து ராணியாக உச்ச நிலையை அடையும் அதிர்ஷ்டக்காரப் பெண் என நினைத்தால் நாம் ஏமாந்து போவோம். எல்லாம் கொஞ்ச நேரம்தான். அதிரடியாக ‘மகாராணி, நீ பிச்சைக்காரியாகப் போ…’ என்று சாபமிடுவதைப் போல டி.ஆர்.ராஜகுமாரியின் குரல் அதிர்ந்து ஒலிக்க, அவர் கொடுத்த மந்திரக்குளிகையின் தயவால் மகாராணி பிச்சைக்காரியாகிறாள்.

முத்துமாலையாக மாற்றப்பட்ட கணவனை, அழுக்குத் துணி மூட்டைக்குள் பதுக்கி வைத்துக்கொண்டு அலைவதும், கொள்ளையர்கள் அந்த முத்துமாலையை… அப்படி உரு மாற்றப்பட்ட கணவனைக் களவாடிச் செல்ல ஏறக்குறைய பைத்தியக்கார நிலையை எட்டு கிறார். பணிப்பெண், மகாராணி, பிச்சைக்காரி என மூன்று வெவ்வேறு பரிமாணங்களை மூன்று மணி நேரப் படத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார் ராஜம்மா.

பொதுவாகக் கதாநாயகன் ஒரே படத்தில் ஏற்கும் பல வேடங்கள் பேசப்படுவதைப் போல, நடிகைகள் ஏற்கும் பெண் பாத்திரங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை. இந்தப் படத்தின் நிலையும் அதுதான். சிவாஜி கணேசனின் யானைகள் வளர்த்த காட்டுவாசி, இளவரசியால் பயிற்றுவிக்கப்பட்டு நாகரிக மனிதனாக மாறும் இளைஞன், தாய்- தந்தையை மீட்க தன் இளமையையும் அழகையும் தியாகம் செய்து படு கிழவனாக மாறி நடை தளர்ந்த வயோதிகன் என சிவாஜி ஏற்ற மூன்று விதமான தோற்றங்கள் சிலாகிக்கப்பட்ட அளவு ராஜம்மா ஏற்ற வேடங்கள் பேசப்படவே யில்லை.

இந்தப் படம் கன்னடத்திலும் ‘ரத்னகிரி ரகஸ்யா’ என்ற பெயரில் சக்கைப் போடு போட்டது. ‘அன்னை இல்லம்’ படத்தில் கணவனையும் மூத்த மகனையும் சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து இளைய மகனுடன் தனித்து வாழும் தாய், பிரிந்து போன கணவனையும் மூத்த மகனையும் மீண்டும் சந்திக்கும் வேளையில் கணவன் மீது கொலைப்பழி விழுந்து தூக்குக்கைதியாக மஞ்சள், குங்குமத்தைக் காக்க அவர் படும் பாடு என வழக்கமான கதை சொல்லலுடன் கதை நகர்ந்தாலும், ராஜம்மா இதிலும் தனித்தே தெரிந்தார்.

‘குங்குமம்’ படத்திலும் ஏறக்குறைய இதே கதைதான் என்றாலும் மிகுந்த விறுவிறுப்புடன், த்ரில்லிங்காக கதை நகரும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’, ‘கைராசி’ படங்களின் அம்மாக்கள் கணவனால் சந்தேகிக்கப்பட்டு, அதுவே சமூகத்துக்கும் கடத்தப்பட்டு வாழ்நாள் முழுவதும் களங்கத்தையும் பழியையும் ஏற்று நடைப்பிணமாக நடமாடியவர்கள். பல விதமான அம்மாக்களையும் கண் முன் நடமாட விட்டவர் ராஜம்மா.

பன்முகத் திறமைகள் நிரம்பியவர்
வரிசையாக அம்மா வேடங்கள்; சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோரின் படங்களில் உணர்ச்சிப் பிழம்பான அம்மாவாக நடித்தார். பி.ஆர். பந்துலுவின் படங்களில் ஒரு சில படங்களைத் தவிர பெரும்பாலும் இடம் பிடித்தார். பி.ஆர். பந்துலுவுடன் பல கன்னடப் படங்களில் இணையாக நடித்திருக்கிறார். தமிழிலும் ‘விஜயலட்சுமி’, ‘முரடன் முத்து’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்கூல் மாஸ்டர்’ கன்னடப் படத்தில் நடித்ததற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்தவர். ஆரம்ப காலப் படங்களில் சொந்தக் குரலில் பாடி நடித்தவர்.

1943ல் வெளி வந்த ‘ராதா ரமணா’ கன்னடப் படத்தைத் தயாரித்ததன் மூலம் கன்னடத் திரையுலகின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இதன் மூலம் விஜயா பிலிம்ஸ் என்ற சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதைத் திறம்பட நிர்வகித்தவர். திரையுலகில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி பின் அரசியல் களத்திலும் காலூன்றிய சாதனையாளர்களான சி.என்.அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், வி.என்.ஜானகி, ஜெயலலிதா என கலையுலகின் ஆறு முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நட்சத்திரம் எம்.வி.ராஜம்மா மட்டுமே! இவர்கள் அனைவருமே தென்னிந்தியர்கள் என்பதும் கூடுதல் பெருமை.

நாடகங்களிலும் பங்களித்தவர்
திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பே கன்னட நாடகங்களிலும் தன் பங்களிப்பை வழங்கியவர். திரையிலும் ஆரம்ப காலம் முதலே கவர்ச்சியைத் தவிர்த்து கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துப் பழக்கப்பட்டவர். கதாநாயகியாக மட்டுமல்ல, இதர பாத்திரங்களிலும் நடித்துத் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

அதனால் நாடக நடிகர்கள், புகழ் பெற்ற நடிகர்கள், அறிமுக நடிகர்கள் என்று பலதரப்பட்ட கதாநாயகர்களுடனும் எந்த வித்தியாசமும் இன்றி நடித்தவர். பி.யு.சின்னப்பா, பி.ஆர்.பந்துலு, ஹொன்னப்ப பாகவதர், டி.கே.சண்முகம், கே.சுப்ரமணியம், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.எம்.பஷீர், மனோகர், ஈஸ்வர், கெம்பராஜ், நரசிம்ம பாரதி, வி.நாகையா என்று இவருடன் நடித்தவர்களின் பட்டியல் மிக நீண்டது.

1973ல் பி.ஆர். பந்துலுவின் மறைவுக்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான ‘தேடி வந்த மாப்பிள்ளை’ பந்துலுவின் இறுதிப்படம். ராஜம்மாவுக்கும் அதுவே கடைசிப் படம். கணவரின் மறைவுக்குப் பின் அவர் படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் அம்மாவைப் போற்றிப் பாடும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்;

அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்’ என்ற பாடல் காட்சியைப் பாருங்கள். அம்மாவைப் போற்றிப் பாடுகின்ற கதாநாயகர்கள் புகழின் உச்சத்தை எட்டிப் பிடிக்க, தங்களின் புகழ் மங்கிப் போவது பற்றிய கவலை இல்லாமல், அது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் அம்மாக்கள் இயல்பாக இருக்கிறார்கள். என்றென்றைக்கும் தியாகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். 1999 ஏப்ரல் 24ல் தன் 78ஆம் வயதில் ராஜம்மா காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஆர்.பந்துலுவின் நூற்றாண்டு விழா கர்நாடகத்திலும் தமிழகத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல பத்திரிகைகளிலும் அது பற்றி எழுதப்பட்டது. ஆனால், பந்துலுவின் துணைவியார் எம்.வி.ராஜம்மா பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இதோ நூற்றாண்டை எட்டிப் பிடிக்க இருக்கும் நிலையிலும் ராஜம்மா பற்றி பேசவும் எழுதவும் செய்கிறோமே.

பார்ப்பதற்கும் அவரின் படங்கள் ஏராளம்
இருக்கின்றனவே… 2021 ஆம் ஆண்டு ராஜம்மாவுக்கு  நூற்றாண்டு. பெண் கலைஞர்களும் நூற்றாண்டு கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். ராஜம்மாவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டும். அவருக்கு மட்டுமல்ல, சாதனையாளர்களான அனைத்துப் பெண் கலைஞர்களுக்கும். அவர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே.

ஸ்டில்ஸ்: ஞானம்

எம்.வி.ராஜம்மா நடித்த திரைப்படங்களின் பட்டியல்

யயாதி, உத்தம புத்திரன், குமாஸ்தாவின் பெண், மதன காமராஜன், அனந்த சயனம், அர்த்தநாரி, விஜயலட்சுமி, ஞான சௌந்தரி, கோகுல தாசி, வேலைக்காரி, லைலா மஜ்னு, பாரிஜாதம், ராஜ விக்ரமா, தாய் உள்ளம், புயல், ஜமீன்தார், உலகம், கார்கோட்டை, தங்கமலை ரகசியம், எங்கள் குடும்பம் பெரிசு, பாகப்பிரிவினை, குழந்தைகள் கண்ட குடியரசு, கைராசி, குடும்ப விளக்கு, குடும்பத் தலைவன், தாயில்லாப்பிள்ளை, பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா?, தெய்வத்தின் தெய்வம், தர்மம் தலை காக்கும், ஆடிப்பெருக்கு, வீரத் திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே, சாரதா, கொடிமலர், பந்தபாசம், பணத்தோட்டம், குங்குமம், அன்னை இல்லம், ஆலய மணி, பெண் மனம், வேட்டைக்காரன், கர்ணன், தாயின் கருணை, வாழ்க்கைப் படகு, எங்க பாப்பா, தேடி வந்த மாப்பிள்ளை.