நிராகரிக்கப்பட்ட காதல்



இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நிச்சயமாக ஏதோவொரு நோக்கம் இருக்கிறது. நோக்கம் இல்லாமல் எதுவுமே இந்த உலகில் பிறப்பதில்லை. ஏன்... இந்த கூழாங்கல்லுக்குக் கூட ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் எதுவென்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம். நிச்சயமாக அதற்கென்று ஒரு நோக்கம் இருக்கும். அப்படி யில்லை என்றால் எதற்குமே நோக்கம் இருக்காது. நட்சத்திரங்களுக்குக் கூட.
- படத்தில் வருகின்ற கோமாளி.

சுற்றியிருக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட ஜெல்சமினோ என்ற அப்பாவிப் பெண்ணின் துயர்மிகுந்த வாழ்வினூடாக, சாலையோரத்தில் வித்தைகாட்டி பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கையை ஆழமாகச் சித்தரிக்கிறது ‘லா ஸ்ட்ரடா’. ஜாம்பனோ ஆஜானுபாகுவான உடற்கட்டையும், முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டவன். அவனுடைய அகண்ட மார்பில் இரும்புச் சங்கிலியைக் கட்டிக்கொண்டு, மூச்சை இறுக்கிப்பிடிப்பதன் மூலம் அந்தச் சங்கிலியை விடுவிக்கின்ற வித்தைக்காரன்.

மோட்டார் சைக்கிளுடன் இணைந்த ஒரு வண்டிதான் அவனுக்கு வீடு, சொத்து... எல்லாமுமே,,, ஜாம்பனோக்கு உதவியாக இருந்த ரோசா இறந்துவிடுகிறாள். அதனால் அவளின் தங்கையை உதவிக்கு அழைத்து வர ஒரு கடற்கரையோர கிராமத்துக்குச் செல்கிறான். அந்த தங்கை தான் ஜெல்சமினோ. ஜெல்சமினோ ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் நம்பிவிடும் பெண். விதவைத் தாயால் வளர்க்கப்படுகிறாள்.

அவளுடைய குடும்பம் வறுமையில் உழல்கிறது. வேறு வழியில்லாமல் கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு, கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த ஜெல்சமினோவை, ஜாம்பனோவுடன் அனுப்பிவைக்கிறாள் அந்த விதவைத் தாய். விருப்பமில்லாமல் அவனுடன் அழுதுகொண்டே செல்கிறாள். ஜாம்பனோவும், ஜெல்சமினோவும் அந்த வண்டியில் ஊர் ஊராகச் சென்று வித்தை காட்டுகிறார்கள். ஜாம்பனோவை  வாஞ்சையுடன் நெருங்குகிறாள் ஜெல்சமினோ.

ஆனால், அவனோ அவளிடம் முரட்டுத்தனமாக, கடுமையாக நடந்துகொள்கிறான். அவளுக்கு ட்ரம்பெட்டும், டிரம்ஸும் வாசிக்கக் கற்றுக்கொடுக்கிறான். தனது காம இச்சைகளை அவளின் அனுமதியின்றியே பலவந்தமாக தீர்த்துக்கொள்கிறான். அவள் சரியாக டிரம்ஸை வாசிக்காதபோது குச்சியால் அடிக்கிறான். இரவில் கிடைக்கும் இடத்தில் வண்டியிலேயே இருவரும் தூங்கிக்கொள்கிறார்கள். இத்தாலியில் உள்ள ஒரு நகரத்துக்கு வித்தை காட்ட செல்கின்றனர்.

ஜாம்பனோவின் புகழைப்பாடிக்கொண்டே டிரம்ஸை வாசிக்கிறாள். வேடிக்கை பார்க்க வந்திருப்பவர்களை வரவேற்கிறாள். கோமாளி மாதிரி நகைச்சுவையாகச் செய்து பார்வையாளர்களைக் கவர்கிறாள். அந்த ஊரில் நிறைய பணம் வசூலாகிறது. இருவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு பாலியல் தொழிலாளியைப் பார்த்தவுடன் ஜெல்சமினோவை தனியாக விட்டுவிட்டு ஜாம்பனோ சென்றுவிடுகிறான். இரவு முழுவதும் ஜாம்பனோ திரும்பி வருவதில்லை.

அதனால் அந்த இடத்திலேயே அவள் தனியாக இருக்க நேரிடுகிறது. அடுத்த நாள் காலையில் அவனைத் தேடி கண்டுபிடித்து சண்டைபோடுகிறாள். ஆனால், அவன் ஜெல்சமினோவை அடக்கி ஒடுக்கி விடுகிறான். கோபமடைகின்ற ஜெல்சமினோ, ஜாம்பனோவை விட்டு வேறு இடத்துக்கு போய்விடுகிறாள். அந்தரத்தில் கயிறு கட்டி நடந்து வித்தை காட்டுகின்ற ஒரு கோமாளி ஜெல்சமினோவுக்கு அறிமுகமாகிறான். அந்த கோமாளியின் நகைச்சுவை உணர்வும், துடுக்குத்தனமும் ஜெல்சமினோவை கவர்கிறது.

இந்த நிலையில் ஜெல்சமினோவை கண்டுபிடித்து, கட்டாயப்படுத்தி தன்னுடனே அழைத்துவந்துவிடுகிறான் ஜாம்பனோ. ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறான் ஜாம்பனோ. அங்கே தான் அந்த கோமாளியும் இருக்கிறான். அவன் ஜாம்பனோவுக்கு முன்பே தெரிந்தவன். அந்த கோமாளிக்கும், ஜாம்பனோவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அவன் எப்போதுமே ஜாம்பனோவை கிண்டல் செய்துகொண்டே இருக்கிறான்.

ஒரு நாள் ஜாம்பனோ அந்த கோமாளியை கத்தியால் குத்த முயல்கிறான். அப்போது போலீஸ் வந்து ஜாம்பனோவை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அந்த கோமாளியையும், ஜாம்பனோவையும் அந்த சர்க்கஸ் கம்பெனி வேலையில் இருந்து நீக்கிவிடுகிறது. ஜாம்பனோ சிறையில் இருக்கின்ற சமயம்  கோமாளியை ஜெல்சமினோ சந்திக்கிறாள். அவன் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு பக்கங்களை ஜெல்சமினோவுக்குத் திறந்துகாட்டுகிறான்.

அவளை கூடவே இருக்கச் சொல்கிறான். டிரெம்பட் வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறான். அவனும் எப்போதும் ஒரு சிறு வயலினை வாசித்துக் கொண்டே இருக்கிறான். அந்த வயலின் இசை ஜெல்சமினோவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் ஜாம்பனோ, அந்த கோமாளியை தாக்கி கொன்றுவிடுகிறான். இதை நேரில் காண்கின்ற ஜெல்சமினோ நிலைகுலைந்து போகிறாள். யாருக்கும் தெரியாமல், எந்த சந்தேகமும் ஏற்படாத மாதிரி கோமாளியை ஒரு பள்ளத்துக்குள் போட்டுவிடுகிறான் ஜாம்பனோ.

ஜாம்பனோ குரூரமான மனிதன், கொலைகாரன் என்று தெரிந்திருந்தாலும், அவனிடம் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்க்கிறாள். தன்னைத் திருமணம் செய்துகொள்ள கேட்கிறாள். ஆனால், அவனோ ஜெல்சமினோவை அடிமையைவிட கீழ்த்தரமாக நடத்துகிறான். ஏமாற்றம் அடைகிற அவள் டிரம்பெட்டை வாசித்து அமைதியடைகிறாள்.

இப்போது அவளுக்கு துணையாக இருப்பது அந்த டிரம்பெட்டும், இசையும் தான். அவள் எப்போதுமே கோமாளி வாசித்துக்கொண்டிருந்த அதே டியூனை திரும்பத் திரும்ப வாசிக்கிறாள். மட்டுமல்ல, ‘அந்த கோமாளியை கொன்று விட்டாய்’ என்று எப்போதுமே புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவளால் போலீசிடம் மாட்டிவிடுவோமோ என்று ஜாம்பனோ பயப்படுகிறான். அதனால் ஜெல்சமினோ தூங்கிக்கொண்டிருக்கும்போது அவளை தனியாக விட்டுவிட்டு ஜாம்பனோ சென்று விடுகிறான்.

சில நாட்களில் ஜெல்சமினோவின் நினைவு ஜாம்பனோவை வாட்டி எடுக்கிறது. அவள் இல்லாத அவனின் வாழ்க்கை துயரமும், தனிமையும்,வெறுமையுமே மிஞ்சி நிற்கிறது. சில  வருடங்களுக்குப் பிறகு , ஓர் ஊருக்கு வித்தை காட்ட ஜாம்பனோ செல்கிறான். அப்போது ஒரு பாடல் காற்றில் தவழ்ந்து வருகிறது. அந்தப் பாடல் ஜெல்சமினோ எப்போதுமே பாடிக்கொண்டிருந்தது. அதிர்ச்சியடையும் ஜாம்பனோ பாடல் வந்த திசையை நோக்கிச் செல்கிறான்.

அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஜெல்சமினோவைப் பற்றி விசாரிக்கிறான்.‘சில வருடங்களுக்குமுன் என்னோட அப்பா கடற்கரையில் உடல் நிலை சரியில்லாமல் தனியாக தவித்துக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவள் யாரிடமும் பேசவே இல்லை. எப்போதுமே இந்தப் பாட்டை பாடிக்கொண்டும், டிரெம்பெட்டை வாசித்துக்கொண்டும் இருந்தாள். பாவப்பட்ட பெண் அவள். சில நாட்களிலேயே இறந்து போய்விட்டாள்’ என்கிறாள் அவள்.

இதைக் கேட்டு நிலைகுலைந்து போகிற ஜாம்பனோ எதுவும் பேசமுடியாமல் மௌனமாகிறான். இறுகிப்போன இதயத்துக்குள் ஜெல்சமினோவின் மரணம் மென்மையைப் பாய்ச்சுகிறது. அன்றைய இரவு குடித்துவிட்டு எல்லோரிடமும் சண்டை போடுகிற ஜாம்பனோ கடற்கரையை நோக்கிச் செல்கிறான். யாருமற்ற கடற்கரையில் தனியாக அமர்ந்து ஜெல்சமினோவை நினைத்து கதறி அழுகிறான். அவனின் அழுகைக்குப் பின்னால் ஜெல்சமினோவின் பாடல் ஒளிக்க திரை இருள்கிறது.

ஜம்பனோவாக நடித்த அந்தோணி குயின், ஜெல்சமினோவாக நடித்த  மாசினா, கோமாளியாக நடித்த  ரிச்சர்ட்  ஆகியோரின் நடிப்பு அற்புதமானது. இந்தப் படத்தின் இயக்குனர் பெலினி. கடற்கரையில் ஆரம்பித்து கடற்கரையில் முடிகின்ற இந்தப் படம் தருகின்ற அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. வறுமையில் வாடுகின்ற எல்லாப் பெண்களும் ஜெல்சமினோவுக்கு நெருக்கமானவர்கள்.

பேருந்து நிலையங்களிலும், ரயில்களிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் ஜெல்சமினோ போன்ற வித்தை காட்டி பிழைப்பை நடத்துகிற பெண்களை இன்றைக்கும் நாம் பார்க்க முடியும். ஒருவேளை அந்தப் பெண்களும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து விலைக்கு வாங்கி வரப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்...இந்தப் படத்தைப் பார்த்தபிறகு அந்தப் பெண்களை அவ்வளவு சுலபமாக நம்மால் கடந்து போகமுடியாது.

பெலினி தன் படங்களில் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவு  பார்வையாளர்களுக்கும் பெரிய இடத்தை தந்திருக்கிறார். சிறுதுளி அன்பிற்காக ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்தித்த ஜெல்சமினோ போன்ற கதாபாத்திரங்களின் வாழ்வினூடாக பெலினி பார்வையாளர்களுக்குள் நிகழ்த்துகிற அனுபவம் கூர்மையானது. அந்த அனுபவத்தை நாம் உணர்ந்திருப்பதால் படத்தின் முடிவை கூட நம்மால் கணித்துவிட முடிகிறது.

ஏமாற்றுபவர்களாக, மனிதத்தன்மையற்றவர்களாக பார்வையாளர்கள் தங்களுக்குள்ளேயே உணர்கின்ற அப்படக்காட்சிகள் நிறைவுற்று, திரை இருண்ட பிறகும் முடிவுறாத காட்சிகள் கும்மிருட்டில் நகர்ந்துகொண்டே நம் இதயத்தை பிழிந்தெடுக்கிறது. சில நாட்களுக்கு நம்மால் எதைப் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை. ஒருவித சிக்கலில், அவலத்தில், குற்றவுணர்வில் மாட்டிக்கொள்கிற அந்த தருணத்தில் மனிதர்களை விட்டு விலகி ஒரு கடற்கரையையோ, தனித்த அறையையோ, மலையின் அடிவாரத்தையோ, மனிதப் பார்வை படாத ஒரு மண் சாலையையோ தேடிப்பிடித்து கதறி அழுகிறோம். நம்மால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவலைகளின் மூலம் ஒரு புதிய மனிதராக பரிணமிக்கிறோம்.

- த.சக்திவேல்