சுந்தர வானத்தில் சுற்றினோம்



என் தோழி கொல்கத்தாவுக்கு அலுவலக வேலையாகப் போகிறார். அப்படியே நம் குழுவினரும் அவருடன் சுந்தரவனக் காடுகளுக்கு போகலாமா?’ என்று தோழி தயாமலர் கேட்டவுடனே உள்ளுக்குள் குதூகலம் வந்து உட்கார்ந்து கொண்டது. வழக்கமாக எங்களது `சாவித்திரிபாய் பூலே பெண்கள் குழு’ பெண் பயணம் போவதென்றால், ரயில், பேருந்து, வாடகை வேன் என்றுதான் திட்டமிடுவோம்.

இந்த முறை தோழர்களுக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பதில் சிக்கல் என்பதால், சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் போய் வருவது என்று திட்டமிட்டோம். தயா நெட்டில் அலசி ஆராய்ந்து Backpackers Tour De Sundarbans ஏஜென்சி சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். அவர்களுடன் பேசி இரண்டு நாள் பேக்கேஜ் டூருக்கு புக் செய்தார்.

பணம் அனுப்புவது, எங்கள் பயணத்தைத் திட்டமிடுவது என்று ஹரிணி ஒருங்கிணைத்தார். தயாமலர், ஹரிணி தேவி, ஜான்சிராணி கோமதிபாய், மீனலோச்சனி, மேனகா, ரீனா ஷாலினி, அமுதா, பிரேமாவதி, நான் என்று ஒன்பது பேர் பயணத்துக்குத் தயாரானோம். கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து டிராவல் ஏஜென்ஸி எங்களை கூட்டிப் போவதாக முடிவாயிற்று.

நவம்பர் மாத முதல் சனிக்கிழமை, அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஃப்ளைட். அதற்கு முந்தைய தினங்களில் சென்னையில் மழை பின்னியெடுத்தது. ஃப்ளைட் இருக்குமா கேன்சலாகிவிடுமா என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தோம். வெள்ளிக்கிழமையும் மழைதான். இருந்தாலும், துணிந்து பயணத்துக்கு வெப்-செக்இன் செய்தோம். சனிக்கிழமை அதிகாலை.

ஒன்பது பேரும் நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீனம்பாக்கம் ஏர்போர்ட் வரவேண்டும். ஊபர், ஓலா ஒன்றும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வேறு டாக்ஸி பிடித்து, ஏர்போர்ட்டுக்கு வந்து, ஐந்தேகால் மணிக்கு ஃப்ளைட் ஏறி, குரூப் செல்ஃபி எடுத்தவுடன்தான் மூச்சே வந்தது. உற்சாகமாக கொல்கத்தாவுக்குப் பறந்தோம். அங்கு டிராவல் ஏஜென்ஸியிலிருந்து வந்திருந்த ஸ்டைலான கைடு கேத் டார்ல் மராஸி (அந்த இளைஞனின் பெயர்தான், அவர் தாத்தா இத்தாலி, பாட்டி இங்கிலாந்து) சாண்ட்விச்சுடன் வரவேற்றார்.

அவருடன் வேனில் ஏறி சுந்தரவனக் காடுகளை நோக்கிப் பயணித்தோம். வழியில் தேநீர் சாப்பிட இரண்டு கிராமங்களில் நிறுத்தினார். ரோட்டோர  தேநீர் கடை. அங்கிருந்த கேரம்போர்டில் விளையாடி, பெங்காலி நாட்டு நாயைக் கொஞ்சி, தெருவில் விற்ற  பானிபல் பழத்தை (நீர்நிலையில் வளரும் `சிங்கடா’ எனும் படர்கொடியில் காய்க்கிறதாம்) சாப்பிட்டு, ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டு, வெடிச்சிரிப்புடன் கோத்கலியை மதியம் 12 மணியளவில் அடைந்தோம்.

சுந்தர்பன்னுக்கு செல்லும் சாலை வழிப்பாதை இங்கு முடிகிறது. கோத்கலியிலிருந்து படகுப் பயணம். கோசாபா தீவு, சுற்றியிருக்கும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்கு விற்பனைச் சந்தை. இதைக் கடந்து படகில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பயணித்தோம். டிராவல் ஏஜென்சியின் அஜய், சுந்தர்பன் தீவுகளில் வசிக்கும் மக்கள், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்.

காடுகளில் தேன் சேகரிப்பதும், மீன் பிடிப்பதும் இம்மக்களின் முக்கிய தொழில்கள். காடுகளில் தேன் சேகரிப்பது ஆபத்தானது. தேனெடுக்கச் செல்லும்போது புலியாலோ மற்ற விலங்குகளாலோ தாக்கப்பட்டு இறந்து விடுவார்களாம். அங்குள்ள ஒரு தீவுக்கு `விதவாபள்ளி’ என்று பெயர்.  ஏனென்றால் அங்கிருந்து தேன் சேகரிக்க காட்டுக்குச் சென்ற பல ஆண்கள் இறந்துவிட, பெரும்பாலான பெண்கள் விதவைகளாக இருந்ததால் இந்தப் பெயர் வந்தது என்று அஜய் விவரிக்க, நெஞ்சு கனத்தது.

சட்ஜேலியா என்ற கிராமத்தை அடைந்தோம். இதனை `எகோ வில்லேஜ்’ என்கிறார்கள். மின்சாரம் கிடையாது. சூரிய ஒளியை சேமித்து தேவையான இடங்களில் மட்டும் சிறுவிளக்குகளைப் பொருத்தியிருக்கிறார்கள். அங்குள்ள மண்வீடுகளில் தங்கினோம். சிறிய குளம், சுற்றிலும் செடி கொடிகள், எளிய கலைநயமிக்க உணவுக்கூடம் என்று அந்த வளாகம் வெகு அழகு. எந்த மத அடையாளமோ, வழிபாட்டு இடமோ அங்கு இல்லை என்பது சிறப்பு.

மீன் குழம்புடன் ருசியான மதிய உணவருந்திவிட்டு கிராமத்தை சுற்றிப்பார்த்தோம். அன்பான மக்கள், பசுமையான நெல்வயல்கள், சிற்றோடைகளைக் கடந்து சதுப்பு நிலத்தின் ஒற்றையடிப் பாதையில் நடந்து படகுத்துறைக்கு வந்தோம். சூரியன் மறைவதைக் காண பதர் ஆற்றில் படகில் சென்றோம். அரவமற்ற சூழல், எங்கும் ஆரஞ்சு வண்ண மென்ஒளி, அமைதியான ஆற்றில் துடுப்பை வலிக்கும் சத்தம் மட்டும். இடையிடையே எங்களின் சிரிப்பு சத்தம். உல்லாசமும் மகிழ்ச்சியும் கலந்த ஓர் உணர்வு!

இரவு உணவுக்கு முன்பு அந்த கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி. மொழி புரியாவிட்டாலும், துள்ளலான இசையும், துடிப்பான பாடலும் ஈர்க்க நாங்களும் சேர்ந்து தாளம் போட்டோம். ஹரிணி, அவர்களின் இசைக்கருவியை வாங்கி உற்சாகமாக வாசித்தார். இரவு ஒன்பது மணியளவில் படகில் `நைட்ரைட்’ போகிறோம் என்று கேத் சொன்னதும் ஆனந்தக் கூத்தாடினோம்.

அன்று பௌர்ணமி வேறு. வாவ் ! எங்களுக்காக தனியே ஒரு படகு. நாங்கள் ஒன்பது பேருடன் கேத்தும், படகோட்டுனரும்தான். மேகங்களற்ற தெளிந்த வானத்தில், நிலவு மட்டும்.  சுற்றிலும் காடு. நடுவில் அகன்ற பதர் நதியில் படகு மெதுவாகப் போனது. எங்கும் நிலவின் மென்னொளி! அற்புதமான அனுபவம்! மனதில் பொங்கிய ஆனந்தத்தை, நிறைவை சொல்ல வார்த்தைகள் இல்லை. பிரபஞ்சம் நெருங்கி வந்து அணைத்துக் கொண்ட கதகதப்பு ! இயற்கை இவ்வளவு இனிமையானதா?

கூரை வேய்ந்த மண்குடிசையில் சுகமான இரவுத் தூக்கம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சூரியன் வந்து எழுப்பிவிட்டது. தயாராகி ஆறு மணிக்கு படகில் ஏறிவிட்டோம். ஆம், அன்று முழுக்க படகில் பயணித்து சுந்தர்பன் காடுகளை சுற்றிப் பார்த்தோம். முந்தைய பௌர்ணமி இரவில் உயர்ந்திருந்த நீர்மட்டம் இப்போது வெகுவாக இறங்கியிருந்தது சுவாரசியம். சுற்றிலும் நீர், ஆடும் படகு, இருபுறமும் காடு, தோழிகளுடன் ஆத்மார்த்தமான உரையாடல் என்று நாங்கள் இருந்தது வேறொரு உலகில்.

படகிலேயே சுடச்சுட பூரியும், மதியம் மீனும், சிக்கனும் சாப்பிட்டது மறக்க முடியாது. இடையே சஜ்னேகாளி, சுதனகாளி, டோபங்கி ஆகிய இடங்களில் இறங்கி, அங்குள்ள உயர்ந்த கோபுரங்களில் ஏறி காட்டின் அழகை கண்டுகளித்தோம். பல்வேறு பறவை இனங்கள், காட்டுப்பூனை, மான் கூட்டங்கள், முதலைகளை ரசித்தோம். படகு சென்ற நீர்வழி பங்களாதேஷ் எல்லைப்புறம் என்பதால், அந்த நாட்டுப் படகுகளையும், ரோந்து சென்ற ராணுவத்தினரையும் ஆங்காங்கே பார்த்தோம். முழுவதும் பெண்கள் இருந்த எங்கள் படகை, எதிரில் வந்த படகினர் வினோதமாக பார்த்துச் சென்றனர்.

மாலையில் படகிலிருந்து இறங்கி, வேனில் பயணித்து இரவு கொல்கத்தா வந்து விட்டோம். அங்கு கெஸ்ட் ஹவுஸில் தங்கி, மறுநாள் கொல்கத்தா நகரை சுற்றிப் பார்த்தோம். காலை உணவு ரோட்டோர உணவகத்தில் பூரி, சென்னா பட்டூரா சாப்பிட்டோம். ருசியாக இருந்தது, விலையும் மலிவு. மண்குடுவையில் தேநீர்  குடித்தோம் (மண் குடுவையை தூக்கிப்போடாமல், பையில் பத்திரப்படுத்தியதைப் பார்த்து, டீக்கடைக்காரர் சிரித்தார்.)

மொத்தப் பயணத்திலும் ஒன்றை கவனித்தோம். உடன் வந்த பிற பயணிகள், எங்கள் பேச்சையும் சிரிப்பையும் பார்த்து முதலில் தயங்குகிறார்கள். பிறகு தாமாக வந்து பேசி  `லைவ்லியான டீம்’  என்று நட்பாகி விடுகிறார்கள். பிரபஞ்சப் பெருவெளி பெண்ணுக்குமானது என்ற ஞானோதயம் வந்துவிடுகிறது போல!

சவுத்பார்க் ஸ்ட்ரீட் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றோம். மதத்தில் நம்பிக்கை இல்லாத, சகமனிதர்கள் மேல் பேரன்புடைய முற்போக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இது என்று கேத் சொன்னபோது நெகிழ்ந்தோம். சுதந்திரப் போராட்ட காலத்தில் முற்போக்கு இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கியவரும், யங்பெங்கால் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவருமான ஹென்றி லூயிஸ் விவியன் டெரோஸியோ, ஏசியாடிக் சொஸைட்டி அமைப்பின் நிறுவனர் சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற பலரின் கல்லறைகள் இங்குள்ளன.

இந்தத் தோட்டம் 1767ல் அமைக்கப்பட்டது. உலகின் பழமையான சின்னமாக பாதுகாத்து வருகிறார்கள். வடக்கு கொல்கத்தாவில் உள்ள குமார்டூலி பாரம்பரியமான களிமண் சிற்பங்கள் செய்யும் கலைஞர்கள் வசிக்கும் பகுதி. அங்கு சென்று அவர்கள் சிற்பங்கள் செய்யும் அழகைக் கண்டு சொக்கிப் போனோம். சைனா டவுன் பகுதியில் இன்றும் சீனர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் உணவகங்களும் இயங்குகின்றன. `கார்பேஜ் மவுன்டன்’ எனப்படும் குப்பை மலை இருக்கும் தபா பகுதிக்கும் சென்றோம்.

கொல்கத்தா நகரின் மொத்த குப்பை யும் இங்கு கொண்டுவரப்பட்டு பிரிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமே குப்பை தான். அதைப் பிரித்து தொழிற்சாலைகளுக்கு விற்கிறார்கள். இந்தப் பகுதியைச் சுற்றி காய்கறிகளும் பயிரிடுகிறார்கள். அன்னை தெரசாவின் இல்லம், விக்டோரியா மகால், காளி கோயில், பழைய மற்றும் புதிய ஹவுரா பாலம் என்று விசிட் அடித்துவிட்டு, சோனா காச்சிக்குப் போகவேண்டும் என்றோம்.

கேத் அதிர்ச்சியாகிவிட்டார். அது பாலியல் தொழிலாளிகள் வசிக்கும் பகுதி. பெண்கள் மீதான கொடுமையான சுரண்டலின் சின்னமான சோனா காச்சிக்கு போவது ஓர் அனுபவத்துக்காகத்தான் என்று விளக்கவும், ஒப்புக் கொண்டார். வேனை விட்டு இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அழைத்துப் போனார். குறுகலான அந்தத் தெருவில் கூட்டம் கூட்டமாக பெண்கள், அனைத்து வயதிலும். அவர்கள் பார்வையில் தெரிவது குற்றச்சாட்டா, சோகமா, கோபமா, வருத்தமா… புரியவில்லை.

அவர்களைச் சுற்றி ஆண்கள் கூட்டம், உடைமையாளர்களா, பாதுகாவலர்களா, வாடிக்கையாளர்களா… தெரியவில்லை. நெஞ்சம் கனத்தது. அனைவரும் அமைதியாகிவிட்டோம். கேத்துக்கு நன்றி கூறி விடைபெற்றோம். மறுநாள் அதிகாலை கொல்கத்தாவில் விமானம் ஏறினோம். ஸ்பீக்கரில் கம்பீரமான பெண் குரல் `ஐயம் கேப்டன் அமிர்தா பேனர்ஜி.

தீபிகா இஸ் மை அஸிஸ்டிங் ஆபீசர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. பெண் விமான ஓட்டுனர்கள்! ஏதோ நாங்களே ஓட்டுவது போல மகிழ்ந்தோம். சென்னையில் மழையுடன் மோசமான வானிலை இருந்தாலும் அவர்கள் ஜாக்கிரதையாக விமானத்தை இயக்கி கச்சிதமாக தரையிறக்கினர். நாங்கள் அனைவரும் கேப்டன் அமிர்தாவையும், உதவி அதிகாரி தீபிகாவையும் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்தினோம். பெண் பயணத்துக்கு இதைவிட பொருத்தமான நிறைவு இருக்க முடியுமா !!

- கீதா இளங்கோவன்