அனிதாவின் நினைவாக கல்வியுதவி - விஜய் சேதுபதி



நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கருகிப்போன தன் கனவுகளுக்காக தன்னை சுருக்கிட்டுக் கொண்ட அனிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? அந்நிகழ்வு மனமுள்ள யாரையும் நெகிழச் செய்யும். அதற்காக மனம் நெகிழ்ந்திருக்கும் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி தான் நடித்த விளம்பரப் படத்திற்காக கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை அரியலூர் கிராம பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக வழங்கி இருக்கிறார்.

திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனம் தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் ‘அணில் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்தச் சேமியாவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை நவம்பர் 9-ம்தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில், நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.    

‘‘துரித உணவுகள் பிரபலம் அடைந்துள்ளதால், அதில் உள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களின் நலனுக்காக, குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில் தரமான உணவுகளை தயாரிக்க வேண் டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறு தானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமலஹாசன் தெரிவித்தார்.

அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவரான நடிகர் விஜய்சேதுபதி புதிய ரகங்களை அறிமுகப்படுத்திய பின்னர் பேசியதாவது, “சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.  இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக  வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது.

அங்கு மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு  தலா 5000 ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11  அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் மொத்தம் 49,20,000 தமிழக அரசிடம்  வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்’’ என்று
குறிப்பிட்டுப் பேசினார்.

- ஸ்ரீதேவி மோகன்