டெலிவரி கேர்ள்ஸ்



இணையதளம் மூலம் வாங்கப்படும் பொருட்களை வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் வேலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர். சென்னை ராமாபுரம் பகுதியில் தனியார் ஆன்லைன் நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் இந்த வேலையில் கலக்கி வருகின்றனர். நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலையில் ஆளுயர பையை மாட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும் நபர்களை பார்த்திருப்போம். காய்கறி, வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வீட்டில் இருந்தே  ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அவற்றை மழை, வெயில் என்று பாராமல் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தேதியில் கொண்டு செல்லும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமாபுரம் பகுதியில் பெண்கள் ஆளுயர பையை மாட்டிக்கொண்டு வீடு வீடாக சென்று வினியோகம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெண்கள் மட்டுமே தங்களுடைய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இதை நடத்திவரும் சாரனி பெண்கள் அமைப்பை சேர்ந்த ஜமுனா ராணியிடம் பேசினேன். தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “நான் 15 ஆண்டுகள் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தது. இதை தொடங்கும்போது பெண்களால் இதை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. சவாலாகவே இருக்கட்டும் என்றே தொடங்கினேன்.

தொடக்கத்தில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் எனக்கும் இருந்தது. அமேசான் நிறுவனமும், உறவினர்களும் உன்னால் முடியும் என்று ஊக்கம் அளித்தனர். இதை நான் தொடங்கும்போது 3 பேர் மட்டுமே இருந்தோம். இன்று 10க்கும் மேற்பட்ட டெலிவரி பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் இப்போது எங்களுக்கு எளிமையாகி விட்டது. வாடிக்கையாளர்களிடமும் பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சென்னை-ராமாபுரம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நாங்கள் டெலிவரி செய்து வருகிறோம். 

இந்தப் பகுதியை பொறுத்தவரை பெரும்பாலான ஆர்டர்கள் ஐடி ஊழியர்களுடையதாக இருக்கும். அங்கு வேன் மூலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு எங்களுடைய ஊழியர்கள் சென்று வினியோகிப்பார்கள். எங்களுடைய அமைப்பில் டூவீலர் ஓட்டும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் மற்ற பகுதியில் இருந்து வரும் ஆர்டர்களை  வீடு வீடாக சென்று வினியோகம் செய்கின்றனர். வீட்டுக்குள்ளே பூட்டிக்கிடந்த எங்களுக்கு இன்று இந்த ஏரியா முழுவதும் அத்துப்படியாகிவிட்டது. முகவரி தெரியாதவர்கள் கூட எங்களிடம் முகவரி கேட்டுச் செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பகுதி எங்களுக்கு பரிச்சயம் ஆகிவிட்டது.

இங்கு வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆனவர்கள். அனைவருக்கும் காலை 9.30 மணி முதல் 6 மணி வரை வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் அவர்கள் முழு நேரம் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அவர்கள் எடுத்துச்செல்லும் பொருட்களை எவ்வளவு சீக்கிரம் டெலிவரி செய்ய முடியுமோ, முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இங்கு வேலை பார்க்கும்  பெண்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பள்ளியில் இருந்து அழைத்து வருவது என அவர்களுக்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
 
அவர்களுக்கு ஏற்றவாறு நேரம் ஒதுக்கி, கிடைக்கும் நேரத்தில்தான் வேலை செய்கிறார்கள். அனைவருக்கும் மாதச் சம்பளமும், தினசரி ஊக்கத் தொகையும் கொடுக்கப்படுகிறது. சராசரியாக காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகபட்சம் ஒரு நாளைக்கு 50 பொருட்களை ஊழியர்கள் வினியோகம் செய்ய முடியும். இதுவரை எந்த விதமான பிரச்சனையையும் நாங்கள் சந்திக்கவில்லை. முதல்முறையாக பெண்களை ஆன்லைன் வினியோகஸ்தர்களாக பார்க்கையில் அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இதற்கு முன்பு ஆண்கள் டெலிவரிக்கு வரும்போது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு அச்சம் இருந்ததாகவும் இப்போது அச்சம் இன்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வெற்றிக்கு ஊழியர்கள்தான் முக்கிய காரணம். அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. இங்கு பெண்கள் மட்டுமே இருப் பதால் அவர்களுக்கான இடமாக இது இருக்கிறது.  வேலை பார்க்கும் இடமாக இல்லாமல் வீட்டில் இருப்பது போல உணருகிறோம். ஒரு குழுவாக இல்லாமல் நாங்கள் குடும்பமாக இருக்கிறோம்” என்கிறார் ஜமுனா ராணி.

- ஜெ.சதீஷ்