திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்



அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அடிப்படையில் திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஆண்டு கேரள அரசு செயல்படுத்தியது. பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஆந்திராவிலும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு  திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இத்திட்டத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இத்திட்டம் குறித்து சிலரிடம் பேசினேன்...

மூத்த திருநங்கையும் ‘வெள்ளை மொழி’ நூலின் ஆசிரியருமான ரேவதி கூறுகையில், “ஓய்வூதியம், வங்கிக்கடன் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் இது மட்டும் திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்துமா என்கிற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் மாதம் 1000 ரூபாய் இத்திட்டத்தில் இருந்து கிடைக்கிறது. நானும் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இரண்டு மாதம் பணம்  பெற்றேன். ஆனால் இப்போது 8 மாதமாக கிடைக்கவில்லை. இது குறித்து கேட்ட போது அரசு தரப்பில் இருந்து மொத்தமாக பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஓய்வூதியம் என்பது முடியாத காலகட்டத்தில் உதவியாக இருப்பதற்கு  மாதம் மாதம் வழங்கப்படுவது. ஆனால் ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து அனுப்புவது பயனுள்ளதாக இருக்குமா என்றால் கிடையாது.

கல்வியை பொறுத்தவரை பல்கலைக்கழகங்களில் திருநங்கைகளுக்கு இடம் வழங்கப்படும் என்று இப்போது கூறுகிறார்கள். ஆனால் எங்களுடைய பள்ளிக்கல்வியே கேள்விக்குறியாக இருக்கிறது. அதை சரி செய்யாமல் மேல்நிலைக்கல்வியை வழங்குவது என்பது எப்படி சரியானதாக இருக்கும். புறக்கணிப்பு, ஒதுக்குதல் இல்லாத கல்வியை இந்த அரசு எங்களுக்கு வழங்கவேண்டும். அப்படி அரசு வழங்கினாலும் இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். உதாரணமாக தலித் சமூகத்தை சொல்லலாம்.

எத்தனையோ காலமாக இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, தீண்டாமை கொடுமைகளை சந்தித்து வருகிறார்கள். அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து அவர்களுக்கு கிடைத்த இடஒதுக்கீடு, சம உரிமை இருந்தாலும் இன்னமும் பல்வேறு கிராமங்களில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் தொடர்ச்சியாக  இந்த சம்பவங்கள் நடப்பதை அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.

இது நீண்ட நெடிய போராட்டம். இந்த போராட்டத்திற்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த சூழலில் திருநங்கை சமூகம் குறித்து இப்போதுதான் பேச துவங்கியிருக்கிறார்கள்... இந்த சமூகத்தின் சிறு அங்கீகாரமாகத்தான் இந்த திட்டங்களை நான் பார்க்கிறேன். சமூக மாற்றமாக இதை பார்க்க முடியாது” என்கிறார் ரேவதி. அரங்கக் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா கூறுகையில், “கேரள மாநிலத்தில் இயங்கும் இடதுசாரி அரசு மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரி யாதையும் இருக்கிறது.

திருநங்கைகளின் முன்னேற் றத்திற்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்து வதில் கேரள அரசு முதன்மையாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் அதை பின்பற்றுவது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால்  ஓய்வூதியத்திட்டம் என்பது 60 வயது கடந்தவர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நான் 60 வயது வரைக்கும் வாழ்வதற்கான வாழ்வாதாரம் இங்கு இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. அடிப்படைக் கல்வி, வேலை வாய்ப்பு இல்லாமல் ஓய்வூதியம் மட்டும் வழங்குவது, திருநங்கைகள் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழில் செய்வதையும் அரசு அங்கீகரிக்கிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது. 

பெரும்பான்மையான திருநங்கைகள் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கு இந்திய அரசு உதவி செய்ய முன்வரவேண்டும். தமிழகத்தில் திருநங்கைகள் படிக்கலாம் என்று கூறுகிறது அரசு. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. திருநங்கைகள் பெண்கள் பள்ளியிலோ, பெண்கள் கல்லூரியிலோ படிக்க முடியாது. திருநங்கைகள் விடுதியில் தங்கி படிக்க முடியாது. இவ்வளவு பிரச்னைகள் உள்ளன. அனைவருக்கும் இருக்கக்கூடிய இடஒதுக்கீடு எங்களுக்கும் கிடைத்தால் இந்த பிரச்னைகள் இருக்காது. அதை கொடுக்காமல் இந்த திட்டங்களால் இந்த சமுதாயத்திற்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து” என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா
 

- ஜெ.சதீஷ்