கிச்சன் டிப்ஸ்...



* தேங்காய் இல்லாத சமயத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் புதுமையான சுவையுடன் இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள கிரேவி செய்யும்போது முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிதளவு சர்க்கரையை போட்டுக் கரைத்து பொன்னிறமாக்கி கொள்ளவும். பின் வழக்கம்போல் செய்தால் கிரேவி நல்ல பொன்னிறமாக வரும்.
* கொழுக்கட்டைக்கு மேல் மாவு அரைக்கும்போது 1 டம்ளர் அரிசிக்கு 1 டீஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் செப்பு விரியாது அழகாக வரும்.
* வெண்ணெயில் சிறிது பால் விட்டுமிக்சியில் அடித்துக் கொண்டால் ஃப்ரெஷ் க்ரீமுக்கு பதிலாகப் பயன்படுத்த முடியும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* பச்சைமிளகாய் பஜ்ஜி செய்யப் போறீங்களா? கடலை மாவு கரைசலில் முக்கி எடுக்கும் முன்பு மிளகாயை லேசாக பிளந்து அதற்குள் ஓமம், உப்பு, கடலைமாவு, எண்ணெய் நான்கையும் பிசறி லேசாக ஸ்டப் செய்து பிறகு பஜ்ஜி செய்து பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.
* கெட்டித்தயிர் அதிகம் புளிக்கிறதா? அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். கால் மணி நேரம் கழித்து மேலே தேங்கியுள்ள தண்ணீரை நீக்கவும். இப்போது தயிரை குடித்தால் புளிப்பு இன்றி அருமையாக இருக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* போளி தட்டும் போது வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் மெல்லிசாக வரும்.
* கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவை 2 : 1 : 1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சமையல் சோடா போடாமலே பஜ்ஜி உப்பி வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேகவைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.
* அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணியையும் சேர்த்து அரைத்தால் அடை மிகவும் ருசியாக இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

* விளாம்பழ ஓடை தூக்கி எறியாமல் கழுவி விட்டு ரசத்தில் போட்டால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.
* இட்லிப்பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு ஒரு சுற்று அரைத்து எடுத்தால் வெங்காயச் சட்னி தயார்.
* பனீரை லேசாகப் பொரித்து தண்ணீர் அல்லது தயிரில் ஊறவிட்டு மசாலா கொதித்தவுடன் சேர்க்க வேண்டும். அதிகம் கொதிக்க வைத்தால் பனீர் தோல் போல கெட்டியாகி விடும்.
- எஸ்.பிரியம்வதா, மைலாப்பூர்.

* கமலா ஆரஞ்சுத் தோலைப் பொடியாக நறுக்கி வதக்கி உப்பு, புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து வைத்து துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
* தேங்காய் உடைத்த இளநீரை ஊற்றி தயிர் சாதம் செய்தால் சூப்பர் சுவையாக இருக்கும்.
- கே.ராணி, உள்ளகரம்.