வானவில் சந்தை



கை நூலகம்

சில ஆண்டுகளுக்கு முன், உறவினர்களோடு நான் கயாவுக்கும் காசிக்கும் சென்றி ருந்தேன். சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கும், பிறகு அங்கிருந்து டெல்லி செல்லும் ரயிலைப் பிடித்து கயாவுக்கும் சென்றோம். ரயிலிலேயே கிட்டத்தட்ட முப்பத்தெட்டு மணி நேரம் பயணம். அதே அளவு திரும்புதல் நேரம். தூங்கும் நேரம் போக மற்ற நேரத்தில், எவ்வளவு தான் ஒருவர் வேடிக்கை பார்க்க முடியும். எனக்குப் பயணங்களில் இசை கேட்பதும் புத்தகம் படிப்பதும் (ரயில் பயணத்தில்) வழக்கம் என்பதால் பிரச்னை இல்லை.

ஆனால், நீண்ட நாள் பயணங்களில் உள்ள முக்கியமான சிக்கல் பயணச் சுமையைக் கூட்ட முடியாதென்பதுதான். எவ்வளவு குறைவான சுமை இருக்கிறதோ, அவ்வளவுக்குப் பயணம் எளிதாக இருக்கும். எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் செல்பேசியில் எடுத்துச் சென்றுவிடலாம். ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. எடைச் சுமையோடு, இடப் பற்றாக்குறைப் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும். அதனால், பல்வேறு ரசனை சார்ந்த புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாது. இதற்குத் தீர்வாக, நான் ஒரு டேப் வாங்க வேண்டும் என அப்போது நினைத்தேன்.

மடிக்கணினியில் நீண்ட நேரம் வாசிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் (கண்களின் நலன் கருதி), பயணங்களின் போது வாசிக்கவும் உதவும் என்றெண்ணி டேப்களைக் குறித்து ஆராய்ந்தேன். ஆனால், அவை சற்றே பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள் என்ற எண்ணமே எஞ்சியது. அவற்றி்லும் பேட்டரி சார்ஜ் ஒரு நாளைக்கு மேல் தாக்குப்பிடிக்காது. இணையத்தில் தொடர்பு கொண்டிருந்தாலோ (3ஜி அல்லது வைஃபை மூலமாக) இன்னும் விரைவாகக் காலியாகும் திறனே கொண்டிருந்தது.

பயணத்திற்கு அது தோதானதில்லை. அதோடு, அவற்றின் திரையும், செல்பேசிகளின் திரை போலவே நீண்ட நேர வாசிப்புக்கு ஏற்றதல்ல. எவ்வளவுதான் ஒளியைக் குறைத்து வைத்தாலும், கண்கள் சோர்வடைவது தவிர்க்க முடியாதது. அப்போதுதான், புத்தகங்களை வாசிப்பதற்கு உகந்த கருவி என, ஒரு நண்பரால் அறிமுகப்படுத்தப் பட்டது அமேசானின் கிண்டில். மின் புத்தக வாசிப்பான்கள் (e-book Reader) நீண்ட வருடங்களாகச் சந்தையில் இருந்து வருகின்றன. தட்டையாக, ஒரு டேப்லட் போலவே இருக்கும் மின் புத்தக வாசிப்பான், வாசிப்பதற்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மின் திரையைக் கொண்டிருக்கிறது. மின் காகிதம் (e-paper) என்று அழைக்கப்படும், வெளிச்சத்தை பிரதிபலிக்காத இவற்றின் திரை, புத்தகத் தாள்களை வாசிக்கும் அனுபவத்திற்கு நெருக்கமான ஒன்றாக மின் புத்தக வாசிப்பை மாற்றிவிட்டது.

ஈ இன்க் (e-ink, தாளில் உள்ள மை போன்ற தோற்றம்) என்ற தொழில்நுட்பத்தின் மூலம், எல்.சி.டி. (LCD) திரையை வாசிப்பிற்குத் தோதான ஒன்றாக மாற்றியுள்ளனர். எல்.சி.டி. திரையின் வழக்கமான பின்னணி ஒளி இவற்றில் இல்லாததால், இயங்குவதற்குக் குறைந்த அளவு மின் சக்தியே தேவைப்படுகிறது. அதனால், இந்த மின் புத்தக வாசிப்பான்களை பல வாரங்களுக்கு சார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடிகிறது. ஒரு டேப்லட்டை விட எடைக் குறைவாகவும் இருப்பதால் கையில் நீண்ட நேரம் வைத்துப் படிக்க வசதியாகவும் இருக்கிறது.

அமேசான் கிண்டில் (Amazon Kindle), சோனி ரீடர் (Sony Reader), கோபோ (Kobo) போன்றவை வாசிப்பான்களில் மிகவும் பிரபலமான பிராண்டுகளாக இருக்கின்றன.ஓனிக்ஸ் புக்ஸ் (Onyx Boox), பார்னேஸ் அண்ட் நோபிளின் நூக் (Barnes & Noble’s Nook) போன்ற வாசிப்பான்களும் சந்தையில் இருந்தாலும், கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் கவனிக்க வேண்டியவை. பொதுவாகவே, மின் புத்தக வாசிப்பான்களை, பெரு நகரங்கள் தாண்டி கடைகளில் வாங்குவது சிரமம். பெரு நகரங்களின் மால்களிலும், ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), க்ரோமா (Chroma) போன்ற பெரிய மின்சாதனப்பொருட்கள் விற்கும் கடைகளிலும்தான் காண முடியும். புத்தகம் வாசிப்பதற்காகவே ஒரு மின்சாதனக் கருவியை வாங்கும் விருப்பம் இன்னும் பரவலாகாததே இதற்குக் காரணம்.

அதனால், தற்போதைய நிலையில் இவற்றை ஆன்லைனில் வாங்குவதே எளிதானது. ஏனென்றால், கடைகளில் இணையதளங்கள் அளவுக்கு பரவலான தேர்வுகள் இருக்க முடியாது. இணையத்தில், அமேசான் தளமே முன்னணியில் இருக்கிறது. அமேசான், ஓனிக்ஸ், கோபோ, சோனி ஆகிய நிறுவனங்களின் வாசிப்பான்களை விற்றாலும், தனது வாசிப்பானான கிண்டிலையே பெருமளவுக்கு விளம்பரப்படுத்துகிறது. கோபோ ஆரா (Kobo Aura) இருபத்திரண்டாயிரம் ரூபாய்க்கும், கோபோ ஆரா H20 (தண்ணீரில் நனைந்தாலும் பாதுகாப்பானது) இருபத்தெட்டாயிரம் ரூபாய்க்கும் கிடைக்கின்றன. சோனியின் வாசிப்பான்கள் ஒன்பதாயிரம் ரூபாயிலிருந்து பன்னிரெண்டாயிரம் ரூபாய் வரையில் கிடைக்கின்றன. மிகவும் பிரபலமான அமேசானின் கிண்டில், ஆறாயிரம் ரூபாயிலிருந்து இருபத்திரெண்டாயிரம் ரூபாய் வரை நான்கு வகைகளில் கிடைக்கிறது.

மின் புத்தக வாசிப்பான்களை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை...
* புத்தகம் என்பதால், எழுத்துக்களின் துல்லியம் முக்கியம். உதாரணமாக, 167 ppi (ஒரு இன்ச் இடத்தில் இருக்கும் பிக்சல்களின் எண்ணிக்கை) விட 300 ppi கொண்ட திரைகள் கூடுதல் துல்லியத்துடன் எழுத்துக்களைக் காட்டும். அதோடு, ஒளிரும் திரை கொண்ட வாசிப்பான்களும் இப்போது கிடைக்கின்றன. குறைந்த வெளிச்சத்திலோ, இருட்டிலோ படிக்க இவை தோதானவை.

* கருவியின் எடை. நீண்ட நேரம் படிக்க, வாசிப்பான்கள் இலகுவான எடை கொண்டிருக்க வேண்டும். கையில் பிடிக்கத் தோதான வகையில் கருவியின் ஓரங்கள் இருக்கவேண்டும். கிண்டில் ஓயசிஸ், கையில் வாகாகப் பிடித்துப் படிக்க இடம் தரும் வகையில் அகன்ற பக்கவாட்டைக் கொண்டிருக்கிறது.

* மின் புத்தகங்கள், ஈபப் (epub), மோபி (mobi), பிடிஎஃப் (PDF), சிபிஆர் (CBR)  எனப் பலவகையான தொழில்நுட்பங்களில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கும் வாசிப்பான், இவற்றில் பெரும்பாலான வகைமைகளை படிக்கும் திறன் கொண்டுள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.

* மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்வது. 3ஜி அல்லது வை.ஃபை. (Wifi) இணைப்புத் திறன் கொண்ட வாசிப்பானை வாங்குவது சிறந்தது. மின் புத்தகங்களை இணையத்தில் வாங்க அதுவே எளிதானது.     

* இன்றைய தேதியில் மிக அதிகமான மின் புத்தகங்களை இணையத்தில் வழங்கும் நிறுவனமாக அமேசான் உள்ளது. தமிழிலும் அதிகமான மின்புத்தகங்களை அது விற்பனைக்கு வைத்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத்தையும் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலப் புத்தகங்களை பல்வேறு தலைப்புகளில் இலவசமாக படிக்கலாம். ஒரு மின் வாசிப்பானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேமித்து வைத்துப் படிக்க முடியும். மின் புத்தகங்களின் மிக முக்கியக் குறை, அவை வண்ணங்களைக் காட்டாது என்பதே. ஆனால், அவற்றின் மற்ற பயன்களைப் பார்த்தால் அது ஒன்றும் பெரியதில்லைதான். 

(வண்ணங்கள் தொடரும்!)