இங்கு பெண்கள்தான் எல்லாமே



வாசகர் பகுதி

604 பேரை ஜனத்தொகையாக கொண்ட இந்த தீவுகள் ஒரு முனிசிபாலிட்டி. இதில் 69 ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள். இங்குள்ள ஆண்கள் வருடத்தில் பல மாதங்கள், கடலில் மீன் பிடிக்கச் சென்று விடுவதால், முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்யம்தான். வீட்டு நிர்வாகம், ஊர் நிர்வாகம் என எல்லாமே பெண்கள்தான். பால்டிக் கடலில் எஸ்டோனா நாட்டைச் சுற்றி 2,355 தீவுகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது சாரிமா, 2,671 சதுர கிலோமீட்டர் கொண்டது. அடுத்து பெரியது முகு. 198 சதுர கிலோமீட்டர் கொண்டது. இந்த வகையில் ஏழாவது மிகப் பெரிய தீவு ‘கிக்னு’ தீவு. இதன் பரப்பு 16.0 சதுர கிலோமீட்டர். 7 கி.மீ. நீளமும், 3.3 கி.மீ. அகலமும் கொண்டது.

எலம்சி, லினாகுலா, குட்ஸ்குலா மற்றும் சாரே ஆகிய நான்கு தீவுகள் இணைந்தது ‘கிக்னு’ தீவு. 600 ஆண்டு கலாச்சாரம் கொண்டது இந்தப் பகுதி. பாட்டும் நடனமும் இவர்களுடைய பண்பாடு. இங்குள்ள பெண்கள் அணியும் ஆடைகள் பாரம்பரியமானவை. கவர்ச்சி மிகுந்தவை. இங்கு சர்ச், பள்ளி, மக்கள் மன்றம், அருங்காட்சியகம், நூலகம், தேசிய பூங்கா, துறைமுகம், விமான நிலையம், கலங்கரை விளக்கம், தங்கும் விடுதி என எல்லாமே உண்டு.

பண்டிகைகளை இவர்கள் பாட்டுப் பாடி, நடனம் ஆடி கொண்டாடுவது தனி அழகு. கிறிஸ்துமஸ் சமயங்களில் இது மேலும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும். பல நூற்றாண்டுகளாக இந்த இரு கலைகளுமே தொடருவது உலகப் புகழ் பெற்றது. இதை அறிந்து யுனெஸ்கோ இந்த தீவுகளுக்கு பாரம்பரிய அங்கீகாரத்தை ‘Master piece of oral and Intangible Heritage of Humanity’ அடிப்படையில் வழங்கியுள்ளது. ஸ்வீடிஸ் கலந்த எஸ்டோநியன் மொழிதான் இவர்கள் பேசும் மொழி. இங்கிருந்து பார்னு நகருக்கு ஸ்டீமரில்தான் செல்ல வேண்டும். 15 நிமிடங்களில் சென்று விடலாம். குளிர்காலத்தில் இந்த கடல் பகுதி உறைந்து விடும். அப்போது இதே பார்னுவுக்கு கடலின் மீதே காரில் போகலாம்.

மிதக்கும் மார்க்கெட்

தாய்லாந்து  நாட்டின் பேங்காக்கிலிருந்து 100 கி.மீட்டரில் தென்மேற்கில் டாம்னோயன்  சாத்யுவாக் மிதக்கும் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை காண  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர். 1866-68ம்  ஆண்டுகளில் தாய்லாந்தை ஆண்ட மன்னர் ராமா-4, மாயிக்லாங் மற்றும் சின் நதிகளை இணைத்து டாம்னோயன் சாத்யுவாக் கால்வாயை வெட்டினார். இதன் தொடர்ச்சியாக வழி  நெடுக அக்கம்பக்க கிராமத்தினர் ஏராளமான சிறு கால்வாய்களை வெட்டி அதனுடன்  இணைத்தனர்.

இந்த டாம்னோயன் சாத்யுவாக் கால்வாயில் துவங்கியதுதான்  மிதக்கும் மார்க்கெட். புத்தர் கோயில் அருகில் உள்ளது. இந்த மிதக்கும்  மார்க்கெட்டில் ஏராளமான காய்கறிகள், பழங்கள், மற்ற பொருட்கள் விற்பனைக்கு  தயாராக உள்ளன. இது தவிர கால்வாய் கரையை ஒட்டி இருபுறமும் ஏராளமான கடைகள்  உள்ளன. இவற்றில் காய்கறி, பழங்கள் நீங்கலாக நினைவுப்பொருட்கள், பரிசுப்  பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிமணிகள் என பல விற்பனையாகின்றன.

இந்த மார்க்கெட்டை லாட் பி மார்க்கெட் (Lad Plee Market) என அழைக்கின்றனர். இந்த மார்க்கெட் 1967 ஆம் ஆண்டு வரை மிகச் சிறப்பாக நடந்தது. அதன் பின்  மந்தமாகி விட்டது. ஆனால் தாய்லாந்து சுற்றுலா கழகம் விழித்துக் கொண்டது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து காட்டலாமே என  மார்க்கெட் தொடர நடவடிக்கை எடுத்தது. விவசாய நிலங்கள், பண்ணைகளிலிருந்து பொருட்கள் வந்தது போக, வியாபாரிகளையும் இதில் ஈடுபட ஆரம்பித்தது. பலன் இங்கு கிடைக்காத பொருளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கரையோர கடைகளும் மேலும்  களைகட்ட ஆரம்பித்தன.

இந்த மார்க்கெட்டை பொருத்தவரை பிசி நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரைதான். அதுவும் காலை 7 மணி முதல் 9 மணி வரை படு பிசி!  200க்கும் அதிகமான படகுகளில், தலையில் ஓலை தொப்பி அணிந்து வியாபாரிகள்  விற்பனை செய்வதே தனி அழகு. விலை குறைத்துக் கேட்டு வாங்கலாம். சுற்றுலா  பயணிகளை ஏற்றி வந்து, மொத்த மார்க்கெட் தூரத்தையும் காட்ட வாடகை படகுகள் ரெடி. பேங்காக்கிலிருந்து இதனை பார்க்கவென்றே ஏராளமான சுற்றுலா பேருந்துகள் குவிகின்றன. வருபவர்களும் நினைவுக்காக கண்டிப்பாக ஏதாவது வாங்குகிறார்கள்.

அடுத்து  டாம்கெம் கால்வாய் என ஒன்று வெட்டப்பட்டு, அதிலும் தற்போது மிதக்கும் மார்க்கெட் இயங்குகிறது. இந்த பகுதியில் மூன்று மிதக்கும் மார்க்கெட்டுகள் தனித்தனியாக உள்ளன. அவற்றில் டாம்கெம் பெரியது. இங்கு மிதக்கும் மார்க்கெட்டில் தனித்தனியாக பொருட்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும் டாம்னோயன் சாத்யுவாக் மார்க்கெட் அளவுக்கு வெளிநாட்டினரை இது கவரவில்லை. பிம்னோயன் சாத்யுவாக் மிதக்கும் மார்க்கெட் இரண்டு ஆங்கிலப் படங்களில் இடம் பெற்றுள்ளது.

முதல் படம் ‘The man with the golden run’. இது ஜேம்ஸ்பாண்ட் படம். இதில் ரோஜர் மூர் நடித்தார். அடுத்த படம் ‘‘Bankok Dangerous’’ இதில் ஒரு படக் காட்சியே இந்த இடத்தில் எடுக்கப்பட்டது. தமிழில் ‘ உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர் சொன்சாய் என்பவரைத் தேடி  இங்கு வருவார். மிதக்கும் மார்க்கெட்டில் படகில் வியாபாரம் செய்யும் பெண்,  சொன்சாயின் மகள் என அறிந்து மகிழ்வார்.

- ராஜிராதா, பெங்களூரு.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)