கிராமத்துப் பெண்களுக்கு நாங்களே அகல் விளக்கு...



- யாழ் ஸ்ரீதேவி

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழக அளவில் கிராமங்கள் தோறும் தாய், சேய் நலம் காப்பதே இவர்களின் பெரும்பணி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் இப்பணியினை தொடர்கின்றனர். முழுவதும் பெண்களே பணியாற்றுவதாலேயே அடிமைகள் போல நடத்தப்படுகிறோம் என்று கொந்தளிக்கிறார் தமிழ்நாடு கிராம சுகாதார  செவிலியர் சங்கத்தின் தலைவி நிர்மலா.

கிராம சுகாதார செவிலியர் மேம்பாட்டுக்காக போராடி வரும் நிர்மலா பதவி உயர்வைப் புறக்கணித்துள்ளார். திருமணத்தைத் தவிர்த்து விட்டு தனி மனுஷியாக களம் கண்டு வருகிறார். உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள விருவீடு கிராமத்தை சேர்ந்த நிர்மலா கிராம சுகாதார செவிலியரின் பணிகளை எளிதாக்க அரசிடம் இருந்து லேப்டாப் வசதி பெற்றுத் தந்துள்ளார். அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை 2000ம் ஆண்டில் ஹீரோஸ் ஆஃப் தி பிளானட் என்ற தலைப்பில் 8 பேரை தேர்வு செய்து கவுரவித்தது. மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிக்காக நிர்மலாவும் டைம்ஸ் பத்திரிகையால் 8 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

தனது வாழ்நாளையே கிராம சுகாதார செவிலியருக்கான மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட நிர்மலா உங்களோடு மனம் திறக்கிறார். “அரசு தாய்-சேய் நலத்திட்டம் வழியாகக் கொடுக்கிற அத்தனை சேவைகளையும்  கடைக்கோடிப் பெண்கள் வரைக்கும் கொண்டு போகுறது எங்களோட வேலை. தமிழ்நாட்ல மலைப்பகுதிகளிலும் பஸ் வசதியே இல்லாத ஊர்களிலும் ஆயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள் வேலை பார்க்கிறோம். காலம் நேரம் இல்லாம வேலை பார்க்கணும். யாரோ செய்யும் தவறுகளுக்கும் தண்டனை அனுபவிக்கிற கொடுமையை சந்திக்கிறோம்.

பெண்கள் மட்டுமே வேலை பார்க்கிறோம்றதுக்காக எல்லா விஷயத்திலும் ஒதுக்கப்படுகிறோம். மத்திய அரசு எங்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் கூட பல வருஷங்களா கிடப்புல போட்டிருக்கு. சின்னச் சின்ன உரிமைகளுக்கும் கூட போராட வேண்டியிருக்கு. சங்கப் பொறுப்புல இருக்கோம்றதுக்காக பழிவாங்கும் நடவடிக்கை களுக்கும் ஆளாகறோம். பெண் என்பதற்காக ஒடுக்கப்படுறத ஏத்துக்க முடியாது” எனும் நிர்மலாவின் வார்த்தைகளில்
அத்தனை கோபம்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்க சம்பளம் வாங்குறதுக்காக மட்டும் இந்த வேலை பார்க்கலை. பல நேரங்கள்ல இதை ஒரு வேலையாகக்கூட நினைச்சதில்ல. கிராமத்துல வீடு வீடா எல்லோரையும் தெரிஞ்சி வச்சிருக்கோம். அவங்க வீட்டுல ஒருத்தராத்தான் எப்போதும் யோசிப்போம். உடம்புக்கு ஏதாச்சும்னா எங்களைத் தேடி வர்றாங்க. கிராமத்து மக்களுக்கு டாக்டருக்கு இணையான சேவை செய்றோம். இவ்வளவு வேலைகள் செய்தாலும் எங்களோட உழைப்புக்கு ஏத்த ஊதியம் கொடுக்கப்படுறதில்ல.

போக்குவரத்தே இல்லாத கிராமங்களுக்குப் போறதே பெரிய சிரமம். எத்தனையோ சவால்களுக்கு இடையில  பெண்களுக்கும், குழந்தைங்களுக்கும் செய்யுற உதவின்னு திருப்திப்படுறோம். ஒரு பெண் கர்ப்பம் அடைஞ்சதில் இருந்து பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடற வரைக்கும் இன்னொரு தாயா அவங்களை கவனிக்கிறோம். ரத்தசோகை பாதிப்புல இருந்து பெண்களை மீட்குற வேலையும் செய்யுறோம்.

இப்படி வேலை பார்க்குற எங்களுக்கு 30 வருஷத்துக்கு அப்புறம் தான் பதவி உயர்வுன்றது வழக்கமா இருந்தது. 5 வருஷத்துக்கு ஒரு தடவை பதவி உயர்வு தரணும்னு அரசாணைல இருக்கு. ஆனா வழக்கத்துல இல்லாம இருந்தது. பெண்கள் மட்டும் வேலை பார்க்கறோம்ன்றதால கண்டுக்காம இருந்தாங்க. எல்லா உரிமைகளையுமே நீதிமன்றம் மூலமா போராடித்தான் வாங்கினோம்.

கிராமங்கள்ல துணை சுகாதார நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமா கட்டப்பட்டிருக்கு. அதுல தங்கி வேலை பார்க்குற செவிலியர்கள் பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்காங்க. துணை சுகாதார நிலைய ஆயாக்களுக்கு சம்பளம், வாடகைன்னு அரசு ஒதுக்குற தொகை போதாம சம்பளத்தில் இருந்து செலவழிக்க வேண்டிய சிரமமும் எங்களுக்கு இருக்கு. தாய் சேய் நலப்பணிய முழுசாப் பண்ணணும்னு நினைக்கிறேன். தகவல் சேகரிக்கிற பணிகளைக் கூடுதலா எங்க தலைல திணிக்கிறதால அதையும் எளிதாக்க லேப்டாப் வசதியைப் போராடி வாங்கினோம்.

என்னோட சிறு வயசுல இருந்தே சமூகத்துக்கு உதவணுன்ற எண்ணம் இருந்தது. கிராம சுகாதார செவிலியர் வேலைல சேர்ந்ததுக்கு அப்புறம் இதுல இருக்குற பெண்கள் படுற வேதனை அவங்களுக்காகப் போராடுற தீவிரத்த எனக்குள்ள உருவாக்குச்சு. அந்தச் சேவைல  எந்தத் தடையும் வரக்கூடாதுன்றதுக்காக எனக்கென்று  தனிப்பட்ட வாழ்க்கைய அமைச்சுக்கல. இந்தத் துறையில வேலை பார்க்கிற பெண்கள் சுரண்டப்பட்டா... தாய் சேய் நலத்துல பயனடையுற பெண்களும் குழந்தைங்களும் சேர்ந்து பாதிக்கப்படுவாங்க.

தாய், சேய்... அவங்களுக்காக உழைக்கிற செவிலித்தாய்களான நாங்கதான் அவங்களுக்கு அகல்விளக்கு. போதுமான சம்பளம், பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வுன்னு பெண்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க ேவண்டும்” என்கிறார் நிர்மலா. கிராமங்கள் தோறும் தாய்-சேய் இறப்பைக் குறைத்து, அவர்கள் நலம்
காக்கும் இந்த செவிலித்தாய்களுக்கான அங்கீகாரம் அளிக்க வேண்டியது முக்கியமான தேவையும் கூட!

படம்: அருள்ராஜ்