இனி எல்லாம் சுகமே...



‘மா’-குறும்படம்

மணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில், ‘லட்சுமி’ குறும்படம் கௌதம் வாசுதேவ மேனனின், ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் சேனலில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் விவாதத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இக்குறும்படத்தில் துணை நடிகை லட்சுமி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை முறையை பேசிய இப்படத்தை பலரும் விவாதப் பொருளாக்கினர். எதிர்மறை விமர்சனக் கணைகளை எய்தபோதும், படத்தைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சங்களைத் தாண்டியது. இந்நிலையில்  இந்நிறுவனத் தயாரிப்பில் லட்சுமி குறும்பட இயக்குநர், கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் அவரது அடுத்த குறும்படமான ‘மா’ வெளியாகி சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

‘மா’ படத்தின் தீசரை இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டார். திரைக்கதையினை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார். பள்ளியில் படித்துக்கொண்டே, ஹாக்கி டோர்னமென்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக அறிமுகமாகும், பள்ளிப் பருவத்து ஆணும்-பெண்ணும் விளைவை உணராது, ஈடுபடும் உடல் உறவால், பெண் கருவுறுகிறாள். தான் கருவுற்றிருப்பதை அப்பெண் உணர்ந்தபின், அப்பெண்ணும் அவளின் தாயும் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதை. கயிற்றின்மேல் நடப்பது போன்ற கதை. பல இடங்களில் படம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

தாய்-மகள் உறவின் அழுத்தத்தை இதில் இயக்குநர் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். பதினைந்து வயதே நிரம்பிய பள்ளிப் பருவத்து மகள், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் முதலில் வெறுத்து ஒதுக்கும் தாய் பின்னர் அவளை அரவணைப்பதும், மகளின் நிலையைக் கணவரிடம் சொல்ல நினைத்து, முடியாமல் தவிப்பதும், இறுதியில் மகளை மீண்டும் நிமிர்ந்தெழ உத்வேகம் தருவதும் என உணர்வுகளை தன் திறமையான நடிப்பால் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை கனி கஸ்தூரி. சின்னச் சின்ன முகபாவங்களின் வெளிப்பாடுகளில் உடல் மொழியில் அற்புதமாய் மின்னுகிறார்.

ஒரு தாயின் பரிதவிப்பை, கோபத்தை, பரிவை அவர் வெளிப்படுத்தும் இடங்கள் அழகு. எப்போதும் ஏக்கமும், துயரமும், ஏமாற்றமும், தயக்கமும், பயமுமாக படம் முழுவதும் வளையவரும் அனிகா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தாய்க்கும் மகளுக்குமான பாசப்போராட்டம், கோபம், அழுகை என அத்தனையையும் இருவரும் கனகச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் எந்த மகளும் இந்த ஊரில் ‘சின்ன வயசிலே தம்பிப்பாப்பா வேணும்னு கேட்டிருக்கேன்லமா.... இந்தப் பாப்பாவை நாம் வச்சிக்கலாம். ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்” என்று சொல்வாளா என்பது சந்தேகமே.

ஒரு பெண் குழந்தை எப்போது தன்னை முழுமையான பெண்ணாக உணர்கிறது என்பது ஒவ்வொரு தனிப்பட்ட குழந்தைக்கும் மாறுபடும். அது வளரும் சூழல், அறிந்துகொள்ளும் விஷயங்கள் அனைத்தோடும் தொடர்புடையது. பத்தாவது படிக்கும் மாணவி உடன் ஹாக்கி விளையாடும் பையனுடன் உடலுறவு கொள்கிறாள். அதன் காரணமாக கர்ப்பமாகிறாள். இதை அவளுடைய தாய் எப்படி எடுத்துக்கொள்கிறாள், என்ன செய்கிறாள் என்பதுதான் கதை. ஆரம்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழுது கோபப்பட்டு மகளை சாகச் சொல்லும் தாய் பின் உணர்ந்துகொண்டு அவளுக்கு உதவுகிறாள். இந்தக் காட்சிகள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே இடையில் ஒரு காட்சி வருகிறது.

நூலகத்தில் துப்புரவுப் பணிக்கு கைக்குழந்தையுடன் வரும் சிறுபெண்ணைக் காண்பிப்பதன் மூலம் இயக்குநர் சொல்ல வருவது என்ன? அடித்தட்டு மக்களிடையே சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுவது சாதாரணமாக நடப்பதுதான் என்கிறாரா? அல்லது அப்பெண்ணும் கதாநாயகி போலவே கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொண்டாள் என்று சொல்ல வருகிறாரா? அதை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டுவிடுவதில் ஒரு தந்திரம் இருக்கிறது.

எதிர்பாலினத்தவர் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி, வெறுத்து விலகாமல் காட்சிகளை நகர்த்தி இருப்பதும், விடலைப் பருவ வயதினரின் அறியா செயலை, ஒரு தாய் எப்படி சமாளித்து, பிரச்சனையில் இருந்து வெளிவருகிறார் என்பதையும், தன் மகளை சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதையும், படத்தில் கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதில் பங்கேற்றவர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதையை நகர்த்தி இருக்கும்விதம் எல்லாமும் முற்றிலும் புதிய கோணத்திலே நகர்கிறது.

இயக்குநர் பாலச்சந்தர் போன்றோரின் படைப்புக்கள், அதைக் கடக்க அவர்கள் அமைத்த பாதை, வசனம் மற்றும் காட்சிகள் வழியாக அனைவரையும் கவனம்பெறச் செய்தன. பல படங்களில் ஆண்கள் பெண்களை தங்கள் காம வலைக்குள் விழ வைப்பதாகவே பாலியல் உறவுகள் காட்சிப்படுத்தப்படும். அதன் விளைவை பெண் எதிர்கொள்ளும் விதமும் மிகவும் இழிவானதாக, துயரம் நிறைந்ததாக இறுதிவரைத் தொடரும். ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. தன் மகளைப் பெண்ணின் தாய் அணுகும்விதம் மிகவும் கவனமாக நகர்கிறது. கணவனுக்குத் தெரியாமல் மகளை அரவணைத்து, பிரச்னையை பெண் கடந்து செல்லும் விதம் ரொம்பவே புதுசு.

தனது மகளை விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க மீண்டும் அழைத்துவந்து விடுத்து, இயல்பாய் கடக்க வழிகாட்டும் விதமும் புதிய அணுகுமுறைதான்பெண் குழந்தையின் விருப்பத்துடனே நிகழ்ந்தது என்றாலும், பெண்ணிற்கு நிகழும் பிரச்னைகள், இழப்பு ஆணுக்கில்லை என்பதைப்போல காட்சிப்படுத்தியிருப்பதும், பாலியல் கல்விக்கான தேவையையும் உணர்த்தாமல் படத்தை முடித்திருப்பதும் குறையாகத் தெரிந்தாலும், நடிப்பினை வாங்கி காட்சிகளை நகர்த்திய விதத்தில் குறும்பட இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். எழுபதுகளில் எழுதப்பட்ட  ஜெயகாந்தனின்  ‘அக்னி சாட்சி’ சிறுகதை எத்தனை புரட்சிகரமானது என்பதை இப்போது உணர்த்த வந்திருக்கும் படம் ‘மா’. இத்தனை ஆண்டுகள் ஆகியும் நம்மவர்களால் அச்சிறுகதையை தாண்ட முடியவில்லை என்பது எத்தனை உண்மை!

- தோழி டீம்

மலையாளத் திரையுலகில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனி கஸ்தூரி. தமிழில் ‘பிசாசு’ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்திலும் ஏற்கனவே நடித்துள்ளார். பள்ளிப் பருவத்தில் கர்ப்பம் தரிக்கும், பள்ளி வயதுப் பெண்ணை பொறுப்பாக கையாளும் தாயாக, நடிப்பை உணர்ந்து, வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். கூத்துப்பட்டறையில் முறையாக நடிப்புப் பயிற்சி பெற்ற கனி கஸ்தூரி, மேடை நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.