கேள்விக்குறியாகும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு



டெல்லியில் நடைபெற்ற நிர்பயா மீதான வன்புணர்வு வழக்கு இந்தியாவையே உலுக்கிய விஷயம். அதன் பின்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  எனினும் மீண்டும் மீண்டும் இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. அதிலும் வட மேற்கு டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொடூரம் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையை தகர்த்தெறிந்திருக்கிறது.

வீ ட்டு வேலை செய்யும் ஒரு பெண் தன் கணவரும் வேலைக்குச் சென்றுவிட, வேலைக்குச் சென்று வர வேண்டிய அந்த சில மணி நேரத்திற்கு தன் எட்டு மாத பெண் குழந்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லி அதே குடியிருப்பில் இருந்த தன் உறவினரான பெண் ஒருவரிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். அந்த உறவுப் பெண்ணின் மகன் குழந்தையுடன் விளையாடுவது போல் நடித்து தன் தாய் அங்கு இல்லாத நேரம் பார்த்து அந்தப் பெண் குழந்தையை வன்புணர்வு செய்திருக்கிறார். அந்த இழிச்செயலில் ஈடுபட்ட அந்த மனிதனின் வயது 28. அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் வேறு இருக்கிறான்.

வீட்டு வேலை முடிந்து வந்த பெண் தன் குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு மூன்று மணி நேரம் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. விசாரணைக்குப் பின் அந்த ஆண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை குறைக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் தேசிய பயிலரங்கு டெல்லியில் நடைபெற்றிருக்கிறது.

அதில் கடந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு குழந்தைகள் பாலியல் வன்முறை தொடர்பாக 190 புகார்கள் வரப்பெற்றதாகவும் 107 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நம்பிக்கைக்குரிய நபர்களே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது என்றும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்கும் நடவடிக்கையில் உணர்ச்சி சார் நுண்ணறிவு எப்படி பங்களிக்கிறது என்பது பற்றியும் பல்வேறு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்காக இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.

பாலியல் வன்முறைகள் நடைபெறும் போது உடனடியாக புகார் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் குறித்தும் பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது. எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அடுத்தடுத்து இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று வந்த செய்தி ஒன்று நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை வன்புணர்வு செய்திருக்கிறான் 14 வயதான சிறுவன்.

இது ஒரு பக்கம் என்றால் வாய்விட்டுக் கூட சொல்லி அழ முடியாத பச்சிளம் குழந்தைக்கு இத்தகைய நிகழ்வு ஏற்படும் போது என்ன செய்ய முடியும்?  இத்தகைய மனிதாபிமானமற்ற செயல் ஏன் நடக்கிறது? இப்படிப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்களை எப்படி கையாள்வது? இது குறித்து நிபுணர்கள் இங்கே அலசுகிறார்கள்.

ஓவியா (சமூக ஆர்வலர்)
‘‘இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. இதை கற்பனையில் கூட புரிந்து கொள்ள முடியாது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம் மனது கொதிக்கிறது. இது ஒரு மனிதத்தன்மையற்ற செயல். இப்படிப்பட்ட வன்முறை ஏன் தூண்டப்படுகிறது? குடி என்பதெல்லாம் ஒரு சாக்கு தான். குடி மட்டுமே இதற்கு காரணமாகிவிடாது. குடி என்பது இதனை திசை திருப்பும் வாதமாக இருக்கும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மனிதருக்கு உளவியல்ரீதியான பிரச்னைகள் இருந்திருக்கும்.

திருமணம் ஆகாதவர் என்றாலும் பாலியல் தேவைக்காக அப்படி நடந்து கொண்டாரோ எனலாம். திருமணமாகாதவர் என்றாலும் கூட பச்சிளம் குழந்தையிடம் எப்படி இப்படி நடந்து கொள்ள முடியும்?  அதிலும் அந்த ஆண் திருமணம் ஆனவர் என்பதால் பாலியல்ரீதியான தேவைகளுக்கு அவருக்கு வழி இருக்கிறது. அவர் இப்படி நடந்து கொள்ள உளவியல் பிரச்னை அன்றி வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்? வேறு யார் மூலமாகவும் ஏதாவது அக்குழந்தைக்கு பிரச்னை ஏற்பட்டாலும் ‘அய்யோ இது நம் குழந்தை, நம் குழந்தைக்கு இப்படி நடக்கிறதே’ என நினைத்து கவலைப்பட்டு அதனை தடுக்கக்கூடிய இடத்தில் இருக்கும் உறவினரே இப்படி நடந்து கொள்கிறார் என்றால் அவருக்கு தீவிரமான உளவியல் பிரச்னை இருந்திருக்கும் என்பது தான் உண்மையாக இருக்கும். அவரது வளர்ப்பு முறையில், வாழ்க்கை முறையில் பிரச்னை இருந்திருக்கும்.

இதற்கு முன்பே வேறு வேறு வகையில் இவரது இயல்பு வெளிப்பட்டிருக்கும். இவரது செயல்பாடுகளில் இவரது இந்த குணம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இதனை அவரது மனைவி உணர்ந்திருக்கவும் வாய்ப்புண்டு. திடீரென்று ஒரு மனிதன் இத்தனை கொடுமையானவனாக மாற முடியாது. அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் கஷ்டம் இருந்திருக்கும். அதை அவர்கள் வெளிக்காட்டாமல் இருந்திருக்கலாம். இப்படி குடும்பப் பெருமை என்ற காரணங்களுக்காக கணவன், மகன், அண்ணன் என தன் குடும்பத்து தவறான மனிதர்களை பெண்கள் காப்பாற்றி தவறு செய்கிறார்கள்.

இத்தகைய மனிதர்களை வெளிப்படுத்தாமல், காட்டிக்கொடுக்காமல் விட்டு வைப்பது இப்படித்தான் தீவிர பிரச்னையில் கொண்டுவிட்டுவிடும். இப்படி அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. இப்படி அவர்களை வெளிப்படுத்தாமல் வைக்கும்போது அவர்கள் உச்சகட்டமாக இத்தகைய வெறித்தனமான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். இப்படி காப்பாற்றும் இந்த மனநிலை கண்டிக்கத்தக்கது.

இப்படி நடக்காத வரை காட்டப்படுகிற அவரது பிம்பம் பொய்யானது தானே? நான் அவரது மனைவியை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்து இதனை சொல்லவில்லை. அவருக்கும் இப்படிப்பட்ட மனிதரால் மிகுந்த கஷ்டம் இருந்திருக்கும். குடும்பம் என்ற போர்வையில் இப்படிப்பட்டவர்களை சகித்துக்கொள்வதால் என்ன தீமைகள் ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று தான் சொல்கிறேன். இந்த மாதிரி மனிதர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என அவர்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.’’

வந்தனா (மனநல ஆலோசகர்)
‘‘இந்தப் பிரச்னையை உளவியல்ரீதியாக தான் பார்க்கவேண்டும். இந்த மாதிரி செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் மனநிலை சரியில்லாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள். குழந்தைக்கு உடல்ரீதியான சிகிச்சைகள் தேவைப்படும். அந்த குழந்தையின் பெற்றோருக்கும் மனரீதியான ஆலோசனைகள் கட்டாயம் தேவை. குழந்தைக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். குழந்தை கருவில் இருக்கும் போதே ஐம்புலன்களுக்கும் தேவையான நல்ல விஷயங்களை அதற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நாம் அறிந்த விஷயம்.

பாதிக்கப்பட்ட எட்டு மாதக் குழந்தைக்கும் முறையான சூழலை உண்டாக்கி அதன் மனநிலையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் குழந்தைக்கு எமோஷனல் டெவலப்மென்ட் இருக்காது. நம் ஆதங்கம் எல்லாம் அந்தக் குழந்தை மீதுதான் இருக்கும். இப்படி ஆகிவிட்டதே என்று நினைப்போம். ஆனால் அந்த மனிதருக்கும் இந்த சமயத்தில் மனோரீதியான கவனிப்பு தேவை. பொதுவாக தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுபவர்கள், நெருப்புக் காயங்களுக்கு ஆளாகிறவர்கள் என எல்லோருக்கும் உடலளவில் மட்டும்தான் நாம் சிகிச்சை அளிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு மனதளவிலும் சிகிச்சை தேவை. அது போல இங்கே இந்த குற்றத்தைச் செய்தவருக்கும் கட்டாயம் மனதளவில் சிகிச்சை தேவை.

இவர் ஏன் இப்படிச் செய்கிறார்? இது முதல் தடவை செய்யும் குற்றமாக கண்டிப்பாக இருக்காது. இது ஓர் ஆளுமைக் கோளாறு (Personality disorder). இதனை உடனடியாக சரிப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஹாசினி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தஷ்வந்துக்கு தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் மனதளவில் அவருக்குச் சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால் பெயிலில் வெளிவந்ததும் என்னாயிற்று? பணத்திற்காக அவர் தன் தாயையே கொன்று விட்டார்.

இது போல குழந்தைகளிடம் வன்புணர்வில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு மனநல சிகிச்சையும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். அதுவும் சிலருக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படும். இல்லையென்றால் தண்டனைக்குப் பின் இவர்கள் வெளிவந்தால் வேறு வேறு நபர்களிடம் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடலாம். அதனால் அதனை முதலிலே தடுக்க இவர்கள் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுவதும் அவசியம்.’’

அஜிதா (வழக்கறிஞர்)
‘‘பெண் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து தடுப்பதற்கான சட்டம் (POSCO ACT) இருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளும் கடுமையாக இருக்கிறது. இந்த சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிக்க முடியாது. மகளிர் நீதிமன்றங்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்கலாம் என்பதனால் மற்ற வழக்குகளை விட இந்த வழக்குகள் விரைவாகவே நடத்தப்படுகின்றன. சட்டம் கடுமையாக இருக்கிறது என்பதிலும் நீதிமன்றங்கள் முறையாக செயல்படுகின்றன என்பதிலும் சந்தேகமில்லை. தண்டனை அளிக்கப்படும் விகிதமும் 90 முதல்
95 சதவிகிதம் இருக்கிறது. அதனால் சட்டத்தை குறை சொல்ல முடியாது.

இந்த மனிதருக்கு கடுமையான மனச்சிக்கல் இருந்திருக்கும். இது மாதிரி தப்பு செய்கிறவர்களுக்கு தண்டனை கொடுங்கள் என்று நாம் போராடுவோம். தண்டனையும் கிடைக்கும். ஆனால் புதிதாக இப்படி சில குற்றவாளிகள் மறுபடி உருவாவார்களே அதை தடுக்க என்ன செய்வது? எந்த ஒரு எண்ணமும் மனதளவில் இருக்கும் போது யாருக்கும் பிரச்னையில்லை. வெளியில் தெரியும் போதும், அது செயலில் வெளிப்படும் போதும் தான் அவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள். எனவே அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றும் போதே அதை அழித்துவிடுவதுதான் நல்லது.

அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெர்மனியில் இப்படிப்பட்ட தவறான எண்ணம் தோன்றும் இளம் வயதினர் அதனை சரி செய்து கொள்ள மருத்துவ மனைகளில் அதற்கென ஓர் அமைப்பை ஏற்படுத்தி கவுன்சிலிங் வழங்குகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும்பொழுது அதுவும் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு சிகிச்சை பெறுபவர்களை பற்றிய தகவல் வெளியாவதில்லை.

இது குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார். அது போல நம்நாட்டிலும் இளம் வயதினருக்கு ஏற்படும் மனச்சிக்கல்களை தீர்ப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் ஏழைக் குடும்பங்களை சார்ந்த பெண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றன என்பது என் எண்ணம். பாதுகாப்பின்மை அதற்கு ஒரு முக்கியக் காரணம். இப்போது பாதிக்கப்பட்ட இந்த குழந்தையும் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் குழந்தைதான். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளிகள்.

வீட்டு வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளை பாதுகாக்க சரியான இடமில்லை. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை பாதுகாக்க அங்கன்வாடி போன்ற அமைப்புகள் இருந்தாலும் கூலி வேலைக்குச் செல்பவர்களின் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்புகள் இல்லை. ஆனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறவர்கள் தினமும் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? அது மாதிரியானவர்களின் குழந்தைகளை பாதுகாக்க அதற்கேற்ற அமைப்புகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.’’

- ஸ்ரீதேவி மோகன்