ஒரு தாயின் காத்திருப்பு



அந்த இளைஞனுக்கு 19 வயது அப்போது. சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அவன் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். சில நாட்களுக்குப் பின் அவரை சிபிஐ கைது செய்தது. காரணம், ராஜீவ்காந்தியைக்  கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்தான் என்பதே. இன்று அந்த இளைஞனுக்கு 46 வயதாகிறது. தன் இளமைக் காலம்  முழுவதையும் சிறையில் தின்னக் கொடுத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்.

மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு சட்டப் போராட்டங்களும் நடத்திய பிறகு மரண  தண்டனையின் பிடியிலிருந்து வெளியே வந்தார். இப்போது தான் விடுதலையாகி விடுவோம் என்கிற கனவோடு சிறையில் நாட்களைக் கழித்து வரும்  பேரறிவாளனை சிறையில் தள்ளிய அவருடைய வாக்குமூலத்தை அன்றைக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்  மனசாட்சி உறுத்தி, ஒரு விஷயத்தை வெளியே சொன்னார்.

‘நான் பேட்டரி வாங்கித் தந்தது உண்மைதான். ஆனால் அந்த பேட்டரி அதற்குத்தான் பயன்படுத்தப்படப் போகிறதென எனக்குத் தெரியாது’ என அறிவு  சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியான ‘நான் பேட்டரி வாங்கித் தந்தது உண்மைதான்’ என்பதை மட்டும் பதிவு செய்துவிட்டு அது எதற்கு  பயன்படுத்தப்படப்போகிறதென தெரியாது என்று சொன்ன பகுதியை அவர் பதிவு செய்யா மல் விட்டுவிட்டார். அதனால்தான் அறிவுக்கு தண்டனை  கிடைத்தது. “நான் செய்த தவறால் இத்தனை ஆண்டுகளாக அறிவு தன் வாழ்வை இழந்து நிற்பது எனக்கு குற்ற உணர்வை உண்டாக்குவதால் அதை  இப்போது வெளியே சொல்கிறேன்” என்று அறிவித்தார்.

பின் நீதிபதி தாமஸ் தவறாக தீர்ப்பு வழங்கியதாகவும் ஒப்புக்கொண்டார். ஆயினும் பேரறிவாளன் இன்னமும் சிறையில்தான் இருக்கிறார். தூக்குக்  கொட்டடியிலிருந்து பேரறிவாளனை மீட்பதற்காக ஒரு ஜீவன் 27 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அது அவருடைய தாய் அற்புதம் அம்மாள். ஒரு  ஜோல்னா பையுடன் 1991 ஆம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியே வந்து மகனுக்காகத் தெருவில் இறங்கிப் போராட வந்தவர் இன்னமும் வீடு  திரும்பியபாடில்லை. வீதிகள் அவரை அழைத்தவண்ணம் உள்ளன.

போராட்டங்களும், சந்திப்புகளும், கோப்புகளும் வழக்குகளும் அவருடைய வாழ்வாகிப்போயின. மகன் சிறையில் வாட, தாயோ அதற்கு நேர்மாறாக  வீதிகளில் அலைந்தார் மகனுடைய விடுதலைக்காக. வீடு தங்கும் நாட்கள் குறைந்து போயின. மரண தண்டனையிலிருந்து மகனை மீட்ட அன்றுதான்  அவர் முகத்தில் புன்னகையைப் பார்க்க முடிந்தது. நிரபராதியான தன் மகன் எப்படியும் விடுதலையாவார் என்கிற தளராத நம்பிக்கையுடன் இருக்கும்  அற்புதம் அம்மாள் அண்மையில் ஊடகங்களுக்கு எழுதிய கடிதமொன்று வாசிப்போர் கண்களை குளமாக்கியது.

வயதான தன்னுடன் தன் கணவருடன் இனியாவது தங்கள் மகன் வந்து இருக்கவேண்டுமென்கிற அவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி  கண்ணீருடன் எழுதிய கடிதம் பலரது மனங்களை ஆட்கொண்டது.  இந்த ஜூன் 11ஆம் தேதியோடு சரியாய் பேரறிவாளனை அழைத்துச் சென்று 27  ஆண்டுகள் ஆகின்றன என்பதைத் தெரிவித்த அவர், போராட்டங்களே வாழ்க்கையாகிப் போன தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தாம்  உணர்ந்திருந்தாலும் ‘உங்களை விட்டால் நான் யாரிடம் கேட்பேன். என் மகனின் விடுதலைக்கு உதவுங்கள்’ என்று கேட்டிருந்தார்.

ஒரு போராளியாய் இடைவிடாது களத்தில் நின்று மகனைக் காத்த தாய் அவர்.  பல பெண்களுக்கு முன்மாதிரியும் அவர்தான். எது நடந்தாலும்  துவண்டு விடாமல் இந்த நாட்டின் சட்டங்களை எதிர்கொண்டு, பெரும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து, இன்னமும் முதுமையிலும் மகனின்  விடுதலைக்கான காரியங்களை செய்கிறார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். “என் மகனின் விடுதலை மட்டுமே என் ஒரே குறிக்கோள்.  இத்தனை நாட்கள் மாநில அரசைக் கேட்டுக்கொண்டிருந்தோம். இப்போது மத்திய அரசைக் கேட்கிறோம். தயவு செய்து என் மகனை விடுதலை  செய்யுங்கள்.

எந்தத் தவறும் செய்யாமல் இத்தனை ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டான். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அங்கமான ராகுல் காந்தியே மன்னிப்பதாக  சொன்னபின்னும் கூட இந்த அரசு அறிவை விடுவிக்கவில்லை” என்கிறார். பரோலில் ஒரு மாதகாலம் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்ட  பேரறிவாளன் வீட்டைத் தவிர எங்கும் செல்லவில்லை. ஒரு குழந்தையின் கையில் ஒரு உணவுபண்டத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும்  பறித்துக்கொண்டால் அக்குழந்தை என்ன மனநிலையில் இருக்குமோ அந்த மனநிலையில்தான் அற்புதம் அம்மாள் இருக்கிறார்.

புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கும் அதே மனநிலைதான். ஒரு தவறும் செய்யாத ஒரு மனிதனை இத்தனை ஆண்டுகள் சிறையில்  வைத்திருந்ததே தவறு எனும்போது, அத்தண்டனை இன்னமும் நீள்வதைத் தன்னால் தாங்க இயலவில்லை என துயரத்தோடு கூறுகிறார் அற்புதம்  அம்மாள். தன் மகன் விடுதலை பெற்று சிறைவாசம் துறந்து வரும் நாளை எதிர்நோக்கி கண்ணில் கண்ணீரும் நம்பிக்கையொளியும் ஒருசேர மின்ன,  காத்திருக்கிறார் இந்தத் தாய்.

கவின் மலர்