திருடர்கள் ஜாக்கிரதை



வாசகர் பகுதி

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் இது. நானும் என் கணவரும் திருநின்றவூரில் இருக்கும் என் நாத்தனார் வீட்டிற்கு ஒரு வாரம் தங்கப்  போயிருந்தோம். அப்பொழுது திருநின்றவூரில் என் நாத்தனார் புதிதாக வீடு கட்டிக் கொண்டு இருந்தார்.  அந்த ஊர் அவ்வளவு வளர்ச்சி  அடையவில்லை. அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் வீடுகள் இருக்கும். வீட்டிலிருந்து சற்று தள்ளித்தான் மெயின் ரோடு இருக்கும். அந்த  ரோட்டில் நேரே கிழக்குப்பக்கமாக போனால் கோயில், கடைகள், போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டான்ட் ஆகியவை இருக்கும்.

மேற்குப்பக்கமாக போனால் இருபக்கமும் வயல்களும், ஆங்காங்கே குடிசை வீடுகளும் இருக்கும். இதே ரோட்டில் கிட்டத்தட்ட ஒரு மைல் தள்ளிப்  போனால் ரயில்வே கேட் இருக்கும். பல ரயில்கள் அந்த ஊரைத் தாண்டிப் போவதால் அடிக்கடி ‘கேட்’ மூடப்பட்டு திறக்கப்படும். ஆபீஸ் போகிறவர்கள்,  பள்ளிக்கூடம், கல்லூரிக்கு போகிறவர்கள், திரும்பி வருகிறவர்கள், ‘கேட்’ திறக்கும் வரை காத்திருக்க வேண்டும். அன்று வெள்ளிக்கிழமை  ‘‘பக்கத்திலே  இருக்கிற கோயிலுக்குப் போய் வரலாமா?’’ என்று என் நாத்தனார் கேட்க, ‘‘எனக்கு போறதிலே ஆட்சேபணை இல்லை.

ஆனால் சுடிதார் போட்டுக் கொண்டு உங்க ஊர் கோயிலுக்கு வரலாமா?’’ என்று நான் கேட்க, ‘‘சரி குழந்தைகள் பள்ளியிலிருந்தும், அவர்  ஆபீஸிலிருந்தும் வருவதற்குள் திரும்பி வந்து விடலாம், அண்ணா வீட்டை பார்த்துக் கொண்டிருக்கட்டும்’’ என்று சொல்ல இருவரும் கிளம்பினோம்.  கோயிலுக்கு போய்விட்டு இருவரும் வீடு திரும்பினோம். இன்னும் கொஞ்சம் தூரம் மட்டுமே இருந்தது வீட்டை நெருங்க. எங்களை உரசுவது போல  ஒரு கார் நின்றது. அதனுள்ளே டிரைவர் சீட்டில் ஒருவர், அதன் பக்கத்து சீட்டில் ஒருவரும், பின் சீட்டில் ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

பின் சீட்டில் இருந்தவர் இறங்கி ‘‘மேடம்! இந்த அட்ரஸில் உள்ள வீடு எங்கே இருக்கு என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்க, என் நாத்தனார் அந்த  சீட்டை வாங்கிப் பார்க்க, அதற்குள் காரிலிருந்து இருவர் இறங்கி என் நாத்தனாரின் தாலிச்சரடை பிடித்திழுக்க ஆரம்பித்தனர். நான் என் நாத்தனாரை  காப்பாற்ற ஒருவனின் முதுகில் பளாரென்று அடித்தேன். மூன்றாமவன் யாரும் வராமல் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தவன், என்  அடியினால் அவன் நிலைகுலைந்து போனதைப் பார்த்ததும், ஓடிவந்து என் கன்னத்தில் பளாரென்று அரைந்தான், நான் நிலைகுலைந்து போனேன்.

நான் தடுக்க முயல்வேனோ என்று என்னை கெட்டியாக அவன் பிடித்துக் கொண்டான். என்னிடம் அடி வாங்கியவன், டிரைவர் சீட்டில் போய் அமர்ந்து  யாராவது வந்தால், சடாரென்று ஓடுவதற்காக, காரை ஸ்டார்ட் பண்ணி ரெடியாக வைத்திருக்க என் நாத்தனாரோ, தாலிச்சரடை இழப்பதா, அதுவும்  எட்டு பவுன், முழு வேகத்துடன் அவள் கழுத்தை விட்டு கழட்டாதவாறு போராடிக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவன் கழட்டி எடுக்க, அவனுடைய கை  கட்டை விரலை கடித்தாள். அந்த விரல் துண்டாகி அவள் வாயில் பாதியும், அவன் வெட்டுண்ட விரலுடன் வேதனை தாங்காமல் கொட்டும்  ரத்தத்துடன் தாலிச்சரடை எடுத்துக் கொண்டான்.

தூரத்தில் ‘ரயில்வே கேட்’ திறக்கப்பட்டு சாரி சாரியாக  சைக்கிளிலும், பைக்கிலும் மக்கள் வர, என்னை விட்டு விட்டு காரில் ஏறிக் கொண்டு சிட்டாக  பறந்து விட்டனர். அப்பொழுது பைக்கில் வந்த அவள் கணவர் பார்த்து, வண்டியை நிறுத்தி ‘என்ன ஆயிற்று’ என்று கேட்க, நானும் அவளுமாக  நடந்ததை சொல்ல, என்னையும் அவளையும் பைக்கில் அமர்த்திக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனை வந்தடைந்தார். அந்த போலீஸ் ஸ்டேஷனில்  இருந்தவர்கள் எல்லாரும் ஆச்சர்யப்பட்டுப் போயினர்.

ஒரு பெண்ணால் கட்டை விரலை இப்படி  வாயில் மாட்டிக் கொள்வது போல கடிக்க முடியுமா? அவ்வளவு வலுவான பற்களா? என இன்ஸ்பெக்டர்  அசந்து போய் விட்டார். அங்கிருந்து அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு போன் பண்ணி, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறானா என்று பார்க்க  சொல்லி விட்டு எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஏதோ ஓர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவன், அங்கு டாக்டர் தன்னிடம்  அந்த மாதிரி ஒருவர் வந்திருப்பதாக போனில் சொல்வதைக் கேட்டு விட்டு, பாதி சிகிச்சையிலேயே அங்கிருந்து கிளம்பி விட்டான் என்பது பின்பு  தெரியவந்தது.

தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் என் நாத்தனார் கணவர் நகையைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.  ஒரு நாள் ஆவடியில் திருடர்கள் அடையாள அணிவகுப்பு  வைத்திருப்பதாக என்னையும், என் நாத்தனாரையும் அதில் திருடனை அடையாளம் காட்டச்  சொல்லி வரச் சொன்னார்கள். நான் தாம்பரத்திலிருந்தும், அவள் திருநின்றவூரிலிருந்தும் தன் கணவருடன் வந்திருந்தாள்.

சில நிமிடங்களே, அதுவும் பதற்றத்துடன் பார்த்த எங்களுக்கு ஆறு மாதம் கழித்து அடையாளம் காட்டச் சொன்னால் எப்படி காட்டுவது என்று  நினைத்து, எல்லார் கைகளையும் காட்டச் சொன்னோம். எல்லோர் கைகளிலும் கட்டை விரல் இருந்தது. எல்லோர் முகமும் புதிதாகவே இருந்தது.  திடீரென்று என் நாத்தனார், ‘இவன்தான் என் நகையை திருடியவன்’ என்று சொல்ல, எனக்கும் ஆச்சர்யமாக போய் விட்டது. அங்கிருந்த போலீஸ் உயர்  அதிகாரிகளும் ஆச்சர்யமடைந்து எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று என் நாத்தனாரிடம் கேட்டனர்.

‘‘அவனுடைய  கால் கட்டை விரலை எடுத்து, பாதி கை கட்டை விரலுடன் இணைத்துள்ளனர். அதில் சின்ன சின்ன முடிகள் இருக்கிறது பாருங்கள்’’  என்று சொல்ல, காலில் ஷூ போட்டிருந்ததால் கட்டை விரல் இல்லாதது தெரியவில்லை. அந்த உயர் அதிகாரிகள் என் நாத்தனாரிடம், ‘‘உங்கள் பல்  மிகவும் உறுதியானதென்றால், கண் மிகவும் கூர்மையானது’’ என்று பாராட்டினார்கள். அந்த திருடன்  திருடிய நகையை ஒரு சேட்டிடம்  விற்றிருக்கிறான், அது பல கை மாறி, கடைசியில் அவளுக்கு கிடைத்தது பென்சில் அளவுக்கு ஒரு தங்க குச்சி மாதிரி தான்.

- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.