‘காலா’ என் வாழ்வின் திருப்புமுனை



நடிகை ஈஸ்வரிராவ்

1990களின் தொடக்கத்தில் “கவிதைபாடும் அலைகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஈஸ்வரிராவ். இயக்குநர்  பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில் ஊட்டியின் அழகோடு ஈஸ்வரிராவின் அழகும் போட்டியிடுவதை அப்படத்தின் பாடல்  காட்சிகளில் காணலாம். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர‌ நடிகையாகவும் நடித்துவந்தவர். சினிமாவில்  நடித்திருந்தாலும் சின்னத்திரையையும் விட்டுவைக்கவில்லை. சின்னத்திரை மூலம் பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

தனக்கென தனி அடையாளத்தை பதித்து வெற்றி பெற்றவர் மீண்டும் “காலா” திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்.  காலா திரைப்படத்தில் “சண்ட தானே போடுவாரு போடுவாரு” என்று இவர் பேசும் வசனம் டீசரிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படத்தில்  இவர் அறிமுகமாகும் காட்சியில் ஒரே ஷாட்டில் பலரிடமும் பேசிக்கொண்டே வளைய வரும்போது பேசும் அந்தப் பேச்சும் அந்த வட்டார வழக்கும்  அட்டகாசம். ரஜினியோடு ரொமான்ஸ் செய்வதிலாகட்டும், முன்னாள் காதலியைப் பார்த்து வரச் சென்ற கணவரிடம் ‘அம்பையில படிக்கும்ப்போது  பறையடிக்கிற பெருமாள் என்னையே சுத்திசுத்தி வருவான்.

நீ மட்டும்தான் பார்ப்பியா? எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடு. நானும் ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன்’ என்று கேட்பதிலாகட்டும், ஈஸ்வரிராவ்  நம் மனசில் ஒட்டிக்கொள்கிறார்.  அவருடனான உரையாடலிலிருந்து...“வெள்ளித் திரையில் நடிகைகளுக்குள் இருக்கும் போட்டிக் களத்தில் இருக்க  வேண்டாம் என்று நானே நினைத்து சிறிது காலம் விலகி சின்னத்திரைக்கு சென்றேன். சின்னத் திரையில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன‌.  நானும் ஒரு நடிகையாக வெளிஉலகத்திற்கு அறிமுகமானது சின்னத்திரையால்தான்.

பொருளாதாரரீதியாக எனக்கு கை கொடுத்ததும் சின்னத்திரைதான். நான் சின்னத்திரைக்கு வந்த போதுதான் பெரிய பெரிய கதாநாயகிகள்  சின்னத்திரைக்கு வந்தனர். இங்கும் போட்டிகள் இருந்தன‌. ஆனாலும் பல்வேறு போட்டிகளை கடந்து சுமார் 10 ஆண்டுகளாக சின்னத்திரையில்  ஹீரோயினாக இருக்க முடிந்தது. மக்கள் என்னுடைய நடிப்பை விரும்பி ஆதரவு கொடுத்தார்கள். என்னால் இங்கு வெற்றி பெற முடிந்தது. இடையில்  பல பேர் என்னை சந்தித்து கதைகள் கூறியிருக்கிறார்கள்.

சில கதைகள் பிடித்திருந்தன‌, சில கதைகள் பிடிக்கவில்லை.. குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காகவும் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட  வேண்டும் என்று எல்லா திரைப்படங்களையும், பல‌ சின்னத்திரை தொடர்களையும் தவிர்த்து வந்தேன். சினிமாவைப் பொறுத்தவரை, 13  ஆண்டுகளுக்குப் பிறகு நான் நடிக்க வந்தது இயக்குநர் இரஞ்சித்தின் ‘காலா’வில்தான். இரஞ்சித் சார் “ரஜினி சாரை வைத்து ஒரு படம் எடுக்கிறேன்,  அதில் ஒரு ரோல் நீங்கள் நடிக்க வேண்டும்” என்று சொன்னார். அவர் அந்த கதாபாத்திரத்துக்காக‌ பல பேரை பட்டியலிட்டு வைத்திருந்தார்.

‘நீங்க ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறீர்கள். இதில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டேன். ‘இந்த கதாபாத்திரத்திற்கு  நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள்’ என்று சொன்னார். ‘நீங்க கொஞ்சம் வெயிட் போடணும், சில விஷயங்களை மாத்தணும்’ என்றார், ‘எல்லாம் சரிங்க  எனக்கு என்ன கதாபாத்திரம்?’ என்று கேட்டேன். ஆனால் அதைச் சொல்லவில்லை. படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு  என்ன ரோல் என்று சொன்னார். சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம்.

நான் இந்த வாய்ப்பை எதிர்பார்க்கவே இல்லை. அவர் சொன்னதை கேட்டதும் இன்று வரை என்னால் அந்த விஷயத்தை நம்பமுடியவில்லை. சொல்ல  முடியாத மகிழ்ச்சி எனக்கு. என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் நடித்த எந்த படங்களுக்கும் ஈடு கொடுக்க முடியாத படம் காலாதான். ரஜினி  சாரோட இணைந்து நடிப்பதற்கு எத்தனையோ ஹீரோயின்கள் தயாராக இருக்கிறார்கள். சிலர் கனவு காண்கிறார்கள். அந்த வாய்ப்பு இத்தனை  ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு கிடைத்ததற்கு காரணம் இரஞ்சித்தான்.

ரஜினி சாரோட நடிச்ச ஹீரோயின்கள் பட்டியலில் என்னுடைய பெயரும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம்  நேர்த்தியாக வருவதற்கு நான் எவ்வளவு உழைத்தேனோ அதே அளவில் இரஞ்சித் உழைத்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் படம்  பார்க்கும்போது எங்களுக்கு தெரிந்தது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் என்று ஒன்று இருந்தால் அது இரஞ்சித் குழுவுடனும்  சூப்பர் ஸ்டாருடனும் இணைந்து வேலை செய்ததுதான். ரஜினி சார் படபிடிப்பின் போது எல்லோருடனும் நன்றாகப் பேசுவார்.

“உங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரொம்ப நல்ல கேரக்டர். நல்லா பண்ணுங்க. நீங்க தெலுங்குதானே? பாலு மகேந்திராவோடு ஒர்க் பண்ணி  இருந்திருக்கீங்க‌தானே?” என்று கேட்டார். ஒவ்வொரு டேக் முடிந்ததும் ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பார். படம் முடிச்ச பிறகு ரொம்ப நல்லா  பண்ணியிருக்கீங்கனு சொல்லி வாழ்த்து தெரிவித்தார். இப்போ பாலா சாரோட படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். தமிழ் ‘அர்ஜுன் ரெட்டி’  திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘காலா’ படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்று சொல்லுவேன்” என்று  சிலாகிக்கிறார்.

ஜெ.சதீஷ்