சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய பயணம்



இளைஞர்கள் என்றால் ஊர்சுற்றிக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடித்துக் கொண்டும் இருப்பவர்கள் என்ற கருத்து பரவலாகக்  காணப்பட்டாலும் தங்களது ஓய்வு நேரத்தை ஊரின் வளர்ச்சிக்காக செலவிடுகிறார்கள் ‘புதிய பயணம்’ அமைப்பின் நண்பர்கள். தங்களின் புதிய பயணம்  குறித்து விளக்குகிறார் அக்குழுவில் ஒருவராகச் செயல்படும் ராகவன். “நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டாலும் இளைஞர்களுக்கு  சொந்த ஊரின் மீது உள்ள பற்றும், பாசமும் குறையாது.

சொந்த ஊரை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  இலுப்பைக்குடி, பேரளி, சா.குடிக்காடு, தெற்கு மாதவி, அனைப்பாடி, சரடமங்கலம், அயினாபுரம், சாத்தனூர், பெருவளப்பூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட  பல ஊர் இளைஞர்கள் சேர்ந்து ‘புதிய பயணம்’ என்ற பெயரில் குழுவாக இணைந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்பு, அரியலூர் புத்தகத் திருவிழா  திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அப்துல்கலாம் வந்து சென்ற சில நாட்களிலேயே இறந்துவிட்டார்.

அவரின் நினைவாக ஊருக்கு ஊர் மரக்கன்றுகளை நட்டோம். இந்த நிகழ்வு முதற்கொண்டு எங்களின் ‘புதிய பயணம்’ தொடங்கியது. பொங்கல், தீபாவளி  போன்ற பண்டிகை தினங்களின்போது மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பழக்கத்தை பரவலாய்க் கொண்டு சென்றோம். அதன் பின்னர் தலைவர்களின்  பிறப்பு மற்றும் நினைவு தினங்களிலும், நண்பர்களின் பிறந்தநாள், வேலை கிடைத்ததின் நினைவாக, ஊர்த் திருவிழா நினைவாக மற்றும் பல  தனிப்பட்ட மகிழ்ச்சி நினைவாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதைப் பின்பற்றி வருகிறோம்.

வெயிலையும், மழையையும் தாங்கி வலுவாக வளரக்கூடிய மற்றும் பல்லுயிர் சூழலுக்கு உகந்த வேம்பு, புங்கன், இலுப்பை, பூவரசு, அத்தி, அரசு,  ஆலம், நாவல், மகிழம், வாகை போன்ற மண்ணின் மரங்களையே நடுகின்றோம். மேலும், மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம், விதைகள் சேகரிப்பு,  பல்லுயிர் சூழல் போன்றவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றோம்.

விதைப்பரவலை ஏற்படுத்தும் விதமாக நாட்டுக் காய்கறி விதைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறு சிறு பொட்டலங்களாக நாட்டு  விதைகளை இலவசமாக மக்களிடம் கொடுத்து விதைகளைப் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது, விதைப்பந்துகள் செய்து தரிசு நிலங்களில்  சாலை ஓரங்களில் வீசுவது, அருகாமையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் இதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாணவர்கள்  உதவியுடன் விதைப்பந்துகள் செய்வது, அவ்வாறு செய்கின்ற விதைப்பந்துகளை அருகில் உள்ள சாலை ஓரங்களில், தரிசு நிலங்களில் வீசுவது என  நம் நாட்டு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகின்றோம்.

தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிற பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. நிலத்தடி நீரைக் காப்பதோடு, அதிக  வருஷம் தங்கி வளரக்கூடிய மரம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் முளைத்து காணப்படும் பனை விதைகள், தங்களின் பனை  வளர்ப்பு ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது என்கிறார்கள் புதிய பயணம் இளைஞர்கள். மின்மோட்டார்களின் வருகைக்கு முன்னர் மக்களின் தண்ணீர்  தேவையை பெரிதும் பூர்த்தி செய்தது பொதுக் கிணறுகளே. இன்றும் சில கிணறுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன‌.

இருந்தபோதிலும் பல கிணறுகள் பராமரிப்பின்றி மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் காணப்படுகிறது. சென்னையில் வர்தா புயலின் போது மின்சாரம்  இல்லாமல் மக்களின் தண்ணீர் தேவையைப் பெரிதும் பூர்த்தி செய்தது கிணறுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக் கிணறுகளைப் போற்றிப்  பாதுகாப்பது நமது கடமை. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி (3), தெற்கு மாதவி (1), இலந்தங்குழி (1) ஆகிய ஊர்களில் பொதுக்கிணறுகளை  புதுப்பித்தனர். மேலும் அனைப்பாடியில் பொதுக்கிணற்றை தூர் வாரி புதுப்பித்து பராமரித்து கொண்டிருக்கிறார்கள் இந்த அமைப்பினர்.

ஒவ்வொரு ஊரிலும் ஏரிகள், ஆறுகள், குளங்கள், ஊரணிகள் என்று வெவ்வேறு பெயர்களில் மக்களின் நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தன.  மனிதர்களுக்கு மட்டுமின்றி ஆடுகள், மாடுகள், பறவைகள் மேலும் பல உயிரினங்களின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்தது ஏரிகளே? அத்தகைய  ஏரிகள் தற்போது ஆக்கிரமிப்புகளாலும், சீமைக் கருவேல மரங்களாலும் மறைந்து காணப்படுகின்றன‌. பேரளியில் உள்ள ஊர் ஏரி, கல்லேரி மற்றும்  எடியூர் பாதையில் உள்ள குளத்தைச் சுற்றியுள்ள சீமைக் கருவேல மரங்கள் இளைஞர்களின் சொந்த செலவில் அகற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு  வரப்படுகிறது.

அவ்வப்போது ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் சிலவற்றை சீர் செய்தும், மழைக்காலங்களில் வாய்க்கால்களில் ஏற்படுகின்ற அடைப்புகளை  எடுத்துவிட்டு ஏரிகளுக்கு நீரைக்கொண்டு சேர்க்கின்றனர். நெகிழி என்னும் பிளாஸ்டிக் பொருட்களால் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் ஏன், கடல்வாழ்  உயிரினங்களுக்கும் ஏற்படும் தீங்குகள் கொஞ்சமில்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டால் எளிதில் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.  உணவகங்களில் நெகிழி இலை, நெகிழிப்பைகள் போன்றவற்றை குறைப்பதற்கான விழிப்புணர்வையும், அதன் தீமைகளையும் மக்களிடம் கொண்டு  சேர்க்கின்றனர்.

நெகிழிப்பைகள், நெகிழி இலைகள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் உதவியோடு  கொண்டு செல்வதோடு மட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழியைத் தடைசெய்ய வேண்டி தொடர்ந்து மனுக்கள்  அளித்துக்கொண்டு இருக்கின்றனர். நெகிழிப்பைகள் பயன்பாட்டிற்கு மாற்றாக பழமை முறைப்படி துணிப்பைகளை உபயோகிக்க மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தலைவர்களின் நினைவாக, ஊர் திருவிழாக்கள் மற்றும் தனியாக நெகிழி விழிப்புணர்வு பேரணிகள்போதும்  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பைகளை மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

இதுவரை 25,000க்கும் மேற்பட்ட துணிப் பைகளை (1 பை - 11 ரூ) தங்களது சொந்த செலவில் வாங்கி இலவசமாக விநியோகம் செய்திருக்கிறார்கள்.  மாற்றத்தை எதிர்பார்க்கும் புதிய பயணம் இளைஞர்கள் இக்குழுவைச் சேர்ந்த நண்பர்கள் நெகிழிப்பைகள் உபயோகத்தைக் குறைத்துக்கொண்டு  வெகுவாக துணிப்பைகளையே பயன்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய பயண நண்பர்களுக்கும் ஓர் இணைப்பிரியா சங்கிலித்  தொடர்பு இருந்து வருகிறது. பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு விழிப்புணர்வு கருத்து மக்களைச் சென்றடையும் விதம் சிறப்பாக  இருக்கும்.

பல கேள்விகளை எழுப்பும் சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களின் ஆர்வங்களைப் பார்க்கும்போது ஒரு விழிப்புற்ற சமூகம் வளர்ந்து வருவதை உணர  முடியும். முதுபெரும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தி புத்தகங்களை  பரிசளிப்பது, மேலும் அன்றைய தினங்களில் பள்ளி வளாகத்தினுள் மரக்கன்றுகளை மாணவர்கள் கையில் நடவும் வைக்கின்றனர். மாணவர்கள்  மரங்களை வளர்க்கும் ஈடுபாட்டைப் பார்க்கும்போது நம்பிக்கை துளிர் வேகமாக துளிர்ப்பதாக உணர்கின்றோம்.

அரசுப் பள்ளிகளின் வளாகத்தினுள் மரக்கன்றுகள் நட்டு மரம் வளர்க்கும் வழக்கத்தை மாணவர்களிடம் விதைப்பதோடு நன்கு பராமரிக்கும்  மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணிகள் நடத்துவதோடு அரசுப்  பள்ளிகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். மேல்நிலைப் பள்ளி கல்வியை முடித்த பிறகு கல்லூரிப் படிப்பைப் பற்றிய  விழிப்புணர்வுகளும், சமூக ஆர்வலர்களின் துணையோடு ஏற்படுத்தப்படுகிறது.

ஊர் திருவிழாக்களின்போதும், மக்கள் கூடுகின்ற இடத்திலும் சில முக்கிய விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துணிப் பதாகைகள் மூலம் மக்களிடம்  கருத்துக்களை எடுத்துக்கூறி உறுதிமொழி ஏற்று துணிப் பதாகைகளில் கையெழுத்தும் இடுகின்றனர். மரம் வளர்ப்பது, பனை காப்பது, நெகிழி தடுத்து  துணிப்பை பயன்பாடு, ஏரிகளின் முக்கியத்துவம், மேலும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் மருைதயாற்றைச்  சீரமைப்பது போன்றவை பற்றிய விழிப்புணர்வுகளுக்கு உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டிருக்கிறார்கள். ‘உலக தண்ணீர் தினம்’ அன்று தண்ணீர் தேவை  சேகரிப்பு, சிக்கனம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பனை விழிப்புணர்வு பேரணி, அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை பேரணி, நெகிழி ஒழிப்பு பேரணி, கல் மரம் காப்போம் பேரணி ( வரலாற்று சிறப்புமிக்க  சாத்தனூர் கல்மரம் காக்க வேண்டும் என்பதற்கான பேரணி), இயற்கை விவசாய விழிப்புணர்வு பேரணி, நாட்டு விதைகள் முக்கியத்துவம் பேரணி,  இயற்கை விவசாயம் விழிப்புணர்வு முகாம்கள், விழிப்புணர்வு பேச்சுகள் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு, குறும்படங்கள் திரையிடப்பட்டும்  காண்பிக்கப்பட்டது. கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறுவதோடு அவ்வப்போது நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில்  பங்கேற்கிறார்கள்.

அந்தந்த ஊர் தேவைகளைக் கூறி உள்ளூர் நண்பர்கள் மனுக்கள் அளித்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். வரத்து வாய்க்கால் சீரமைப்பு,  சாலையோரம் மரக்கன்றுகள் நடுதல், ஏரி, குளம் பாதுகாப்பு, சாலை சீரமைப்பு, சாக்கடை வாய்க்கால் சீரமைப்பு, மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணி  பலகைகள் அகற்ற வேண்டுவதென பல கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்து தீர்வை நோக்கி காத்திருக்கிறார்கள். சாலையோர  மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் வைப்பதால் மரங்கள் பாதிக்கப்படும்.

எனவே, சாலையோர மரங்களில் இருக்கும் பதாகைகளை கிழித்தும், ஆணிகளைப் பிடுங்கியும் காயம் பட்ட இடத்தில் மஞ்சள் மற்றும் சாணம் இட்டு  பூசி மரங்களைப் பாதுகாக்கின்றனர்” என்கிறார். சமூக வலைத்தளங்கள் இவர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கின்றது. நிகழ்வு பற்றி முன்னரே  அறிவிப்பு விண்ணப்பம் (Events) உண்டு செய்வது, விடுமுறையில் நண்பர்கள் ஒன்றிணைந்து நிகழ்வுகளை நன்முறையில் நடத்தி முடிக்கின்றனர்.  செய்கின்ற செயல்கள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ஆவணப்படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்களின் மூலம் பிற மாவட்ட சமூக ஆர்வலர்களின் அறிமுகமும், தெரியாத விஷயங்களை கலந்தாலோசிக்கும் வாய்ப்பும்  கிடைக்கின்றது என்கின்றனர் இந்தத் துடிப்புள்ள இளைஞர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது  ‘சாத்தனூர் கல்மரப் பூங்கா’. பூங்காவின் சிறப்புகளை மக்களிடமும், முகநூலிலும் தொடர்ந்து விவரித்து வருகின்றனர். பூங்காவிற்கு வரும் சாலை  சீரமைப்பு, பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றிற்கு தொடர்ந்து மனு அளித்தவண்ணம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் இந்த சமூகக்  காவலர்கள்.

இதுபோன்ற நிகழ்வுகளோடு அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி, பள்ளி மாணவர்களுக்கு ஆளுமைப் பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு  பிரத்யேக பயிற்சி, நூலகங்கள் இல்லாத ஊர்களில் மக்கள் படிப்பகங்கள் ஏற்படுத்துவது, அழிந்து கொண்டிருக்கும் புவியியல் வரலாற்றுப் பெருமைகளை  மீட்பதற்கான விழிப்புணர்வு, சுமைதாங்கிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது என அடுத்தடுத்தப் பணிகளை நோக்கி பயணிக்கிறார்கள் இந்தப்  புதிய பயணிகள்.

‘இருளில் ஒளி தேடி பணியைச் செய்வதைவிட, பகலில் பணியை முடிப்பதே சிறந்த தீர்வாகும்’. செயற்கையாக சுற்றுச்சூழலுக்கு மாற்று தேடுவதைவிட  இருக்கின்ற இயற்கையைக் காத்து இன்பமுற்று வாழ்வதிலே மகிழ்வு கிடைக்கும் என்ற கருத்துக்களுடன் தொடர்கிறது சுற்றமும் சூழலும் காக்கும்  இந்தப் புதிய பயணம். பிற மாவட்டங்களிலும் இதே போன்று ஆண்களும் பெண்களுமாக இளைஞர்கள் இணைந்து முயன்று பார்க்கலாம்.

தோ.திருத்துவராஜ்