சோர்வு நீங்க சுண்டைக்காய்



வாசகர் பகுதி

சுண்டைக்காய் உருவத்தில் சிறியது தான். அதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. லேசான கசப்புச்சுவை கொண்டது. சமைத்துச்  சாப்பிட்டால், சோர்வு, சுவாசக் கோளாறு நீங்கும். வயிற்றுக்கோளாறு அகலும். வயிற்றுப்புண் ஆறும். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி இவை  யாவும் மருத்துவக் குணமுடையவை.ரத்தக் கசிவைத் தடுக்கும். கணையம், கல்லீரல் நோய்களுக்குச் சிறந்த மாமருந்து. காட்டுச் சுண்டை, நாட்டுச்  சுண்டை என இருவகை உண்டு; மலைக்காடுகளில் காணப்படும் மலைச்சுண்டை வற்றல் செய்ய உதவுகிறது.

நாட்டுச் சுண்டையை உண்பதால் மலச்சிக்கல் நீங்கி, அஜீரணக் கோளாறுகள் தீரும். முற்றிய சுண்டைக்காயை மோரில் போட்டு வற்றலாக்கி, குழம்பு  செய்தும், எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம். பொடியாக்கிச் சோற்றுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயால் உண்டாகும் கை,  கால் நடுக்கம், மயக்கம் ஆகியவை நீங்கும். சுண்டைக்காயை நறுக்கி பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து  சூப் செய்து அருந்தி வந்தால் இருமல், மூலச்சூடு போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும்.
- இல.வள்ளிமயில், மதுரை.

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்

இரவில் சிறிது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை நீராகாரத்தில் போட்டுக் குடியுங்கள். எப்படிப்பட்ட சூடும் தணிந்து விடும். உடல் பருக்கும். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்தால் கண் குளிர்ச்சியாகவும், தலைமுடி கருப்பாகவும், பளபளப்பாகவும் ஆகிறது. கூந்தலும்  நன்கு வளரும். புழுங்கலரிசியுடன் கொஞ்சம் வெந்தயத்தை ஊற வைத்து இட்லியோ, தோசையோ ஊற்றிச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி  பெறும்.

பச்சை வெந்தயத்தை நல்ல கெட்டித் தயிரில் போட்டு மென்று சாப்பிட சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் இவற்றிற்கு மிக நல்ல மருந்தாகும். வெந்தயத்தை வறுத்தப் பொடி செய்து காப்பி தயார் செய்து சாப்பிட உடலுக்கும் பலத்தைத் தந்து சூட்டையும் குறைக்கும். அத்துடன் வறுத்த முழு  கோதுமையையும் போடலாம். இரண்டும் சமபங்கு போட வேண்டும். வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கஞ்சி வைத்து பால் ஊற்றி சாப்பிட்டால்  ரத்த நோய்கள், ரத்தம் குறைந்து சரீரம் வெளுத்துப் போதல், மூளை முதலிய நரம்புகளின் பலகீனம் இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.